கொழும்பு உயர்நீதிமன்ற மெய்நிகர் விசாரணையில் பிணை பெற்ற முதல்நபர் தமிழ் பெண்!

கொரோனா பெருந்தொற்றையடுத்து மனிதர்களிற்கிடையிலான தொடர்பை குறைத்து, தொழில்நுட்ப சாத்தியங்களை அனைத்து துறைகளும் பயன்படுத்த ஆரம்பித்துள்ளன. நீதித்துறையிலும் இப்பொழுது அது பயன்படுத்தப்படுகிறது. சிறைக்கைதிகளிற்கிடையிலும் கொரோனா தொற்று பரவிவரும் நிலையில், மெய்நிகர் (இணைய காட்சிவழி) விசாரணையில் சாதகமான முடிவை பெற்ற முதலாவது கைதி, ஒரு தமிழ் பெண்ணாவார்.

ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் இரண்டு ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த, கொழும்பு மாளிகாவத்தையை சேர்ந்த 56 வயது பெண்ணை கொழும்பு உயர்நீதிமன்றம் பிணையில் விடுவித்தது.

உயர்நீதிமன்ற நீதிபதி ஆதித்யா பதபெண்டி தனது நீதிமன்ற அறையில் இருந்து சூம் தொழில்நுட்பம் வழியாக விசாரணையை நடத்தினார்.

சந்தேகநபர் சார்பில் சட்டத்தரணி ரஞ்சித் ஹீலேஜ் பிணை கோரினார்.  அதே நேரத்தில் அரச சட்டத்தரணி நாடி அபர்ணா சுவந்துருகொட சட்டமா அதிபர் திணைக்களத்தில் உள்ள தனது அலுவலகத்திலிருந்து சமர்ப்பணம் செய்தார்.

75.7 கிராம் ஹெரோயின் தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் தனது வாடிக்கையாளர் 2018 டிசம்பர் முதல் நீதிமன்றக் காவலில் உள்ளார், ஆனால் இதுவரை அவர் மீது எந்த குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படவில்லை என்று சட்டத்தரணி ஹீலேஜ் கூறினார்.

அரச பகுப்பாய்வாளர் அறிக்கை வந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகின்றன, அவரது நீரிழிவு மருத்துவ நிலை மற்றும் இருதயவியல் பிரச்சினைகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, அவர் ஏற்கனவே இரண்டு ஆண்டுகள் விளக்கமறியலில் கழித்திருப்பதை கணக்கில் எடுத்துக்கொண்டு, பிணை வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

பிணை வழங்குவதை ஆட்சேபித்த அரச சட்டத்தரணி சுவந்துருகொட, பொலிசார் வழக்கு ஆவணங்களை பூர்த்தி செய்யாமல் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பியதால் வழக்கு தாக்கல் தாமதமானது என்று கூறினார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சந்தேகநபரை 250,000 ரூபா பெறுமதியான இரண்டு சரீரப்பிணையில் விடுவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here