யாழ்ப்பாண மாநகரசபை முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் இணக்கம் ஏற்பட்டிருந்தாலும், நல்லூர் பிரதேசசபை தவிசாளர் யார் என்பதில் இன்னும் இணக்கம் ஏற்படவில்லை.
இது தொடர்பில் தீர்க்கமான- சுவாரஸ்யமான கலந்துரையாடல்கள் நேற்று நடந்ததை தமிழ்பக்கம் அறிந்தது.
முதலாவது கலந்துரையாடல், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களிற்கிடையில் நடந்தது. இதன்போது, யாழ் மாநகரசபை முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் இணக்கம் ஏற்படவில்லை.
நல்லூர் பிரதேசசபை சர்ச்சை குறித்து தமிழ்பக்கத்தில் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம்.
நல்லூர் பிரதேசசபைக்குள் கூட்டமைப்பிற்குள் உள்ள சிக்கலை அதில் குறிப்பிட்டிருந்தோம்.
நல்லூரில் தவிசாளராக தமிழ் அரசு கட்சியின் தியாகமூர்த்தி செயற்பட்டார். ரெலோ சார்பில் தெரிவான கு.மதுசுதன் தவிசாளர் பதவியை குறிவைத்து, எதிர் தரப்புக்களுடனும் பேசி, வரவு செலவு திட்டம் தோல்வியடைய பின்னணியில் செயற்பட்டார் என தமிழ் அரசு கட்சி குற்றம்சாட்டுகிறது.
மதுசுதன் தம்முடன் எப்படியான டீலிங்கில் ஈடுபட்டார் என்பதை தமிழ் அரசு கட்சி உறுப்பினர்கள் மாவை சேனாதிராசாவிடமே நேரில் தெரிவித்திருக்கிறார்கள். அதுபோல எதிர்தரப்பிலுள்ள கட்சிகளின் உறுப்பினர்களும் தத்தமது தலைமைக்கு இதேவிதமான தகவலை வழங்கியுள்ளனர்.
இவர்களால் வழங்கப்பட்ட தகவல் அனைத்திலும் எப்படியான டீல் பேசப்பட்டது என்பது பற்றி ஒரேவிதமான தகவலே வழங்கப்பட்டுள்ளது.
நல்லூர் பிரதேசசபையில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைமைகளிடமிருந்து தமிழ்பக்கம் பெற்ற தகவலின் அடிப்படையில், அனைத்து உறுப்பினர்களிற்கும் வழங்கப்பட்டுள்ளது ஒரு சுவாரஸ்ய உறுதிமொழி.
அது- “நான் தவிசாளர் ஆனதும் எனது பிக்கப் வாகனத்தை நீங்களும் பாவிக்கலாம்“ என்பது!
கடந்த பொதுத்தேர்தலில் ரெலோ தேசிய அமைப்பாளர் சுரேனின் வலது கையாக மதுசுதன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தற்போது ரெலோவில் தீர்மானம் எடுக்கும் முக்கிய நபர்களில் சுரேனும ஒருவர். தேர்தல் கால செஞ்சோற்று கடனிற்காக மதுசுதனை தவிசாளர் ஆக்கி விட முயற்சிக்கிறார். சுரேன் சொன்னால் கட்சிக்குள் மறுபேச்சு கிடையாது என்பதால், அது கட்சி முடிவாக குறிப்பிடப்படுகிறது.
நேற்றைய பேச்சுவார்த்தையில், மதுசுதனை தவிசாளராக்க ரெலோ பரிந்துரைத்தது. எனினும், தமிழ் அரசு கட்சி அதை நாசூக்காக மறுத்தது. பந்தை ஐங்கரநேசனின் பக்கத்திற்கு தட்டிவிட்டது. “மதுசுதன் தவிசாளர் ஆகுவதை தமிழ் தேசிய பசுமை இயக்கம் விரும்பாது, அவருக்கு ஆதரவளிக்காது, அதனால் தோல்வியடைவோம், வேறொரு வேட்பாளரை களமிறக்குவோம். ரெலோவிலேயே வேறு ஆட்களும் இருக்கிறார்கள்தானே“ என குறிப்பிட்டு, ரெலோவின் இன்னொரு உறுப்பினரை தமிழ் அரசு கட்சி சார்பில் பரிந்துரைக்கப்பட்டது.
