• புதிய ஆண்டில் கிராம பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு 200000 சுயதொழில் வாய்ப்புக்கள்

கிராமப் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தின் கீழ் சமுர்த்தி பயனாளர்கணை வாழ்வாதார ரீதியில் வழிநடத்தும் செயற்பாட்டிற்கு சமுர்த்தி முகாமையாளர்கள் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகள் தலைமை தாங்குவர் என பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ  தெரிவித்தார்.

இன்று (2020.12.28) அலரி மாளிகையில் சமுர்த்தி முகாமையாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். சமுர்த்தி வீட்டு பொருளாதாரம், நுண்நிதி, சுயதொழில் மற்றும் வணிக மேம்பாடு தொடர்பாக எதிர்காலத்தில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.

கிராம உத்தியோகத்தர் பிரிவுகளின் அடிப்படையில் பெண் தொழில்முனைவோரை தெரிவுசெய்து, வணிக நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வதற்கான பயிற்சி மற்றும் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து கிராமப்புற பெண்களை ஊக்குவிப்பதற்கும், இளம் வேலையற்றவர்களின் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக் கொடுப்பதற்கும் இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. விவசாயம், கால்நடை வளர்ப்பு, மீன்பிடி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி போன்ற 200000 சுயதொழில் வாய்ப்புகளுக்கு இவ்வாறு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. இவ்வேலைத்திட்டத்தின் ஊடாக தயாரிக்கப்படும் கிராமப்புற உற்பத்திகளுக்கான சந்தையை உருவாக்குவது குறித்தும் வரவு செலவுத் திட்டத்தில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதுடன் அதற்காக 25000 புதிய விற்பனை நிலையங்களை திறக்க எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே 2021 வரவு செலவுத் திட்டத்தை கிராம மட்டத்தில் செயற்படுத்துவதில் முழு நாட்டையும் உள்ளடக்கிய மிக வலுவான துறையான சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்திற்கு விசேட பொறுப்பு உண்டு என்றும் திரு.பசில் ராஜபக்ஷ அவர்கள் குறிப்பிட்டார்.

சமுர்த்தி பயனாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களை மேம்படுத்துவதற்கு சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்திற்கு மாதத்திற்கு ஒரு பில்லியன் வரை செலவாகும்.

வேலையற்ற சமுர்தி பயனாளர்களின் வாழ்வாதார மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு வழிநடத்தி, பலமான பொருளாதாரத்தை கொண்டவர்களாக்குவதற்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்களுடன் இணைந்து செயற்படுமாறும் அவர் சமுர்த்தி முகாமையாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

அரசு எதிர்பார்க்கும் நோக்கத்தை வெற்றிக்கொள்வதற்கு பெண் தொழில்முனைவோர்களை உருவாக்கும்போது நிதி கல்வியறிவை வழங்கி அவர்களது வணிக மேம்பாட்டிற்காக வழிநடத்தல் மற்றும் வேலையற்ற கிராமப்புற இளைஞர் யுவதிகளுக்கு தகுந்த வாழ்வாதார வழியை ஏற்படுத்தி கொடுப்பது தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்துமாறும் திரு.பசில் ராஜபக்ஷ அவர்கள் மேலும் வலியுறுத்தினார்.

குறித்த சந்திப்பில் கௌரவ இராஜாங்க அமைச்சர்களான ஷெஹான் சேமசிங்க, சீதா அரம்பேபொல, அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட அரச அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பிரதமர் ஊடக பிரிவு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here