கருணாவின் பருப்பு இனி அவியாது!

அதாவுல்லாவுக்கு வழி ஏற்படுத்தி கொடுத்தவர் கருணா, அவரின் பருப்பு இனி மேல் தமிழ் மக்களிடம் அவியாது என்று காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவித்தார்.

காரைதீவில் உள்ள அம்பாறை ஊடக அமையத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து பேசியபோது இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நடக்கவுள்ள கிழக்கு மாகாண சபை தேர்தலில் தமிழ் மக்களின் பலத்த பேராதரவுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு மகத்தான வெற்றியை ஈட்டி ஆட்சி அமைக்கும். தமிழ் தேசிய கூட்டமைப்பே முதலமைச்சர் பதவியையும் அலங்கரிக்கும். இதற்கு ஏற்றால் போல வியூகங்கள் அமைக்கப்படுகின்றன.

தமிழ் மக்களின் ஆணையை எவருக்கும் தாரை வார்த்து கொடுத்து விட கூடாது என்பதில் எமது தலைமை உறுதியாக உள்ளது. இணக்க அரசியல் பொறிமுறையை அனுசரித்து நடக்க முயன்றதாலேயே கடந்த தேர்தல்களில் பின்னடைவு நேர்ந்து இருக்கின்றது.

கருணாவின் பருப்பு இனி மேல் எமது மக்களிடம் அவிய போவதே இல்லை. அவருடைய பசப்பு வார்த்தைகள் எமது மக்களுக்கு கசத்து போய் விட்டன. இனியும் நம்பி ஏமாறவே மாட்டார்கள். கடந்த பொது தேர்தலில் அம்பாறை மாவட்ட தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்தவர் இவர். அதாவுல்லாவுக்கு வழி ஏற்படுத்தி கொடுத்தவர். தமிழ் முதலமைச்சர் வருவார் என்று அவர் உச்சரிப்பதெல்லாம் அரசாங்கத்தையும், முஸ்லிம் அரசியல் சக்திகளையும் உசுப்பேற்றுவதற்காகவே ஆகும்.

சிங்கள, தமிழ் சகோதர இன மக்களுடன் நாம் இணைந்து வாழவே விரும்புகின்றோம். அதற்காக அடங்கி ஒடுங்கியோ, எமது உரிமைகளை அடகு வைத்தோ வாழவே முடியாது. எமது முதுகில் ஏறி சவாரி செய்வதற்கு எவரும் முயலவே கூடாது. முஸ்லிம் மக்களின் நியாயமான உரிமைகளுக்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு குரல் கொடுக்கின்றது என்பதற்காக எமது கோப்பைக்குள் அவர்கள் அகப்பை வைத்து அள்ள முயல்வதை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here