காளியின் துணையுடன் இராவண மன்னனின் மருத்துவ முறை: கேகாலை கொரோனா மருந்தின் சுவாரஸ்ய பின்னணி!

தம்மிக்க பண்டார என்ற பெயர் இந்த நாட்களில் முழு இலங்கையிலும் பிரபலமாகி விட்டது. காரணம் கொரோனா மருந்து.

கொரோனாவிற்கு மருந்து தயாரித்தேன் என அவர் கூற, சுகாதார அமைச்சர் அதை டெஸ்டோ, டேஸ்டோ செய்ய, கடந்த செவ்வாய்க்கிழமை (8) அவரது வீட்டின் முன்பாக சுமார் 10,000 பேர் கூடியது வாசகர்கள் அறிந்ததே.

டிசம்பர் 2ஆம் திகதி சுகாதார அமைச்சில் நடந்த நிகழ்வில், மருந்தை பரிசோதிக்க 5 பேர் கொண்ட வல்லுனர்கள் குழு அமைக்கப்பட்டிருந்தது. பேராசிரியர் சௌரோஜ் ஜெயசிங்க, பேராசிரியர் லேகஹவசம், பேராசிரியர் ஜனக டி சில்வா, பேராசிரியர் சாம் குலரத்ன மற்றும் பேராசிரியர் கமணி வனிகசூரியா ஆகியோர் இந்த குழுவில் உறுப்பினர்களாக உள்ளனர்.

இந்த குழுவின் அறிக்கை இன்னும் கிடைக்காததால் மருந்து விநியோகத்தை நிறுத்தும்படி, கேகாலை மாவட்ட செயலாளர் அறிவித்த பின்னரே மருந்து விநியோகம் நிறுத்தப்பட்டது.

இருப்பினும், ஆயுர்வேத கொரோனா கட்டுப்பாட்டு குழு தம்மிக பண்டாரா தயாரித்த மருத்துவ தேனை கொரோனா நோயாளிகளுக்கு ஒரு துணை மருந்தாக வழங்க அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது. இதை அரசு ஆயுர்வேத மருத்துவ அலுவலர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் ஹெந்தவிதார தெரிவித்ததோடு, சுதேச மருத்துவ ஊக்குவிப்பு மற்றும் பொது சுகாதாரத்துறை அமைச்சர் சிசிர ஜெயகோடி உறுதிப்படுத்தினார்.

மேலும், ஆயுர்வேத திணைக்களத்தின் வல்லுநர்கள் குழு டிசம்பர் 09 அன்று வைத்தியர் தம்மிக பண்டாரவின் வீட்டிற்கு சென்று இந்த மருந்து எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்பதை அறிந்து கொண்டது.

கேகாலையின் ஹெட்டிமுல்லவில் உள்ள உடுவகம பகுதியில் வசிக்கும் தம்மிக பண்டார, உண்மையான பெயர் அப்புகுட்டி கங்கனம்ல தனபால. இரண்டு பிள்ளைகளின் தந்தை.

கிராமத்தில் அவர் மிகவும் பிரபலமானவர். ஆனால் வைத்தியராக பிரபலமல்ல. தச்சு, நடனம் மற்றும் பொம்மலாட்டம் மற்றும் நன்றாகப் பாடக்கூடிய ஒரு கலைஞராக அவர் கிராமத்தில் பிரபலமான நபராக இருந்தார். அவரது வாழ்வாதார தொழில் தச்சு.

சில வருடங்களின் முன்னர் காளியம்மன் கனவில் வந்து கூறியது என, ஒரு காளி கோயிலை கட்டினார். காளி அம்மன் கோயில் என அது அழைக்கப்படுகிறது.

தம்மிக்க பண்டார மீது காணி மோசடி வழக்கு ஒன்றும் உள்ளது. சில காலம் விளக்கமறியலிலம் இருந்தார். பின்னர், வழக்கை தீர்த்து வைத்துள்ளார் என்கிறார்கள்.

உள்ளூர் மருத்துவராகவோ அல்லது பாரம்பரிய குணப்படுத்துபவராகவோ கிராமத்தில் செல்வாக்கு இல்லாத இவர், கொரோனா வைரஸைக் குணப்படுத்த ஒரு மருந்தை உருவாக்கி மருத்துவராக நாடாளாவிய ரீதியின் பேசப்படுபவராகியுள்ளார்.

தம்மிகா பண்டார கொரோனா மருந்துடன் தொடர்புபட்டது ஒரு சுவாரஸ்ய சம்பவத்தின் மூலம்.

இலங்கையின் முதலாவது கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட முதல் நபராக அடையாளம் காணப்பட்ட சுற்றுலா வழிகாட்டியின் தொடர்பாளருக்கு, தம்மிக்க பண்டார மருந்து வழங்கியுள்ளார்.

சுற்றுலா வழிகாட்டியின் நெருங்கிய தொடர்பாளர்கள் 11 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களில் ஒருவர் தப்பியோடினார். காய்ச்சல், இருமல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் போன்ற கொரோனா அறிகுறிகளுடன் அவர் தப்பியோடியிருந்தார்.

தப்பி ஓடியவர் மற்றொரு வியாதிக்கு சிகிச்சை பெற தம்மிக பண்டாரவைப் பார்க்கச் சென்றிருந்தார். அவர் பின்னர் குணமடைந்து விட்டார்.

“கொரோனா நோயின் அறிகுறிகளை நான் அறிந்தேன். அதனால்தான் அவருக்கு இந்த மருந்து கொடுத்தேன். நான் 3 நாட்களுக்கு மருந்து கொடுத்தபோது, ​​நோயாளி முழுமையாக குணமடைந்தார். அதுவே எனது முதல் சோதனை” என்றார் தம்மிக பண்டார.

