‘யேசு கிறிஸ்துவை போல அம்மா உயிர்த்தெழுந்து வருவார்’: 20 நாட்கள் தாயின் சடலத்துடன் வாழ்ந்த பிள்ளைகள்!

திண்டுக்கல் அருகே உயிரிழந்த பெண் காவலர், கிறிஸ்துவை போல மீண்டும் உயிர்த்தெழுந்து வருவார் எனும் நம்பிக்கையில் அவரது குடும்பத்தினர் 20 நாட்களாகப் பூட்டிய வீட்டுக்குள் உடலுடன் தங்கி ஜெபம் செய்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டியைச் சேர்ந்த அன்னை இந்திரா என்பவர் திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராகப் பணியாற்றி வந்தார். கடந்த 15 வருடங்களுக்கு முன்பு தேனியைச் சேர்ந்த பால்ராஜ் என்பவரோடு இவருக்குத் திருமணம் நடைபெற்றது. இருவருக்கும் 13 மற்றும் 9 வயதில் இரு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இந்திரா கிறிஸ்தவராக மதம் மாறி உள்ளார். இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பால்ராஜ் இந்திராவைப் பிரிந்து சென்றுள்ளார்.

இதையடுத்து, இந்திரா திண்டுக்கல் நந்தவனப்பட்டி ட்ரசரி காலனி பகுதியில் தனது இரு குழந்தைகளுடன் வாடகைக்குத் தங்கி இருந்தார். கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில், கடந்த இரு மாதங்களாக மருத்துவ விடுப்பில் இருந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 7ஆம் தேதி அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து அவரது சகோதரி சகுந்தலா என்பவர் வீட்டிற்கு வந்து தங்கியுள்ளார்.

இந்த சூழலில், கடந்த 20 நாட்களுக்கும் மேலாக அன்னை இந்திரா உள்ளிட்ட யாரும் வீட்டை விட்டு வெளியே வராத நிலையில், விருப்ப ஓய்வுக்கான ஆணையை வழங்குவதற்காக பெண் காவலர் ஒருவர் அவரது வீட்டுக்குச் சென்றுள்ளார். வீட்டின் கதவு திறக்கப்படாத நிலையில் துர்நாற்றம் வீசியதை அடுத்து அவர் உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் கதவைத் திறந்து பார்த்தபோது அன்னை இந்திரா இறந்து இருபது நாட்களுக்கும் மேலாகிய நிலையில் உடல் அழுகிக் கிடந்தது தெரியவந்தது.

மேலும், அன்னை இந்திராவின் உடலுடன் சகோதரி சகுந்தலா, இரு குழந்தைகள் மற்றும் கிறிஸ்தவ மத போதகரான சுதர்சன் ஆகியோர் 20 நாட்களாகத் தங்கியிருந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து, மர்ம மரணம் என வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 7ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாகச் சுயநினைவை இழந்த அன்னை இந்திரா படுக்கையிலேயே மயங்கியுள்ளார். ஆனால், அவரை மருத்துவமனை அழைத்துச்சென்றால் கர்த்தர் ரட்சிக்க மாட்டார் எனக் கூறிய மதபோதகர் சுதர்சன், ஜெபம் செய்வதாகக் கூறி அவர்களுடன் தங்கியுள்ளார். அப்போதிலிருந்து அன்னை இந்திரா கண்விழிக்காத நிலையில் சில நாட்களில் உடலிலிருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது. இதையடுத்து வீட்டைப் பூட்டிக்கொண்டு 20 நாட்களாக வீட்டிற்குள்ளேயே உடலுடன் தங்கி ஜெபம் செய்துள்ளனர். வீட்டிற்குத் தேவையான பொருட்களை அவ்வப்போது சுதர்சன் வெளியே சென்று வாங்கிக் கொடுத்துள்ளார். இந்திராவின் உடல் அழுகி முடி எல்லாம் உதிர்ந்துவிட்டது.

இறந்த உடலுடன் இருபது நாட்களுக்கும் மேல் தங்கியிருந்த இருந்த அன்னை இந்திராவின் சகோதரி மற்றும் குழந்தைகளிடம் போலீசார் விசாரித்த போது, “அன்னை இந்திரா இறக்கவில்லை. அவர் தற்போது ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறார். ஏசு கிறிஸ்துவைப் போலவே, விரைவில் அவர் உயிர்த்தெழுந்து வருவார். அதனால், அவரது உடலை எங்களிடமே ஒப்படைத்துவிடுங்கள்” என்று திரும்பத் திரும்பச் சொல்லியுள்ளனர்.

மேலும் தாயின் உடல் அருகே யாரையும் அனுமதிக்காத இந்திராவின் குழந்தைகள், எனது தாயை தொந்தரவு செய்பவர்களுக்கு இயேசு தண்டனை கொடுப்பார் என மிரட்டியுள்ளனர். இந்திராவின் சகோதரி வாசுகி, தங்கை உயிருடன் தான் இருக்கிறார் எனக் கூறி போலீசாரை அதிர்ச்சி அடையச் செய்து உள்ளார்.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் மதபோதகர் சுதர்சன் சகோதரி சகுந்தலா ஆகியோரைக் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்திரா இறந்த வீட்டிற்கு மருத்துவர்களை அழைத்து வந்த காவல்துறையினர் அங்கேயே உடற்கூறு ஆய்வு செய்து, உடலை அடக்கம் செய்வதற்காக எடுத்துச் சென்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here