அத்துடன், தமது தவிசாளருக்கு எதிராக சதி செய்ததால், அவரை நியமிப்பது பொருத்தமில்லையென்றும் குறிப்பிட்டனர்.
எனினும், ரெலோவின் வேறொரு உறுப்பினரை தவிசாளராக்க ரெலோ உடன்படவில்லை. அடைந்தால் சீதேவி, இல்லையேல் மரணதேவி என்பதை போல, மதுசுதன்தான் தமது தெரிவு என விடாப்பிடியாக நின்றார்கள்.
எப்படியோ, தமிழ் அரசு கட்சி அரசியல்வாதிகள் எல்லோரும் பழம் தின்று கொட்டை போட்டவர்கள் அல்லவா. அவர்கள் நாசூக்காக காய் நகர்த்தி விட்டார்கள்.
“எமக்கு இதில் இருக்கும் ஆட்சேபணையை விட, யதார்த்தம் முக்கியம். நாம் ஆதரிக்கிறோம், எதிர்க்கிறோம் என்பதை விட, வெற்றிபெறுவது முக்கியம். அதற்கு தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் ஆதரவு தேவை. அவர்கள் உங்கள் வேட்பாளரை ஆதரிக்கிறார்களா என்பதே முக்கியம். அதை நீங்கள் உறுதிசெய்து கொள்ளுங்கள்“ என்ற சாரப்பட ரெலோவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக, தமிழ் அரசு கட்சி பிரமுகர் ஒருவர் தமிழ் பக்கத்திடம் தெரிவித்தார்.
சரி, நாம் தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசனிடம் பேசிவிட்டு வருகிறோம் என ரெலோ தரப்பினர் புறப்பட்டனர்.
நேற்றைய கூட்டம் அத்துடன் முடிந்தது. இனி மீண்டும் நாளை (29) கூடி இறுதி தீர்மானம் எடுப்பதென தீர்மானிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தை தொடர்ந்து, நேற்று இரவே ரெலோ தரப்பினர் பொ.ஐங்கரநேசனின் நாடிபிடித்து பார்த்துள்ளனர்.
பொ.ஐங்கரநேசன் தமது நிலைப்பாட்டை அவர்களிற்கு தெரிவித்துள்ளதாக அறிய முடிகிறது.
“ஆட்சிகளை கவிழ்ப்பதில் எமக்கு கொள்கைரீதியாக உடன்பாடில்லை. கடந்த மாகாணசபையின் இறுதிக்காலத்தில் அரசியல் காரணங்களிற்காக ஏற்படுத்தப்பட்ட குழப்பம், மாகாணசபையின் இறுதிக்கட்டத்தை குழப்பி விட்டது. இதேபோல, இன்னும் ஒரு வருடம் எஞ்சியுள்ள சபையை குழப்பி எதையும் செய்ய முடியாது. இதில் தனி நபர்களின் பெயர்களின் அடிப்படையில் நாம் முடிவெடுக்கவில்லை. இது கொள்கைரீதியான முடிவு” என்ற சாரப்பட தெரிவித்ததுடன், தம்மால் முன்மொழியப்படும் வேட்பாளர் அரசியல் ரீதியாக பொருத்தமற்றவர் என கூறப்பட்டதாக, ரெலோ தரப்பின் பிரமுகர் ஒருவர் குறிப்பிட்டார்.
ரெலோவின் தேசிய அமைப்பாளர் சுரேனின் செஞ்சோற்று கடன் தீர்க்கும் முயற்சி இம்முறை வெற்றியளிக்க வாய்ப்பில்லை.
இப்பொழுது எழுந்துள்ள கேள்வி- ரெலோ தமது கட்சிக்கு தவிசாளர் பதவி தேவையென்ற அடிப்படையில் பிறிதொரு பொருத்தமான வேட்பாளரை முன்மொழியப் போகிறதா? அல்லது, செஞ்சோற்று கடன் தீர்க்க முயன்று, கிடைக்க வாய்ப்புள்ளதையும் கோட்டை விடப் போகிறதா என்பதே!