வாழைச்சேனை களேபரம்: சினிமா பாணியில் நடந்த பரபரப்பு சம்பவங்கள்!

“வாழைச்சேனை பிரதேசசபைக்கு வரவே பயமாக உள்ளது. பெண்களிடமிருந்து எமக்கு பாதுகாப்பு கோரும் நிலைமையில் இருக்கிறோம். தவிசாளரின் நடவடிக்கைகள் அவ்வளவு மோசமாக உள்ளன. பிரதி தவிசாளரை அவரே கட்டிப்பிடித்துவிட்டு, பொய் முறைப்பாடளித்துள்ளார். நடிப்பில் ஜெயலலிதாவையும் மிஞ்சி விட்டார்“

இவ்வாறு வாழைச்சேனை பிரதேசசபை உறுப்பினர்கள் பகிரங்கமாக குற்றம்சாட்டுகிறார்கள்.

கடந்த ஒரு வாரமாகவே கிட்டத்தட்ட போர்க்களமாக மாறி விட்டது வாழைச்சேனை பிரதேசசபை. வரவு செலவு திட்டத்தை நிறைவேற்ற போதிய பெரும்பான்மை இல்லையென்று தெரிந்ததும், எந்த மட்டத்திற்கும் இறங்கி செயற்படுவதற்கு பிள்ளையான் தரப்பு தயாரானதே இவ்வளவு களேபரத்திற்கும் காரணம்.

வாழைச்சேனை பிரதேசசபையில் 23 உறுப்பினர்கள். அதில் 8 பேர் ஆளும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினர். ஏனையவர்கள் எதிர்க்கட்சியினர். வாழைச்சேனை பிரதேசசபையில் அனேக எதிர்க்கட்சியினர், தவிசாளரின் நடவடிக்கைகளிற்கு எதிராக இருக்கிறார்கள். சபை நடவடிக்கைகளில் பல ஊழல் குற்றச்சாட்டுக்களை சுமத்துகிறார்கள்.

அது தவிர, பிரதேசசபை ஊழியர்களும் பிள்ளையான் தரப்பினால் நியமிக்கப்பட்டவர்களே பலர். அதனால் அங்குள்ள சிலர் அரச ஊழியர்களாக அல்லாமல், பிள்ளையான்குழு உறுப்பினர்களை போல செயற்படுகிறார்கள், அதைவிட மேலும் சில குண்டர்படையினர் சபை உறுப்பினர்களை மிரட்டுகிறார்கள், அவர்கள் தவிசாளரின் ஆதரவாளர்களாக இருக்க வேண்டும்- ஏனெனில், தவிசாளரின் அலுவலகத்தில் அடிக்கடி காண முடிகிறது என உறுப்பினர்கள் குற்றம்சுமத்துகிறார்கள்.

இந்த தகவல்களை கேட்க- தென்னிந்திய சினிமாவில் வரும் கட்டப்பஞ்சாயத்து அரசியல்வாதிகளும், காட்சிகளும் உங்களிற்கு நினைவிற்கு வரலாம். அதையொட்டிய நிலவரம்தான் “வாழைச்சேனை அரசியலிலும்“ உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.

கடந்த ஒரு வார களேபரத்தை கவனித்த போது ஒன்று புலப்பட்டது. அனேக எதிர்க்கட்சி உறுப்பினர்களின் முறைப்பா, “வெளியால வா உன்னை கவனிக்கிறோம்“, “நீ எங்கயாவது மாட்டுவாய் தானே“ என்ற மிரட்டல்கள் தமக்கு விடப்படுவதாக. பிள்ளையானின் விடுதலை, அவரது குழுவினரை “கொஞ்சம் உற்சாகம்“ அடைய வைத்து விட்டதோ என்ற கேள்வியை இது எழுப்புகிறது.

