ஈ.பி.டி.பியின் ஆதரவுடன் யாழ் மாநகரசபை முதல்வராக வி.மணிவண்ணன் இன்று தெரிவாகினார்.
மணிவண்ணனை ஈ.பி.டி.பி ஆதரிக்கும் நிலைமையிருப்பதாக நேற்றிரவு தமிழ்பக்கம் குறிப்பிட்டிருந்தது. இ.ஆனால்ட்டை தோற்கடிக்க வேண்டுமென இலங்கை தமிழ் அரசு கட்சிக்குள் ஒரு தரப்பு சதி முயற்சியில் ஈடுபட்டிருந்தது.
இந்த நிலையில் இன்று மாநகரசபை முதல்வராக வி.மணிவண்ணன் பதவியேற்ற பின்னர் நல்லூரில் உள்ள தியாகி திலீபனின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.
சமூக வலைத்தளங்களில் இது இரண்டு விதமான பிரதிபலிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு தரப்பினர் அதை பாராட்டினாலும், பெருமளவானவர்கள் கழுவி ஊற்றி வருகிறார்கள்.
தியாகி திலீபன் தொடர்பில் டக்ளஸ் தேவானந்தா தனது கருத்துக்களை அண்மையில் தெரிவித்திருந்தார். திலீபனை ஒருமையில் விளித்து அவர் தெரிவித்த கருத்து தமிழ் தேசிய உணர்வாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில், ஈ.பி.டி.பியின் ஆதரவுடன் வெற்றியடைந்த மணிவண்ணன், திலீபனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவது தர்க்க முரணானது, அரசியல் நேர்மையற்றது என்பதை பலர் சுட்டிக்காட்டினர். அது, மக்களை ஏமாற்றும் அரசியல் என்றும் சுட்டிக்காட்டி வருகிறார்கள்.
வி.மணிவண்ணன் தரப்பை ஆதரிக்கும் முடிவை ஈ.பி.டி.பி ஏன் எடுத்தது என்பது குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்தை அறிய இன்று தமிழ் பக்கம் தொடர்பு கொண்டபோது, இந்த விடயத்தை சுட்டிக்காட்டி, அவரது கருத்தை கேட்டது.
தமிழ்பக்கம் குறிப்பிடும்வரை அந்த சம்பவத்தை டக்ளஸ் தேவானந்தா அறிந்திருக்கவில்லை. சம்பவத்தை கேள்விப்பட்டதும் பெரிதாக சிரித்தார். “அவர் வழக்கமான தனது அரசியலை செய்கிறார“ என்றார்.