கொரோனாவை ஓரமாக வைத்து விட்டு, புத்தாண்டு கொண்டாட்டத்தில் பிஸியான புதுக்குடியிருப்பு வாசிகள்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதியில் அண்மையில் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பி சி ஆர் பரிசோதனையில் தம்புள்ள பகுதிக்கு சென்று புதுக்குடியிருப்பு, விசுவமடு, உடையார்கட்டு சந்தைகளுக்கான மரக்கறி மொத்த வியாபாரத்தில் ஈடுபடுகின்ற நபரொருவருக்கு கொரோன வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த நபருக்கு இனங் காணப்பட்ட வைரஸ் வீரியம் கூடியதாகவும் எனவே மக்களை சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்றி பாதுகாப்பாக இருக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந் நிலையில் குறித்த நபருடன் நேரடித் தொடர்பைப் பேணிய நபர்கள் 115 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட பி சி ஆர் பரிசோதனைகளில் அவருடைய மனைவிக்கு தொற்று இருப்பது நேற்று உறுதியாகியிருந்தது

இந்நிலையில் இருவரும் கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் முதலாவது தொற்றுடைய நபருடன் நேரடி தொடர்புகளை பேணிய 65 பேரும் அவர்களுடன் தொடர்புகளை பேணிய 129 பேருமாக 194 பேர் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தனர்.

அதனைத் தொடர்ந்து மனைவிக்கு நேற்றைய நாளில் தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளதை தொடர்ந்து இன்று 17 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில் புதுக்குடியிருப்பு நகரப் பகுதியில் இரண்டு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் புதுக்குடியிருப்பு நகர்ப் பகுதிகளில் மக்கள் மிகவும் பொறுப்பற்ற விதமாக செயற்படுவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.

சரியாக முகக்கவசங்கள் அணியாமல் இருக்கின்றமை சமூக இடைவெளிகள் பேணப்படாமல் இருக்கின்ற பல்வேறு சந்தர்ப்பங்களை நகர்புறத்தில் காணக் கூடியதாக இருக்கின்றது.

குறிப்பாக நாளை புத்தாண்டு தினமாக இருக்கின்ற நிலையில் இன்று அதிகளவான மக்கள் புதுக்குடியிருப்பு நகரப்பகுதியில் ஒன்று கூடியிருக்கின்றனர். இவ்வாறு சுகாதார துறையினரின் அறிவுறுத்தல்களை பின்பற்றாமையானது புதுக்குடியிருப்பு நகரத்திற்கு பாரிய விளைவுகள் ஏற்படக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் எச்சரித்துள்ள நிலையில் சமூக ஆர்வலர்கள் பலரும் விசனம் வெளியிட்டு வருகின்றனர்.

மக்களுக்கு பல்வேறு விதமாக அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ள போதும் பொதுமக்களின் இவ்வாறான பொறுப்பற்ற செயற்பாடுகள் புதுக்குடியிருப்பு நகரில் பாரிய ஆபத்தை உண்டு பண்ணக் கூடிய நிலை காணப்படுவதால் மக்கள் தாங்களாக உணர்ந்து சமூக இடைவெளிகளை பேணி முகக்கவசங்களை உரிய முறைப்படி வாய் மூக்கு அடங்கக்கூடியவாறு அணிந்து கைகளை கழுவி சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்றி புதுக்குடியிருப்பு நகரத்துக்கும் முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் கொரோனா பரவலை தடுக்கும் முகமாக அனைவரும் ஒத்துழைத்து செயற்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை புதுக்குடியிருப்பு சேவை சந்தை வர்த்தக நடவடிக்கைகளை மிகவும் இறுக்கமான சுகாதார நடைமுறைகளுடன் மேற்கொள்ளும் முகமாக புதுக்குடியிருப்பு பிரதேச சபை மைதானத்தில் மரக்கறி மீன் வியாபார நடவடிக்கைகளை தனிமைப்படுத்தப்பட்ட வர்த்தகர்கள் அல்லாதவர்களால் மேற்கொள்ள பிரதேச சபை தவிசாளர் ஆ.தவக்குமாரனால் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

இதேவேளை இன்று 100 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட பி சி ஆர் பரிசோதனைகளுடன் கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் 435 பேரிடம் பி சி ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் 115 பேருடைய பரிசோதனை முடிவுகள் கிடைக்கப்பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here