மண் கடத்தல் காரர்களிற்கு எதிராக மக்கள் போராட்டம்: கடத்தல்காரர்களிற்காக களமிறங்கி குழப்பிய பிக்கு!

மட்டக்களப்பு றிதிதென்னப் பகுதியில் ஓமடியாமடு கிராம மக்களினால் நேற்று வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்திற்கு குழப்பம் விளைவிக்கும் நடவடிக்கையில் அப்பகுதியின் தேரர் ஈடுபட்டார்.

அத்துடன் வாழைச்சேனை பொலிசார் மற்றும் இராணுவத்தினரும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டோர்களை கொரோனா தொற்றினை காரணம் காட்டி குறித்த இடத்தினை விட்டு கலைந்து செல்லும்படி பணித்தனர்.

இதேவேளை ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துக் கொண்டிருந்த மக்களை திடீரென உள் நுழைந்த ஓமடியாமடு சுதுகல பன்சாலையின் கடவத்த மடுவே சுபோதாலங்கார தேரர் மண் ஏற்றும் நடவடிக்கையில் ஈடுபடும் கிண்ணையடி வாழைச்சேனையைச் சேர்ந்த பத்மன் எனும் நபருக்கு ஆதரவு தெரிவித்தும் நியாயப்படுத்தியும் குழப்பம் விளைவித்ததுடன் அச்சுறுத்தலும் விடுத்தார்.

தேரர் குறித்து மக்கள் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்துகின்றனர்.

வாகரை பிரதேச செயலாளர் பிரிவின் ஓமடியாமடு பிரதேசத்தில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தோர்களால் இரவு பகலாக மணல் ஏற்றும் நடவடிக்கை இடம்பெற்று வருகிறது. இதன்போது மணல் ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களினால் ஓமடியாமடு பிரதான வீதியானது சேதமடைவதாகவும் இதனால் தங்களது போக்கு வரத்தில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்து இவ் கவனயீர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டனர்.

றிதிதென்ன கொழும்பு வீதியில் ஒன்று கூடிய மக்கள் மணல் ஏற்றுவதை நிறுத்தக் கோரி கோஷங்களை எழுப்பியும் சுலோகங்கள் எழுதிய பதாதைகளை கையில் ஏந்தியவாறும் இவ் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஓமடியாமடு மீள் குடியேற்ற கிராமத்திற்கான வீதியானது றிதிதென்னயில் இருந்து சுமார் 7 கிலோமீற்றர் துரமாகும். நீண்டகாலமாக செப்பனிடப்படாமல் காணப்பட்ட இவ் வீதியினை அண்மையில் அரசின் 10 இலட்சம் வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கிறவல் இடப்பட்டு புனரமைப்பு செய்யப்பட்டது.

எனினும், குறுகிய காலத்திலே இவ் வீதி சேதமடைந்ததாக தெரிவிக்கின்றனர். கடந்த 3.1.2021 ஆம் திகதி வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் மணல் அகழ்வு பணியில் ஈடுபடுவோர்களுக்கு எதிராக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது. அனால் அதற்கான விசாரணைகள் இது வரை இடம்பெறவில்லையென தெரிவிக்கின்றனர்.

4.1.2021 ஆம் திகதி வாகனங்களை செல்போனில் போட்டோ எடுத்த மத போதகர் தாக்கப்பட்டு அவரது தொலைபேசியும் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது. போதகர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் தாக்கியோர்களை பொலிசார் இது வரை கைது செய்யவில்லை.

சட்டவிரோத செயற்பாட்டிற்கு, சம்பந்தப்பட்ட பல தரப்பினர்  உடந்தையாகவுள்ளதாக பிரதேசவாசிகள் குற்றம் சுமத்துகின்றனர்.

இதேவேளை நேற்று கவனயீர்ப்பில் ஈடுபட்ட பொதுமக்களை மணித்தியாலக் கணக்கில் புலனாய்வு பிரிவிணர் விசாரணைகளை மேற்கொண்டதுடன் அச்சுறுத்தலும் விடுத்து எல்லோருடைய பெயர்களையும் பதிவு செய்துள்ளனர். இதனால் அச்சமடைந்த நிலையில் குறித்த கவனயீர்ப்பில் ஈடுபட்டோர் காணப்படுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here