தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கலந்துரையாடலில் பெரும் களேபரம்: 4 உறுப்பினர்கள் வெளிநடப்பு!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கலந்துரைாடலில் இன்று பெரும் களேபரம் ஏற்பட்டது. தர்க்கத்தின் உச்சத்தில், தமது முடிவை ஏற்காத உறுப்பினர்களை கூட்டத்தை விட்டு வெளியேறுமாறு முன்னணி தலைமை அறிவித்தது. இதையடுத்து, நான்கு உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் வெளியேறி சென்றனர்.

இந்த பரபரப்பு சம்பவம் இன்று (23) மாலை இடம்பெற்றது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாநகரசபை, நல்லூர் பிரதேசசபை உறுப்பினர்களிற்கும், கட்சி தலைமைக்குமிடையில் இன்று சந்திப்பு நடந்தது.

இதன்போது, யாழ் மாநகரசபை விவகாரம் முதலில் ஆராயப்பட்டது.

தமிழ் தேசய மக்கள் முன்னணி சார்பில் ஒரு முதல்வர் வேட்பாளரை நிறுத்த வேண்டும் என ஒரு தரப்பினர் கோரினர். இன்னொரு தரப்பினர் அதை எதிர்த்தனர்.

இதன்போது, கட்சி தலைவர் கஜேந்திரகுமார், செயலாளர் கஜேந்திரன் ஆகியோர் தலையிட்டு, தமது இறுதி முடிவு இவை என சில முடிவுகளை அறிவித்தனர்.

யாழ் மாநகரசபையில் ஆனல்ட், நல்லூர் பிரதேசசபை தவிசாளராக தியாகமூர்த்தி நிறுத்தப்பட்டால் எதிர்த்து வாக்களிப்பதுடன், பின்னர் வரவு செலவு திட்டத்தையும் எதிர்க்க வேண்டும்.

யாழ் மாநகரசபையில் கூட்டமைப்பு போட்டியிடும்போது, ஈ.பி.டி.பி போட்டியிட்டா்ல் நாம் வாக்களிப்பில் கலந்து கொள்ளாமலிருக்க வேண்டும் என அறிவித்தனர்.

இதன்போது சலசலப்பு உருவானது.

முன்னணி ஏன் வேட்பாளரை நிறுத்தக்கூடாது என மாநகரசபை உறுப்பினர்கள் சிலர் போர்க்கொடி தூக்கினர்.

அப்படி வேட்பாளரை நிறுத்தும் பட்சத்தில் அவருக்கு ஆதரவாக ஈ.பி.டி.பி வாக்களித்து விடக்கூடும், ஈ.பி.டி.பி எம்மை ஆதரித்தால் அது கொள்கை முரண் என தலைமை விளக்கமளித்தனர்.

வரவு செலவு திட்டத்தற்கு எதிராக வாக்களித்தால் சபை கலந்து விடும். ஆனால் எமது வட்டார மக்களிற்கு பல வாக்குறுதிகள் வழங்கியுள்ளோம். அபிவிருத்தி திட்டங்கள் மிச்சமுள்ளன. அதனால், எதிர்த்து வாக்களிக்கக்கூடாது என அந்த உள்ளூராட்சி உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

இதற்கு பதிவளித்த கஜேந்திரகுமார், கஜேந்திரன் ஆகியோர்- மக்களின் பிரச்சனைகளை இங்கு கதைக்க வேண்டாம். வட்டார பிரச்சனையை வட்டாரத்திலேயே வைத்திருங்கள். வரவு செலவு திட்டம் தோல்வியடைந்து சபை கலைகிறது என யாரும் கவலையடைய வேண்டாம் என தெரிவித்தனர்.

எனினும், உள்ளூராட்சி உறுப்பினர்கள் விடவில்லை. கூட்டமைப்பும், ஈ.பி.டி.பியும் போட்டியிடு, நாம் ஒதுங்கியிருந்தால், சில வேளைகளில் ஈ.பி.டி.பி ஆட்சியமைக்கும். அதற்கு நாம் அனுமதிகக்கூடாது என குறிப்பிட்டனர்.

ஈ.பி.டி.பி வெற்றியடைந்து ஆட்சியமைத்தால் ஆட்சியமைக்கட்டும். அதற்காக யாரும் கவலைப்பட வேண்டாம். அப்படியொரு நிலைமை வந்தால் அதற்கான பொறுப்பை கூட்டமைப்புத்தான் ஏற்க வேண்டும். அவர்களின் நடவடிக்கையால்தான் ஈ.பி.டி.பி ஆட்சியமைக்கும் நிலைமை உருவானது என கட்சி தலைமை தெரிவித்தது.

இந்த சர்ச்சைகள் முற்றிய நிலையில், தலைமை ஒரு எச்சரிக்கை விடுத்தது.

கட்சியின் முடிவை மீறி செயற்படுபவர்கள், கட்சியின் முடிவை எதிர்த்து தாமாகவே உறுப்புரிமையை விட்டு விலகுவதாக அர்த்தப்படும். முடிவை ஏற்காதவர்கள் இப்பொழுதே பதவிவிலகல் கடிதத்தை எழுதி தாருங்கள் என தலைமை குறிப்பிட்டது.

எனினும், சர்ச்சை முடிவற்று நீண்டு கொண்டிருந்ததையடுத்து, தாம் முன்னர் அறிவித்ததே முடிவு என கஜேந்திரனும், கஜேந்திரகுமாரும் அறிவித்ததுடன், அந்த முடிவை ஏற்காதவர்கள் கூட்டத்தை விட்டு வெளியேறுமாறு அறிவித்தனர்.

இதையடுத்து 4 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

கடந்த தேர்தலில் தாம் வட்டாரம் வட்டாரமாக வேலை செய்ததாலேயே நீங்கள் வெற்றியடைந்தீர்கள் என்பதை நினைவில் வைத்தருங்்கள் என கஜேந்திரகுமார், கஜேந்தரனை நோக்கி கூறிவிட்டு அவர்கள் வெளியேறினர்.

இதன் பின்னர் நல்லூர் பிரதேசசபை விவகாரம் ஆராயப்பட்டது.

நல்லூர் பிரதேசசபையை கைப்பற்ற வாய்ப்புள்ளதால், தமக்கு சந்தர்ப்பம் தர வேண்டுமென அந்த சபை உறுப்பனர்கள் சிலர் கோரினர். எனினும், கட்சி தலைமை அதை ஆதரிக்கவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here