யாழ்ப்பாணம் அரியாலையில் புதைக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சிசுவை பிரசவித்த யுவதியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து, யுவதியின் தாயார் கைது செய்யப்பட்டுள்ளார்.
புங்கன்குளம் வீதியிலுள்ள வீட்டு வளவில் இருந்து நேற்று மாலை பெண் சிசுவொன்றின் சடலம் மீட்கப்பட்டிருந்தது.
நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அதிக குருதிப் போக்குடன் யுவதியொருவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். 24 வயதான அந்த யுவதி குழந்தையொன்றை பிரசவித்ததால் ஏற்பட்ட குருதிப் பெருக்கென தெரிய வந்தது.
கிளிநொச்சியிலுள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றில் பணிபுரியும் யுவதியே குழந்தை பிரசவித்திருந்தார். அவர் தந்தையை இழந்தவர்.
நீதிமன்ற அனுமதியுடன் நேற்று யுவதியின் வீட்டு வளவில் புதைக்கப்பட்டிருந்த பெண் சிசுவின் சடலம் மீட்கப்பட்டது. பிறந்த பின்னர் சிசு கொல்லப்பட்டிருக்கலாமென பிரேத பரிசோதனையில் தெரிய வந்தது.
குழந்தை பிரசவமானது தனக்கு தெரியாதென யுவதி விசாரணையில் தெரிவித்தார்.
இதனடிப்படையில் யுவதியின் தாயாரிடம் நடத்தப்பட்ட விசாரணையை தொடர்ந்து, அவர் இன்று மாலை கைது செய்யப்பட்டார்.