நெல்லியடியில் பாடசாலை, அதிபர், ஆசிரியர் வீடுகளில் நேற்று ஒட்டப்பட்ட தனிமைப்படுத்தல் அறிவிப்பு அகற்றப்பட்டது!

கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் நேற்று தனிமைப்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பாடசாலை, இன்று தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கப்பட்டுள்ளது. அத்துடன், பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியரின் வீட்டில் ஒட்டப்பட்ட தனிமைப்படுத்தல் அறிவித்தலையும் சுகாதார பிரிவினர் கிழித்து அகற்றியுள்ளனர்.

கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரியினால் நேற்று (7) மதியம் 12.55 அளவில், கரவெட்டி திரு இருதயக்கல்லூரி தனிமைப்படுத்தப்பட்டது.

பாடசாலையில் தரம் 5 மாணவர்களிற்கு கற்றல் செயற்பாடு இடம்பெற்றுள்ளது. வகுப்பு முடிந்த பின்னர், வாசலில் நின்ற ஆசிரியர், ஒவ்வொரு மாணவர்களாக வெளியே அனுப்பிக் கொண்டிருந்துள்ளார்.

பிள்ளைகளை ஏற்ற வந்த பெற்றோர் சிலர் முகக்கவசம் அணி்ந்திருக்கவில்லை.

அந்த வழியே சென்ற கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி இதை அவதானித்து, உடனடியாக பாடசாலையை தனிமைப்படுத்தி அறிவித்தல் ஒட்டினார்.  அதே சமயத்தில் உடனடியாகவே பாடசாலை அதிபர் மற்றும் வகுப்பு நடத்திய ஆசிரியரின் வீடுகளிலும் தனிமைப்படுத்தல் அறிவித்தல்கள் ஒட்டப்பட்டன.

அது அதிபர்கள் மட்டத்தில் சலசலப்பை உருவாக்கியுள்ளது. பாடசாலைகள் அடுத்த சில தினங்களில் ஆரம்பிக்கவுள்ள நிலையில், வடமராட்சியில் பல பாடசாலைகளில் தரம் 5 மேலதிக வகுப்புகள் நடந்து வரும் நிலையில் தமது பாடசாலையை தனிமைப்படுத்தியதற்கு பாடசாலை நிர்வாகம், கல்வி அதிகாரிகளிடம் அதிருப்தியை வெளியிட்டிருந்தது.

அடுத்த சில தினங்களில் பாடசாலை நடவடிக்கைகள் ஆரம்பிக்கவுள்ள நிலையில், இந்த விவகாரம் சர்ச்சையை உருவாக்கலாமென்பதால், கல்வி அதிகாரிகள், சுகாதாரத்துறையினருடன் நடத்திய கலந்துரையாடலையடுத்து, தனிமைப்படுத்தல் அறிவித்தல்களை சுகாதாரத்துறையினர் விலக்கியுள்ளனர்.

இன்று காலை 11.30 மணியளவில் தனிமைப்படுத்தல் அறிவித்தல்கள் விலக்கப்பட்டுள்ளன.

நேற்று தனிமைப்படுத்தப்பட்டு, இன்று அறிவித்தல்கள் அகற்றப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here