இலங்கை போக்குவரத்து சபை முல்லைத்தீவு சாலை அலுவலகத்தில் கடமையாற்றுகின்ற பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது மதுபோதையில் வந்த ஊழியர்கள் தாக்குதல் முயற்சி மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் கொரோனா வைரஸ் உடைய தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் அது தொடர்பான பாதுகாப்பு நடவடிக்கைகளை இறுக்கமாக கடைபிடிக்குமாறு சுகாதாரப் பிரிவினர் அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இருவர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக கடைப்பிடிக்கும் நோக்கோடு பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு சாலை முகாமையாளரால் பணிக்கப்பட்ட கடமைகளை அவர் செய்து வந்திருக்கின்றார்.
இந் நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் இ.போ.ச சாலையில் பணியாற்றுகின்ற ஊழியர்கள் 8 பேர் கொழும்பில் நேற்றைய தினம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்று அங்கு நிகழ்வில் கலந்து கொண்டு அங்கிருந்து அவர்கள் முல்லைத்தீவு வருகை தந்தபோது முகாமையாளரின் உத்தரவுக்கமைய அவர்களை உள்ளே அனுமதிக்காது இருந்துள்ளார் பாதுகாப்பு உத்தியோகத்தர்.
சுகாதார நடைமுறைகளை பின்பற்றி அதற்கான ஏற்பாடுகள் செய்வதற்காக பாதுகாப்பு அதிகாரிக்கு சாலை முகாமையாளர் குறித்த நபர்களை சாலை வளாகத்திற்குள் எடுக்க வேண்டாம் என்றும் பேருந்தை மாத்திரம் தொற்று நீக்கி உள்ளே எடுக்குமாறும் தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில் நேற்றிரவு கொழும்பில் இருந்து மதுபோதையில் வந்த சில ஊழியர்கள் தங்களை உள்ளே விடுமாறு கூறி பாதுகாப்பு உத்தியோகத்தர் தாக்க முயற்சித்து, கதவுகளை தள்ளி அட்டகாசம் புரிந்து அவர்கள் உள்ளே சென்று இன்று காலை 11 மணிவரை சாலை வளாகத்தில் தங்கியுள்ளனர்.
குறித்த நபர்கள் யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து கடமைக்காக வருகின்றவர்கள் எனவும் இன்று காலை அவர்கள் இங்கிருந்து யாழ் மாவட்டத்திற்கு சென்றுள்ளதாகவும் தெரியவருகின்றது.
இந்நிலையில் குறித்த நபர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் எனவும், அவர்கள் பாதுகாப்பு அதிகாரியை தாக்க முயற்சித்த சம்பவத்திற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், இந்த விடயத்தில் சுகாதாரத் தரப்பினர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.