இம்முறை வரவு செலவு திட்டம் நவம்பர் 30ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவிருந்தது. எப்படி வரவு செலவு திட்டத்தை ஒத்திவைக்கலாமென தலையை போட்டு பிய்த்துக் கொண்டிருந்த தவிசாளருக்கு, கொரோனா கையில் கிடைத்தது. 29ஆம் திகதி திடீரென ஒரு அறிவித்தல் விடுத்தார். கொரோனா பரவல் அபாயமுள்ளதால் பிரதேசசபை கூட்டத்தை ஒத்திவைக்கிறேன் என். 29ஆம் திகதி மாலை 6 மணியளவிலேயே பிரதேசசபை உறுப்பினர்களிற்கு கடிதம் கையளிக்கப்பட்டது.

கொரோனா அபாயமுள்ளதால் கூட்டததை ஒத்திவைக்கும்படி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி கேட்கவில்லை. தவிசாளரே தன்னிச்சையாக அறிவித்தார். கொரோனா நிலவரம் தொடர்பான நடவடிக்கைகளை சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் கொரோனா செயலணியே கையாளும் தேசிய கொள்கை நடைமுறையிலுள்ள நிலையில், தவிசாளர் தன்னிச்சையாக இந்த நடவடிக்கையை மேற்கொண்டார்.

தவிசாளரின் இந்த நடவடிக்கை பொதுமக்களை பீதியடைய செய்யும் நடவடிக்கை என, பிரதேசசபை உறுப்பினர்களால் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சபை 8ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 11 உறுப்பினர்கள் உள்ளனர். எதிராக 12 உறுப்பினர்கள் உள்ளனர்.

8ஆம் திகதி மீண்டும் சபை கூடிய போது, எதிரணியில் ஒருவரை குறைக்க இன்னொரு யுக்தியை ஆளும் தரப்பு மேற்கொண்டது. வரவு செலவு திட்டத்தை எதிர்க்கும் சபை பிரதி தவிசாளர் மீது, நீதிமன்றத்தில் முன்னிலையாகாத குற்றச்சாட்டு உள்ளது.

“8ஆம் திகதி அந்த விவகாரம் திடீரென பொலிசாரால் தூசு தட்டப்பட்டு, அவரை கைது செய்ய பிரதேசசபை வாயிலில் பொலிசார் நிற்கிறார்கள். ஆளுந்தரப்பின் பின்னணியிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது“ என எதிர்தரப்பில் அன்று மீளவும் ஒரு பரபரப்பு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

அன்று பிரதேசசபை வாயிலில் பொலிசார் நின்றிருந்தனர். அனேகமாக, பிரதி தவிசாளர் சபைக்கு வரும் போது கைது செய்வதுதான் பொலிசாரின் நோக்கமாக இருந்திருக்கலாம்.

இதற்குள், பிரதி தவிசாளரின் நடவடிக்கைகளை பிள்ளையான் குழு உறுப்பினர்கள் கண்காணித்துக் கொண்டிருந்தனர். அவர்களும் சபை பகுதியில் நடமாடிக் கொண்டிருந்தனர்.

ஒரு உறுப்பினரை சபைக்கு வரவிடாமல் செய்தால், வரவு செலவு திட்டத்தை எப்படியாவது நிறைவேற்றி விடலாமென தவிசாளர் நினைத்திருக்கலாம்.

இதேவேளை, பிள்ளையானின் சகோதரர், வாழைச்சேனை பிரதேசசபை உறுப்பினர், மற்றுமொருவர் பிரதிதவிசாளர் இல்லாத நேரத்தில் வீட்டுக்கு சென்று மிரட்டல் விடுத்ததாகவும் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தன்னை பிரதேசசபைக்குள் நுழைய விடாமல், வாயிலிலேயே “அமுக்க“ பலர் காத்திருந்ததை அறிந்த பிரதி தவிசாளர், சினிமா பாணியில் சில நடவடிக்கைகள் மேற்கொண்டார். கண்காணித்தவர்களின் கண்ணில் மண்ணை தூவி மாற்று பாதைகளால் சென்று, பிரதேசசபையின் பின்பகுதியினால் நுழைந்துள்ளார்.

