கட்சியின் கோபக்காரர்களுடன் உறுப்பினர்களும் கதைக்க முடியாது: கஜேந்திரன் ‘குபீர்’ உத்தரவு!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடன் முரண்பட்ட யாருடனும் கதைக்கக் கூடாதென, முன்னணியின் உறுப்பினர்களிற்கு கண்டிப்பான கட்டளை வழங்கியுள்ளார் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன்.

இந்த உத்தரவினால், உறுப்பினர்கள் பலர் தலையில் அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த சுவாரஸ்ய சம்பவம் அண்மையில் இடம்பெற்றது.

யாழ் மாநகரசபையில் அங்கம் வகிக்கும் முன்னணியின் உறுப்பினர்கள் சிலரையே, முன்னணி கட்சியை விட்டு நீக்க நடவடிக்கையெடுத்தது. அதற்கு நீதிமன்றம் தற்காலிக தடைவிதித்துள்ளது.

அவர்கள் மணிவண்ணனை ஆதரித்தார்கள் என்ற காரணத்தினாலேயே கட்சியை விட்டு நீக்க நடவடிக்கையெடுக்கப்பட்டது.

அப்படி நீக்க முன்னணி முயற்சித்து, நீதிமன்றம் தடைவிதித்த உறுப்பினர் ஒருவரின் வீட்டில் அண்மையில் பிறந்தநாள் நிகழ்வு நடந்தது. மாநகரசபை உறுப்பினர்களிற்கு அவர் அழைப்பு விடுத்திருந்தார்.

இதுவரை கட்சியில் ஒன்றாக இருந்தவர்கள், அரசியலுக்கு அப்பாலும் நட்பாக இருப்பவர்கள் தமக்குள் நட்புறவை பேணுவது வழக்கம். அப்படி பல உறுப்பினர்கள் பிறந்தநாள் நிகழ்வில் கலந்து கொண்டனர். மணிவண்ணன் அணியும் கலந்து கொண்டது. கஜேந்திரர் அணி பக்கமுள்ள ஒருவரும் கலந்து கொண்டார். நீணடநாள் நட்பின் அடிப்படையில், அவர் பிறந்ததின நிகழ்வில் கலந்து கொண்டார்.

இந்த தகவல் எப்படியோ முன்னணி செயலாளர் செ.கஜேந்திரனின் காதிற்கு போயுள்ளது. பிறந்தநாள் நிகழ்விற்கு போன உறுப்பினரை உடனடியாக தொலைபேசியில் அழைத்து, ஏன் அந்த நிகழ்வில் கலந்து கொண்டார் என வினவியுள்ளார்.

நீண்டநாள் நட்பின் அடிப்படையில் கலந்து கொண்டதாக அவர் விளக்கமளித்துள்ளார்.

எனினும், கஜேந்திரன் அதை ஏற்கவில்லை.

கட்சியில் அங்கம் வகிப்பதென்றால், கட்சி கதைக்காமல் விடுபவர்களுடன் உறுப்பினர்களும் கதைக்க முடியாது என கண்டிப்பான கட்டளை பிறப்பித்துள்ளார்.

“நீங்கள் எந்தப்பக்கம் என்பதை முடிவெடுங்கள்“ என்றும் செயலாளர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here