கடந்த ஐந்து வருடங்கள் வடகொரியாவுக்கு மிக மோசமான காலமாக இருந்ததாக அந்நாட்டு ஜனாதிபதி கிம் ஜோங் உன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தேசிய தொலைக்காட்சியில் கிம் கூறும்போது, ”கடந்த ஐந்து வருடங்கள் நாட்டிற்கு மோசமான காலமாக இருந்தது. அனைத்துத் துறைகளிலும் பொருளாதாரம் சரிந்துள்ளது. இதனை நாங்கள் ஆழமாகப் பகுப்பாய்வு செய்ய இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த சில வருடங்களாகவே பல்வேறு நாடுகளின் எதிர்ப்பை மீறி ஏவுகணை சோதனைகளை வடகொரியா நடத்தி வருகிறது. இதன் காரணமாக அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் வடகொரியாவுக்குப் பொருளாதாரத் தடைகளை விதித்தன. இதன் காரணமாக வடகொரியாவில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டது.
மேலும், உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பல்வேறு நாடுகள் பாதிப்புக்குள்ளாகும்போது வடகொரியாவில் மட்டும் கொரோனா தொற்று குறித்த எந்தத் தகவலும் வெளியிடப்படாமல் இருந்தது.
இந்த நிலையில் ஜனாதிபதி கிம், தங்கள் நாட்டில் ஒருவருக்குக் கூட கொரோனா தொற்று இல்லை என்று நாட்டு மக்களிடையே முன்னதாக உரையாற்றினார். மேலும் தனது ஆட்சியில் குறைகள் இருந்தால் தன்னை மன்னிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
வடகொரியாவுக்கு சீனா தனது கொரோனா தடுப்பு மருந்துகளை வழங்கியதாக சில நாட்களுக்கு முன்னர் செய்தி வெளியாகியது. ஆனால், இதுகுறித்து வடகொரியா தரப்பில் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.
உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 8.5 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.