‘தேவுடு காத்துக்கொண்டிருக்கிறோம்’: 175,000 ரூபா செலுத்தி ஹொட்டலில் தனிமைப்படுத்தியவரின் பேஸ்புக் பதிவு!

ஹொட்டலில் தனிமைப்படுத்தப்படும் செயற்பாடு தொடர்பில் ஒருவர் முகநூலில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவு வருமாறு-

சாதாரண நிலைமையில் இலங்கையில் இருக்கும் ஒரு 3-4 நட்சத்திர ஹோட்டல்களில் half-board அடிப்படையில் தங்குவதற்கு, ஒரு அறைக்கு ஒரு நாளைக்கு 8’500-10’000 இலங்கை ரூபாக்கள் வரை போகும். அதுவும் ஜெட்விங், அமாயா போன்ற கொஞ்சம் உயர்தர ஹோட்டல் செயின் என்றால் 12000-13500 இலங்கை ரூபாக்கள். இதுதான், இலங்கையின் சாதாரண காலத்தில் இருந்த விலைக் கணக்கு.

இந்தக் கணக்கில் நீங்கள் ஒரு அறையை எடுத்துக்கொண்டால் அந்த நாள் முழுவதும் நீச்சல் தடாகம், gym, கடற்கரைக் குளியல், ரூம் சர்வீஸ் (எதை வேண்டுமானாலும் அறையில் இருந்தபடி பெற்றுக்கொள்ளலாம்), தவிர கொஞ்சம் மேலதிகப் பணம் செலுத்தி பல water sports மற்றும் spa, souna, bar, போன்ற சேவைகளையும் பெற்றுக்கொள்ளலாம். நம் நாட்டின் சுற்றுலாத்துறை அதிகமாக விரும்பப்படுவதற்கு இதுவும் ஒரு காரணம். இது எப்போது, கொரோனாவுக்கு முன்னர்.

ஆனால் பாருங்கள், இப்பொழுது இந்த ஹோட்டல் quatantine க்கு ஒரு நாளைக்கு நான் மேலே சொன்ன உயர்தர ஹோட்டகளின் விலையில்தான் பணம் செலுத்த வேண்டியிருக்கிறது. ஒரு நாளைக்கு 12’500 இலங்கை ரூபாய். நீங்கள் ஹோட்டலுக்கு வந்ததும் முதலில் இதை மொத்தமாக (175’000) செலுத்திவிட வேண்டும். அதன் பின்னர்தான் உங்களை அறைக்கு அழைத்துப் போவார்கள்.

சரி, இவ்வளவு பணம் செலுத்தியிருக்கிறோமே, என்னென்ன சேவைகள் கிடைக்கும் என்றால் அது பெரும் துயரம்.

– நீங்கள் அறைக்குள் இருந்து வெளியே வர முடியாது.

– சாப்பாடு set-menu. அவர்களே அதை தீர்மானித்து வைத்திருக்கிறார்கள். நீங்கள் மெனுவில் கையடிக்க முடியாது. மூன்று நேர சாப்பாடும் அறைக்கு வரும். இல்லை, அறைக்கு முன்னால் இருக்கும் ஒரு மேசையில் கொண்டுவந்து வைத்துவிட்டுப் போவார்கள். தவிர, ஒரு plate கூட கொடுக்க மாட்டார்கள். ஹாஜியார் கடையில் வாங்கும் சோத்துப் பார்ஸல் போல் இருக்கும் உங்களுக்கு வரும் சாப்பாட்டுப் பொதி. பேப்பரும், லஞ்ச் ஷீட்டும், பிளாஸ்டிக் கோப்பைகளும் அறையில் நிறைந்து போய்க் கிடக்கிறது. அவ்வளவு வேஸ்ட், ஆனால் நமக்குக் கிடைக்கும் சாப்பாட்டுக்கு அதிக பட்சம் 250 ரூபாய் தாண்டாது.

– மினி பார் வெறுமையாக இருக்கும். ஆனால் விலைப் பட்டியல் அதன்மேல் வைக்கப்பட்டிருக்கிறது. அழைத்துக் கேட்க வேண்டும். தவிர, இரவில் ரூம் சர்வீஸ் இல்லை என்று சொல்லிவிட்டார்கள்.

– சரி, பகலில் குடிப்பதற்கு ஒரு Coca cola அனுப்பி வையுங்கள் என்றால், ‘அதற்கு நீங்கள் மேலதிகமாக பணம் செலுத்த வேண்டும், அதைச் செலுத்திய பிறகுதான் டிலிவரி செய்வோம், சார்’ என்று பதில் வரும். இப்படித்தான் ஒரு நட்சத்திர விடுதியில் ஒருவாரமாகக் குளிர்பானம் குடித்துக்கொண்டிருக்கிறேன்.

– gym க்கு போக முடியாது.

– முன்னால் மனிதர்கள் அற்ற கடற்கரை. ஒரு பத்து நிமிடமாவது அங்கே நடப்பதற்கு அனுமதியில்லை. ஆனால், திரும்பும் இடமெல்லாம் அரச படைகள் காவல் காக்கிறார்கள். பிறகெதற்கு இவ்வளவு பயம்?

– இரண்டு வாரங்களுக்கு அறையைச் சுத்தம் செய்ய மாட்டார்கள். Toilet, shower என அத்தனையையும் நீங்களாகவே துப்பரவு செய்து பேணவேண்டும்.

இவர்களுக்குத் தெரிகிறதோ இல்லையோ, இது பணத்தை மட்டும் முன்வைத்து நடாத்தப்படும் ஒரு மிகப்பெரிய பிசினெஸ் என்பது இங்கு வரும் அத்தனை பேருக்கும் வெளிப்படையாகவே புரிந்து விடுகிறது. அதேவேளை, நாளை வேற்றுநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகிறார்களாம். கவனியுங்கள், அவர்களுக்கு 14 நாட்கள் ஹோட்டல் தனிமைப்படுத்தல் இல்லை. விமான நிலையத்தில் நடாத்தப்படும் வெறும் pcr சோதனையோடு இலங்கையைச் சுற்றிப்பார்க்கப் புறப்பட்டுவிடுவார்கள். வாழ்க சுற்றுலாத்துறை. இலங்கையர்கள் நாங்களோ 175’000 கட்டி இரண்டு வாரங்கள் ஹோட்டலில் தேவுடு காத்துக்கொண்டிருக்கிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here