பிசிஆர் சோதனைக்கு ஓடி ஒளிந்த அதிபர்கள், ஆசிரியர்கள்: பாடசாலை வர கட்டுப்பாடு!

வவுனியா வடக்கு கல்வி வலயத்திற்குட்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு இன்றும் நாளையும் புளியங்குளம் இந்துக்கல்லுாரியில் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்வதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் இப்பரிசோதனைகளில் கலந்து கொள்ளும் ஆசிரியர்கள், அதிபர்கள் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றனர்.

குறித்த கல்வி வயலத்திற்குட்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்பட்டவர்கள் மட்டுமே பாடசாலைகளுக்குள் செல்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள். ஏனையவர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்கள் என வவுனியா வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி வி .திலீபன் தெரிவித்துள்ளார் .

இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்று காலை 8 மணிமுதல் வவுனியா வடக்கு கல்வி வயலத்திற்குட்பட்ட அதிபர்கள், ஆசிரியர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் புளியங்குளம் இந்துக்கல்லுாரியில் மேற்கொள்வதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது. எனினும் இன்றையதினம் இப்பரிசோதனை வெளிமாவட்டத்திலிருந்து வருபவர்களுக்காகவே மேற்கொள்பட்டிருந்தது.

வெளிமாவட்டங்களிலிருந்து 150 ஆசிரியர்கள் கற்பித்தலுக்காக வருகின்ற போதிலும் இன்று பரிசோதனைக்காக 34 ஆசிரியர்களே வருகை தந்திருந்தார்கள். எனவே நாளையதினமும் குறித்த பரிசோதனை இடம்பெறவுள்ளதனால் இன்றையதினம் வெளி மாவட்டத்திலிருந்து வருகை தராதவர்களும், வவுனியா மாவட்டத்தை சேர்ந்தவர்களும் நாளையதினம் தவறாது அனைவரும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எனினும் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொண்டு கொரோனா தொற்றில்லை என உறுதிப்படுத்தப்பட்ட பரிசோதனை அறிக்கையை வைத்திருப்பவர்கள் மாத்திரமே குறித்த பாடசாலைகளுக்குள் சென்று கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here