கட்சிக்குள் பேச வேண்டிய விடயங்களை தொடர்ந்து சுமந்திரன் பகிரங்கமாக பேசி வருகிறார். இரண்டாவது முறை கட்சி தலைமைக்கு எதிராக அவர் பகிரங்க அறிக்கை விடுத்துள்ளார். இது மிக பிழையானது. சுமந்திரனின் கடிதம் தொடர்பில் நாளை பதில் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார் இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் குழுவொன்றின் சதி முயற்சியின் மூலம் யாழ் மாநகரசபை முதல்வர் தெரிவில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் முதல்வர் வேட்பாளர் தோற்கடிக்கப்பட்டார்.
இதையடுத்து, தமிழ் அரசு கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், கட்சி தலைமைக்கு எதிராக கடிதம் ஒன்றை அனுப்பியதுடன், அதை அவரது தரப்பினர் பகிரங்கப்படுத்தினர்.
இது தொடர்பில், மாவை சேனாதிராசாவை தொடர்பு கொண்ட தமிழ்பக்கம், எம்.ஏ.சுமந்திரன் அனுப்பிய கடிதம் கிடைத்ததா என வினவியது.
“எம்.ஏ.சுமந்திரனிடமிருந்து மின்னஞ்சலில் கடிதமொன்று வந்துள்ளதாக எனக்கு சொல்லப்பட்டுள்ளது. இன்னும் அதை நான் படிக்கவில்லை. ஊடகங்கள் தரப்பிலிருந்து விசாரித்ததில் சில உள்ளடக்கங்களை அறிந்துள்ளேன்.
கட்சியின் உள்ளக விடயங்கள், உள்ளுக்குள்ளேயே பேசப்பட வேண்டியவை. அந்த ஒழுக்கத்தை நான் பின்பற்றுகிறேன். ஆனால் சுமந்திரன் கட்சி தலைமைக்கு எதிராக இரண்டாவது முறையாக பகிரங்கமாக அறிக்கை விடுத்துள்ளார். அது தவறானது. கட்சி நடவடிக்கைக்குரியது.
நாமும் பேசுவதெனில் பலதை பேசலாம். ஆனால், நாம் பொறுப்பான அரசியல்வாதிகள். அதனால் நாளை காலை கட்சிக்குள் இது பற்றி ஆலோசித்து, பதிலளிக்கத்தக்க விடயம் என்றால் பதிலளிப்பேன்“ என்றார்.