யாழ். மாநகரசபை, நல்லூர் பிரதேசசபை… உண்மையான வெற்றியாளர்கள் யார்?

யாழ்ப்பாண மாநகரசபை முதல்வர் தெரிவு முடிந்து விட்டது.

அரசியல் என்றாலே, சூது, குழிபறிப்பு, துரோகம் போன்ற கருப்பு பக்கங்கள் இருக்கும் என்பார்கள். இது அத்தனையும் யாழ் மாநகரசபை முதல்வர் தெரிவில் இடம்பெற்றது.

சாதாரண உள்ளூராட்சி மன்ற தலைவர் தெரிவில், தமிழ் மக்களின் பிரதான அரசியல் தரப்புக்கள் அதிகபட்ச முயற்சிகளை மேற்கொண்டதால், யாழ்ப்பாண மாநகரசபை முதல்வர் தெரிவும், நல்லூர் தவிசாளர் தெரிவும் கூடுதல் கவனத்தை பெற்றன.

இரண்டு சபைகளிலும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கிளர்ச்சிக் குழுவான வி.மணிவண்ணன் தரப்பு வெற்றிபெற்றுள்ளது. இது ஒரு எதிர்பாராத திருப்பம். தமிழ் தேசிய கூட்டமைப்பின் பெரும் பகுதியினரும், தமிழ் தேசிய மக்கள் முனனணியினரும், பொதுமக்களும் இதை எதிர்பார்க்கவில்லை.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் ஒரு குழு, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கிளர்ச்சிக்குழுவான வி.மணிவண்ணன் தரப்பு, ஈ.பி.டி.பி என முக்கூட்டு முயற்சி இந்த சடுதியான திருப்பத்தை நிகழ்த்தியுள்ளது.

இரண்டு சபைகளிலும் வி.மணிவண்ணன் தரப்பு வெற்றிபெற்றதாக சொல்கிறார்கள். ஆனால், இந்த சபைகளை முன்வைத்து நடத்தப்பட்ட அரசியல் விளையாட்டில், வி.மணிவண்ணன் தரப்பு உண்மையான வெற்றியாளர்கள் அல்ல.

அரசியல் அர்த்தத்தில், அவர்கள் ஆறுதல் பரிசுக்குரிய வெற்றியாளர்கள் மட்டுமே.

வி்.மணிவண்ணன் தரப்பு இரண்டு சபைகளில் போட்டியிட்டது, அதில் வெற்றிபெற்றார்கள் என்ற எமது கண்ணுக்கு தெரிந்த உண்மையிருந்தாலும், கண்ணுக்கு புலப்படாத அரசியல் உண்மை யாதெனில், அவர்கள் ஈ.பி.டி.பி மற்றும் இலங்கை தமிழ் அரசு கட்சியின் ஒரு குழுவின் அரசியல் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்யும் கருவிகளாக அமைந்து விட்டார்கள் என்பதே.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் மீண்டும் முதல்வராகுவதை, தமிழ் அரசு கட்சியின் எம்.பி.சுமந்திரன் விரும்பவில்லை. இரண்டு முறை வரவு செலவு திட்டத்தில் தோல்வியடைந்தவர் போட்டியிட கூடாதென இப்பொழுது அவர் அதற்கு அரசியல்ரீதியிலான காரணங்களை கற்பிக்க முனைந்தாலும், பின்னணியில் இன்னொரு சம்பவமும் உண்டு.

ஆர்னோல்ட் முன்னர் சுமந்திரனின் அணியில் இருந்தவர். கடந்த பொதுத்தேர்தலில் அவர் சுமந்திரனின் அணியில் இருக்கவில்லை. இதுதான் விவகாரம். அதாவது, தமிழர்கள் பாரம்பரியமாக கட்டி வளர்த்து வரும் துரோகி அரசியலின் இன்னொரு வடிவம் இது. தம்முடைய குழுவிலிருந்து வெளியேறியவரை தோற்கடிக்க வேண்டுமென சுமந்திரன் குழுவினர் முகநூலில் பகிரங்கமாக எழுதி வந்தனர்.

இறுதி வாக்கெடுப்பில், ஆர்னோல்ட்டின் தோல்விக்கு பிரதான காரணமாக அமைந்ததும், சுமந்திரன் அணியை சேர்ந்த ஒருவர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமலிருந்ததே.

வாக்கெடுப்பு முடிந்த அன்று, அந்த உறுப்பினரின் வீட்டில் எம்.ஏ.சுமந்திரன் நீண்ட நேரத்தை செலவிட்டார்.

வாக்கெடுப்பு முடிந்ததும், மாவை சேனாதிராசாவிற்கு அவர் கடிதம் எழுதியது, இந்த விடயத்தில் அவர் தரப்பு எவ்வளவு தீவிர அக்கறையெடுத்திருந்தது என்பதை புலப்படுத்துகிறது.

கடந்த உள்ளூராட்சி தேர்தலின் பின்னர் ஈ.பி.டி.பி முதல்வர் தெரிவில் களமிறங்கி, பின்னர் அதிலிருந்து பின்வாங்கி, கூட்டமைப்பை ஆதரித்தார்கள். தமிழ் தேசிய மக்கள் முன்னணியை வளர்ச்சியடைய வைக்கக் கூடாது என்ற நோக்கத்துடன் அப்போது, தமிழ் தேசிய கூட்டமைப்பை, ஈ.பி.டி.பி ஆதரித்தது. முன்னணி தரப்பில் அப்போது மணிவண்ணன் போட்டியிட்டிருந்தார். இந்த நகர்வு அரசியல் ரீதியாக அவர்களிற்கு எந்த பலனையும் கொடுக்கவில்லை.

