தீவக மக்கள் எதிர்கொள்ளும் மருத்துவ நெருக்கடிகளை உருக்கமாக சுட்டிக்காட்டிய வைத்தியர்!

மருத்துவர் பற்றாக்குறையினால் தீவக மக்கள் எதிர்கொள்ளும் அவலத்தை சுட்டிக்காட்டியுள்ள பொது வைத்திய நிபுணர் கல்பனா சிறிமோகனன், எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத நிலையில் தான் எவ்வாறு பணியாற்றுகிறேன் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

நேற்று (01) வைத்தியசாலை கதிரியக்கப் பிரிவு ஆரம்பிக்கும் நிகழ்வில் கலந்து தனது தீவக மக்கள் படும் மருத்துவ நெருக்கடிகளை மிகுந்த மன உளைச்சலுடன் எடுத்து உரைப்பதாகக் கூறினார். ஒரு வருடமாக எந்தவொரு மருத்துவரும் தனக்கு பிரத்தியேகமாக நியமிக்கப்படாத நிலையில் மருத்துவ நிபுணர் ஆகிய தான் எந்த அடிப்படை வசதிகளுமின்றி கடமையாற்றி வருவதாகவும் 15 வைத்தியர்கள் இருக்க வேண்டிய ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் 5 வைத்தியர்களே கடமையாற்றுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஏனைய கடல் கடந்த தீவுகளில் இருந்து வைத்திய சேவைக்கு வருபவர்களுக்கு உரிய மருத்துவ வசதியை வழங்காது விடும் போது அந்த வறிய மக்களின் நிலை குறித்து தான் மிகுந்த கவலை அடைவதாகவும் குறிப்பிட்டார்.

இவ்வாறான நிலையில் தானும் மாற்றலாகி செல்ல இருப்பதாகவும் இனி வரும் காலத்திலாவது இந்த வைத்தியசாலை ஏனைய யாழ் மாவட்ட ஆதார வைத்தியசாலைகளான பருத்தித்தித்துறை, தெல்லிப்பளை, சாவகச்சேரி போன்று மருத்துவர் நியமனங்கள் வளப் பங்கீடுகள் மேற்கொள்ள வேண்டியது வளமாக வாழ்ந்து தற்போது நலிவுற்ற நிலையிலுள்ள தீவக மக்களின் அடிப்படை தேவையான மருத்துவ வசதியைப் பூர்த்தி செய்ய அத்தியாவசியமான ஒன்று எனக்குறிப்பிட்டார்.

வைத்திய அத்தியட்சகர் ப.தீலிபன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மாகாண சுகாதாரப் பணிப்பாளர், யாழ், போதனா வைத்தியசாலை பணிப்பாளர், வைத்திய நிபுணர்கள், மருத்துவர்கள், பிரதேச செயலர், நலன்புரி சங்கத்தினர் ஊழியர்கள் சுகாதார நடைமுறைகளுடன் கலந்து கொண்டனர்.

போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் உரையாற்றுகையில், மருத்துவ நிபுணர் கல்பனா இன்னொரு வைத்திய நிபுணர் வரும் வரை யாழ். போதனா வைத்தியசாலையில் கடமை பொறுப்பேற்க தேவையில்லை. தொடர்ந்து ஊர்காவற்றுறையில் பணியாற்றலாம் என்றார்.

கதிரியக்க வைத்திய நிபுணர் ம.அன்ரன் தீவக பொதுமக்களிதும் அரசியல் வாதிகளதும் அழுத்தம் மருத்துவர்களை, வளங்களை பெற்றுக் கொள்வதில் போதியதாக இல்லை என ஆதங்கப்பட்டார்.

மாகாண பணிப்பாளர் முடிந்தவரை வளங்களை படிப்படியாக வழங்க முயற்சிப்பதாகவும் மருத்துவர்களை கொண்டு வருவதற்கு ஏனையவர்கள் கூறியது போன்று மக்கள் பிரதிநிதிகளின் அழுத்தமும் தேவை என்றார்.

ஏனைய வைத்தியசாலைகளிலிருந்து குறிப்பாக தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையிலிருந்து இங்கு பொறுப்பேற்க வேண்டிய சில வைத்தியர்கள் சில வருடங்களாக பொறுப்பேற்காது இருப்பதாகவும் இங்கு கடமையாற்றும் சிலரும் விடுவிக்கப்படவுள்ளதால் தாம் மிகுந்த கவலை அடைவதாக நலன்புரிச் சங்கத்தினர் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here