இரண்டு குளங்கள் உடைப்பெடுத்ததால் வாகரை விவசாயிகள் பாதிப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை கமநல சேவை பிரிவுக்குட்பட்ட எல்லத்துமடு குளம் மற்றும் சாம்பல்கேணி குளம் ஆகிய இரண்டு குளங்களும் உடைப்பெடுத்ததன் காரணமாக இரண்டு குளத்தை நம்பி விவசாயம் செய்யும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எல்லத்துமடுப் பகுதியில் சுமார் 300 ஏக்கர் விவசாய செய்கையில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் தற்போது ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக எல்லத்துமடுகுளம் உடைப்பெடுத்ததன் மூலம் வேளாண்மை அனைத்தும் மணலினால் மூடப்பட்டு காணப்படுகின்றது.

அத்தோடு குளத்திற்குள் நீர் இல்லாமையினாலும், ஓரிரு தினங்களில் மழை இல்லாமல் போனால் விவசாயத்தினை கைவிட வேண்டிய நிலை காணப்படுகின்றது. இதில் 300க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலத்தில் 125 விவசாயிகள் குறித்த குளத்தை நம்பி விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோன்று சாம்பல்கேணி குளத்தை நம்பி 800க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாயம் செய்யப்பட்ட நிலையில் குறித்த குளமானது வெள்ளப்பெருக்கு காரணமாக உடைப்பெடுத்ததன் மூலம் குறித்த குளத்தில் உள்ள அனைத்து நீரும் வயல் பிரதேசத்திற்கு பாய்ந்த நிலையில் குளம் நீர் குறைந்து காணப்படுகின்றது.

இங்கு 250க்கும் மேற்பட்ட விவசாயிகள் குறித்த பகுதியில் வேளாண்மைச் செய்கை செய்து இருந்தாலும் சுமார் இருபதுக்கும் மேற்பட்ட விவசாயிகளின் விவசாய காணிக்குள் மணல் பரந்து உள்ளதன் காரணமாக குறித்த பகுதி விவசாய செய்கையை கைவிட வேண்டிய நிலையில் விவசாயிகள் காணப்படுகின்றனர்.

சாம்பல்கேனி குளத்தில் நீர் வற்றியதன் காரணமாக எதிர்காலத்தில் குறித்த பகுதியில் மழை இல்லாத நிலைமை காணப்படுமாக இருந்தால் சுமார் 700க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலத்தை கைவிட வேண்டிய நிலையில் விவசாயிகள் காணப்படுகின்றது.

எனவே குறித்த எல்லத்துமடு குளம் மற்றும் சாம்பல்கேணி குளம் ஆகிய இரண்டு குளங்களையும் புனரமைப்பு செய்ய உடனடியான உரிய அதிகாரிகள் கவனம் செலுத்துமாறு விவசாயிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here