ஆனால் இப்பொழுது தேர்தலில் போட்டியிடாமல் அதிகபட்ச அரசியல் நன்மையை ஈ.பி.டி.பி பெற்றுள்ளது. அண்மைய வரலாற்றில் ஈ.பி.டி.பி செய்த சொல்லும்படியான நகர்வு இது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கும், ஈ.பி.டி.பிக்கும் உள்ள பகை ஊரறிந்தது. இதில் புதிதாக சொல்ல ஒன்றுமில்லை.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் இருந்து ஒரு கிளர்ச்சிக்குழுவாக மணிவண்ணன் தரப்பு உருவாகிய நிலையில், மணிவண்ணன் தரப்பை பலப்படுத்துவது ஈ.பி.டி.பியின் விருப்பத் தெரிவாக இருந்திருக்கும்.

அரசியல் அடித்தளம் இல்லாமல் திண்டாடிய மணிவண்ணன் குழு, இரண்டு சபைகளை கைப்பற்றுவது தமக்கு அடித்தளமொன்றை உருவாக்குமென நம்பியிருக்கும். இதனால், இரண்டு தரப்பும் பெரிய சிரமங்கள் இல்லாமல் தேர்தலிற்கு முந்தைய இணக்கப்பாட்டிற்கு வந்திருப்பார்கள்.

அதேநேரம், தமிழ் தேசிய கூட்டமைப்பில், இலங்கை தமிழ் அரசு கட்சியில் ஒரு அணி, ஆனோல்ட்டிற்கு எதிராக இருந்தது. அந்த தரப்பின் தூதை ஈ.பி.டி.பி வரவேற்றிருக்கும்.

ஏனெனில், தமிழ் தேசிய கட்சிகள் இரண்டையும் ஒரே நகர்வில் தோல்வியடைய செய்யும் ஒரு சந்தர்ப்பத்தை ஈ.பி.டி.பி இழக்க விரும்பாது.

இதுதான் யாழ் மாநகரசபையில் நடந்த விடயம். இலங்கை தமிழ் அரசு கட்சியில் ஒரு குழு, வி.மணிவண்ணன் தரப்பு, ஈ.பி.டி.பி ஆகிய மூன்றும் 30ஆம் திகதிக்கு முன்னரே நன்றாக திட்டமிட்டு, யாழ் மாநகரசபையிலும், நல்லூர் பிரதேசசபையிலும் வி.மணிவண்ணன் தரப்பை வெற்றியடைய வைத்துள்ளார்கள்.

இந்த பின்னணியில், யாழ் மாநகரசபை மற்றும நல்லூர் பிரதேசசபைகளில் உண்மையான வெற்றியாளர்களாக வி.மணிவண்ணன் தரப்பை கொள்ள முடியாதல்லவா!

மணிவண்ணன் தரப்பின் நோக்கங்களும், ஈ.பி.டி.பியின் விருப்பங்களும், ஆர்னோல்ட்டை தோற்கடிக்க வேண்டுமென தீவிரமாக முயன்ற இலங்கை தமிழ் அரசு கட்சியின் ஒரு குழுவின் விருப்பங்களும் ஒரே புள்ளியில் சந்தித்தமை, மணிவண்ணன் தரப்பில் தீராத கறையாக என்றுமிருக்கும்.

தமிழ் தேசிய சக்திகளை சிதைக்கும் தரப்புக்களின் விருப்பங்களில் சவாரி செய்து, மணிவண்ணன் தரப்பு இரண்டு சபைகளை கைப்பற்றியுள்ளது. எந்த சிதையில் தீக்குளித்து இந்தக்கறையை கழுவப் போகிறார்கள் என்பது அவர்களிற்கே வெளிச்சம்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்குள் வி.மணிவண்ணன் தரப்பு முரண்பட்ட போது, பல ஊடகங்கள் மற்றும் கணிசமானவர்கள் அவர்களை ஆதரித்தார்கள் என்பது உண்மைதான்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்குள் உள்ள தட்டையான அரசியல் பார்வை, ஒரு காலத்தில் செயலற்றவர்களாக இருந்த இடதுசாரிகளில் காணப்பட்ட புரிதாத தத்துவார்த்த பேச்சுக்களை போன்ற அரசியலையே முன்னணியும் செய்தமை போன்ற பத்தாம்பசலித்தனமான அரசியலை முன்னணி செய்ததால்- எவ்வளவோ விமர்சனங்களிலிருந்தும் அதை அவர்கள் கேட்காததால்- அவர்களையும் வழிக்கு கொண்டு வரவும், மணிவண்ணன் தரப்பின் மீதான அனுதாபத்திலும், மணிவண்ணன் தரப்பை சமூகத்தின் ஒரு பகுதி ஆதரித்தது.

இந்த களம் என்பது, தமிழ் தேசிய எல்லைக்குள்ளேயே நிகழ வேண்டும்.

அந்த எல்லையை கடந்து, தமிழ் தேசிய சக்திகள், தமிழ் தேசியத்திற்கு எதிரான சக்திகள் மோதும் களத்தில், உள்ளக முரணை கொண்டு சென்று, தமிழ் தேசியத்திற்கு எதிரான சக்திகளுடன் இணைந்து, தமிழ் தேசிய சக்திகளை வீழ்த்துவதை பொறுப்புடைய அரசியல் சக்திகள் செய்யமாட்டார்கள்.

மணிவண்ணின் வெற்றி இலங்கை தமிழ் அரசுக்கட்சிக்குள் எம்.ஏ.சுமந்திரனையும், ஈ.பி.டி.பியையும் வலுப்படுத்தியுள்ளது. இந்த தரப்பு வலுப்படுவது தமிழ் தேசியத்தை வலுப்படுத்துமா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here