யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் அமைக்கப்பட்டிருந்த உயிரிழந்தவர்களிற்கான நினைவுத்தூபியை யாழ்ப்பாண பல்கலைகழக துணைவேந்தரே அகற்றினார். ஏனெனில் இது நாட்டின் வடக்கு மற்றும் தெற்கின் ஒற்றுமைக்கு தடையாக இருக்கும் என தெரிவித்துள்ளார் இலங்கை பல்கலைகழங்களின் மானிங்களின் ஆணைக்குழு தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க.
சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட அமைப்பு அது. காலத்திற்கு காலம் அதில் மாற்றம் செய்யப்பட்டதாக அறிந்தோம். அது வடக்கு தெற்கு ஐக்கியத்திற்கு தடையாக இருக்கும். கடந்த கால கசப்பான அனுபவங்களை மாணவர்களிற்கு நாம் நினைவூட்ட விரும்பவில்லை.
அங்கு தெற்கிலிருந்து செல்லும் சிங்கள மாணவர்களும் கல்வி கற்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.
இதேவேளை, யாழ்ப்பாண பல்கலைகழக துணைவேந்தர் சி.சிறிசற்குணராஜா இந்திய ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவித்த போது,
“அப்போதிருந்து (2019), அங்கீகரிக்கப்படாத கட்டமைப்பை அகற்றுமாறு பல்கலைக்கழக நிர்வாகத்திடம் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். உயர் அதிகாரிகளிடமிருந்து எனக்கு பல அறிவுறுத்தல்கள் கிடைத்தன, பல்கலைக்கழக பேரவை, பொறியியல் மற்றும் பராமரிப்புத் துறைகளுடனான பல கூட்டங்களில் இதைப் பற்றி விவாதித்தோம், ”என்று பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ். ஸ்ரீசத்குனராஜா கூறினார்.
உயர் அதிகாரிகள் யார் என்று கேட்கப்பட்டதற்கு: “பாதுகாப்பு, உளவுத்துறை, கல்வி அமைச்சகம், எல்லோரும். நான் ஒரு நிர்வாகப் பொறுப்பைச் செய்யும் ஒரு குடிமகன். சில நேரங்களில், எனது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் நான் முடிவுகளை எடுக்க வேண்டும், ”என்று அவர் கூறினார்.
“எனவே, ஒரு மாதத்திற்கு முன்னர் நான் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு பொறுப்பை ஒப்படைத்தேன், குறிப்பிட்ட திகதியைக் கொடுக்கவில்லை. அவர்கள் அதை நிறைவேற்றியுள்ளனர், அவ்வளவுதான்” என்று அவர் கூறினார்.