யாழ் மாநகரசபை முதல்வர் தெரிவில் ஈ.பி.டி.பி- மணிவண்ணன் கூட்டணிக்கு வாய்ப்பாக- தமிழ் தேசிய கூட்டமைப்பின் முதுகில் குத்திய உறுப்பினர் மகாலிங்கம் அருள்குமரன் இன்று “குபீர்“ கருத்தொன்றை வெளியிட்டுள்ளார்.
வாக்கெடுப்பு நேற்று காலை நடைபெற்றது. இதன்போது, தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு துரோகமிழைத்து, எதிர்தரப்பு வெல்வதற்கு வாய்ப்பாக செயற்பட்டார். அவர் சுமந்திரன் குழுவில் செயற்படுகிறார். ஆனோல்ட்டை தோற்கடிக்க எம்.ஏ.சுமந்திரனே பின்னணியில் செயற்பட்டாரா என்ற கேள்வி அரசியலரங்கில் பரவலாக எழுப்பப்பட்டு வந்தது.
இந்த நிலையில், நேற்று ஊர் அடங்கிய பின்னர் இரவு, அவரது வீட்டிற்கு சுமந்திரன் சென்றார். நள்ளிரவு வரை சுமந்திரன் அங்கு தங்கியிருந்தார். அவரது வீட்டில் சுமந்திரன் இரவு தங்கியிருந்ததை தமிழ்பக்கம் நேற்றிரவே அம்பலப்படுத்தியது.
இந்த சந்திப்பு, வாக்கெடுப்பு நேரம் எழுந்த பல ஊகங்களிற்கு விடையளிப்பதாக அமைந்தது.
இந்த நிலையில் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாநகரசபை உறுப்பினர்களை அழைத்து, கட்சித் தலைவர் மாவை சேனாதிராசா கலந்துரையாடினார்.
இதன்போது, பல உறுப்பினர்கள் அருள்குமரன் மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை சுமத்தினர். சுமந்திரன் பின்னணியிலேயே வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் விட்டார், இரவு ஏன் சுமந்திரன் வந்தார், இந்த வருகையே அனைத்தையும் அம்பலப்படுத்துகிறது என எகிறினர்.
சுமந்திரன் அங்கு சென்றது தொடர்பான புகைப்படங்கள் வெளியானதால், அருள்குமரனால் மறுக்க முடியவில்லை.
“நேற்றிரவு சுமந்திரன் எனது வீட்டிற்கு வந்தார்தான். ஆனால் வந்தது, என்னை பேச. நெருக்கடியான நேரத்தில் இப்படி செய்து விட்டாயே, என்னையல்லவா எல்லோரும் பேசப் போகிறார்கள். நான்தான் பின்னணியில் இருந்ததாக சொல்லப் போகிறார்கள் என என்னை நேரில் பேசுவதற்காகத்தான் வந்தார்“ என குபீர் பதிலளித்தார்.
அவர் பொய் சொல்கிறார் என்பதை போல, அங்கிருந்த உறுப்பினர்கள் பெரிதாக சிரித்தனர்.