இந்த ஆண்டு மார்ச் மாதம் இலங்கையின் முதல் கொரோனா நோயாளி கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், தம்மிக பண்டார எப்படி அவ்வளவு விரைவில் கொரொனா மருந்து தயாரிக்க முடிந்தது என்ற இயல்பான சந்தேகத்தை எழுப்பினால்,

“கொரோனா வைரஸ் சீனாவில் பரவிக்கொண்டிருந்த அதே நேரத்தில் நான் இந்த மருந்தை தயாரித்தேன். அதாவது ஜனவரி முதல் பெப்ரவரி வரை. ஆனால் டிசம்பர் முதல் இதற்கு நான் தயாராகி வருகிறேன். இந்த வைரஸ் உலகம் முழுவதும் செல்வதை நான் முன்கூட்டியே பார்த்தேன். அவைரஸ் விரைவில் இலங்கைக்கு வரும் என்று எனக்குத் தெரியும்.” என அசால்ட்டாக பதிலளிக்கிறார் அவர்.

அதன் பின்னர் அவர் தொடர்ந்து இந்த மருந்தை தயாரித்து வருகிறார்.

இதற்கிடையில், வாதுபிட்டிவல மருத்துவமனையின் கொரோனா சிகிச்சை பிரிவின் வைத்தியர் தம்மிக குமாரவின் நண்பரான கேகாலையை சேர்ந்த ஒருவர், தம்மிக்க பண்டார குறித்து தகவல் தெரிவித்தார்.

அந்த நண்பரும் சுவாச நோயால் பாதிக்கப்பட்டு, தம்மிக பண்டாரவின் மருந்தைப் பயன்படுத்தி குணமடைந்துவிட்டார்.

வைத்தியர் தம்மிக்க குமார முதலில் இதில் அதிக கவனம் செலுத்தவில்லை. என்றாலும், இந்த மருந்தைப் பயன்படுத்தி குணமடைந்தோம் என கூறும் சிலரை சந்தித்த பின்னர் தம்மிக பண்டாரவைப் பார்க்க, வைத்தியர் தம்மிக குமார முடிவு செய்தார்.

பின்னர், வதுபிட்டிவால மருத்துவமனையின் கொரோனா நோயாளிகளுக்கு தம்மிக பண்டாரவின் மருந்தை வழங்கவும், மருத்துவ பரிசோதனை செய்யவும் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, வதுபிட்டிவால மருத்துவமனையில் உள்ள கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் 144 நோயாளிகளுக்கு இந்த மருத்துவ தேன் வழங்கப்பட்டது.

ஒரு நாளைக்கு இரண்டு முறை 1 தேக்கரண்டி வீதம், 3 நாட்களுக்கு மருந்து தேன் கொடுத்த பிறகு, 6 நாளின் பின் நோயாளிகள் பி.சி.ஆர் சோதனைக்குட்பட்டனர். இதன்போது, அவர்களிடம் வைரஸ் பெருமளவு இல்லாமலாக்கப்பட்டது தெரிய வந்தது.

இதேவேளை, இந்த மருந்தை அருந்தாதவர்களிடம் 6 நாளின் பின் நடத்தப்பட்ட பிசிஆர் சோதனையில், அவர்களில் வைரஸ் இருந்தது தெரிய வந்தது.

அப்போதிருந்துதான் தம்மிக பண்டாரவின் மருந்து பற்றிய உரையாடல் தொடங்கியது.

இந்த மருந்து கொரோனா நோயாளிகளுக்கு மட்டுமல்ல, மற்றவர்களுக்கும் ஏற்றது என்று தம்மிக பண்டார கூறுகிறார். கொரோனா நோயாளிகள் காலையிலும் மாலையிலும் 1 தேக்கரண்டி வீதம் 3 நாட்களுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். கொரோனாவுக்கு ஆளாகாதவர்கள் காலையிலும் மாலையிலும் ஒரு நாளைக்கு 1 தேக்கரண்டி வீதம் 2 முறை எடுத்துக் கொள்ள வேண்டும். சிறு குழந்தைகளுக்கு 1 தேக்கரண்டி கொடுக்க வேண்டும்.

காளித் தாயின் அருளைப் பயன்படுத்தி சிகிச்சை வழங்குவதாக தம்மிக்க பண்டார தெரிவித்துள்ளார். பண்டைய இராவண மன்னனின் சிகிச்சை முறையிலிருந்து தற்போதைய மருந்தை தயாரித்துள்ளதாகவும், கடந்த 25 ஆண்டுகளாக அதை உருவாக்கி வருவதாகவும் கூறுகிறார்.

எவ்வாறாயினும், விஞ்ஞான ஆராய்ச்சி உறுதிப்படுத்தும் வரை இந்த மருந்தை குடிக்க வேண்டாம் என்று ஆரம்ப சுகாதார பராமரிப்பு மற்றும் தொற்றுநோயியல் துறை அமைச்சர் வைத்தியர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ள பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

தம்மிக பண்டார உருவாக்கிய கொரோனா எதிர்ப்பு மருந்து இன்னும் ஆராய்ச்சி நிலையில் உள்ளது என்றும், ஆராய்ச்சியில் மருந்து வெற்றிகரமாக இருப்பதாகத் தெரியவில்லை என்றும் தொற்றுநோயியல் பிரிவின் தலைமை மருத்துவ அதிகாரி சுதத் சமரவீர சமீபத்தில் (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here