செம்பியன்பற்று வடக்கில் தனிப்பனை கிராமத்தை பிரிப்பதற்கு எதிர்ப்பு!

வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று வடக்கு கிராம சேவகர் பிரிவிலிருந்து தனிப்பனை எனும் கிராமத்தை உருவாக்கி அதில் தனியான கிராம அபிவிருத்தி சங்கம் ஒன்றினை உருவாக்குவதற்க்கு பிரதேச செயலகம் நடவடிக்கைகள் மேற்கொள்வதாகவும், அப் பொதுக்கூட்டம் நாளை இடம்பெற ஏற்பாடாகியிருந்த நிலையில் அதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று பிரதேச செயலரை கோரி இன்று காலை வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் முன்பாக செம்பியன்பற்று வடக்கு கிராம மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.

அத்துடன் பிரதேச செயலகத்திற்க்கு மகஜர் ஒன்றினையும் கையளித்திருந்தனர். இம் மகஜரை பிரதேச செயலர் மற்றும் உதவி பிரதேச செயலர் வேறு பணிகள் காரணமாக வெளியே சென்றுள்ளமையால் அதன் நிர்வாக உத்தியோகத்தர் பெற்றுக்கொண்டார்.

இதே வேளை தமக்கு தொடர்ந்தும் அநீதி இடம் பெறுவதாலேயே தாம் தனியான கிராம அபிவிருத்தி சங்கம் ஒன்றினை உருவாக்கும் நடவடிக்கைகளை சட்ட ரீதியாக மேற்கொண்டு வருவதாகவும்் ஏற்கனவே தனியான விளையாட்டுக்கழகம், ஆலய நிர்வாகம் போன்ற அமைப்புகள் உள்ளதாகவும் செம்பியன்பற்று வடக்கின் தனிப்பனை கிராம வாசிகள் தெரிவிக்கின்றனர்.

இதே வேளை இது தொடர்பில் பிரதேச செயலகத்திடம் கருத்தை பெற முயன்றபோதும் பிரதேச செயலர், மற்றும் உதவி பிரதேச செயலர் ஆகியோர் கடமை நிமித்தம் வெளி பிரதேசங்களுக்கு சென்றுள்ளமையால் பொறுப்பிலிருந்த நிர்வாக உத்தியோகத்தர் எமது செய்தி சேவைக்கு பதிலளிக்க மறுத்துள்ளார்.

மேலும் சம்பவ இடத்திற்க்கு வந்த பளை பொலிசார் கொரோணா நிலமை காரணமாக அனைவரையும் கலைந்து செல்லுமாறு மிரட்டியிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here