அன்றைய தினம், காலையிலேயே சபை மண்டபத்திற்கு வந்த பிள்ளையான் தரப்பு, சபா மண்டப  மற்றும் பிரதான கதவுகளை பூட்டி விட்டது. எதிர்தரப்பை வெளியில் தாமதிக்க வைக்கும் சமயத்தில், காலை 9 மணிக்கு தமது உறுப்பினர்களை வைத்து வரவு செலவு திட்டத்தை நிறைவேற்றுவதே அவரது திட்டம்.

ஆனால், எதிரணி உறுப்பினர்கள் பிரதான கதவை தள்ளி திறந்து, மண்டப கதவையும் தள்ளி திறந்து கொண்டு உள் நுழைந்தனர். இதன் போதே, பிரதி தவிசாளர் உள்நுழைந்தார். முக்கிய தருணத்தில் எம்.ஜி.ஆர் கயிற்றைப் பிடித்து தொங்கியபடி வருவாரே… அப்படி வந்தார்!

பிரதி தவிசாளர் வாயிலில் பொலிசாரால் கைது செய்யப்பட்டு விடுவார் என தவிசாளர் நினைத்திருந்தாரோ என்னவோ, பிரதி தவிசாளரை கண்டதும் அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதன்பின்னரே அந்த சர்ச்சைக்குரிய “கட்டிப்பிடி“ சம்பவம் நடந்தது.

வாழைச்சேனை தவிசாளர் பொலிசில் கொடுத்த முறைப்பாட்டின்படி- பிரதிதவிசாளர் தன்னை கட்டிப்பிடித்ததாக கூறியுள்ளார்.

ஆனால், சபையிலுள்ள எதிரணியினர் அதை மறுக்கிறார்கள். பிரதி தவிசாளர் வருவதை கண்டதும், உள்ளேயிருந்த தவிசாளர் ஓடோடி வந்து, பிரதி தவிசாளரை கட்டிப்பிடித்து, “ஓடி வாங்கடா.. ஓடி வாங்கடா… அடியுங்கள்“ என கூக்கிரலிட்டதாகவும், அதை கண்கண்ட சாட்சியமாக தாமிருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன்பின்னரே, தனது ஆடைகள் கிழிக்கப்பட்டதாக கூறி தவிசாளர் முறைப்பாடு செய்தார். உபதவிசாளரும், இன்னொரு உறுப்பினரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

எதிர்தரப்பிலுள்ள இரண்டு பேரை குறைப்பதற்காகவே இந்த முறைப்பாட்டை செய்ததாக எதிர்தரப்பினர் குற்றம்சாட்டுகின்றனர்.

இதன் பின்னர் நேற்று (11) மீண்டும் வரவு செலவு திட்ட அமர்வை தவிசாளர் கூட்டினார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இரண்டு உறுப்பினர்களும் விடுவிக்கப்பட்ட பின்னர் வாக்கெடுப்பை நடத்தக் கோரி எதிர்க்கட்சிகளால், உள்ளூராட்சி உதவி ஆணையாளருக்கு முறையிடப்பட்டது. அவரும் விதிமுறைகளை சுட்டிக்காட்டி, நேற்று சபை அமர்வை நடத்த முடியாததை கடிதம் மூலம் அறிவித்தார்.

ஆனால் கதிரையை காப்பாற்ற எதையும் செய்வோம் என, அந்த கடிதத்தையும் புறம்தள்ளி சபை அமர்வுகூட்டப்பட்டது.

இரண்டாம் யுத்தம்

நேற்று காலையில் எதிர்தரப்பினர் பிறிதொரு தினத்தில் சபை அமர்வினை நடாத்துமாறு தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

காலை 7 மணிக்கு ஆரம்பித்த குழப்ப நிலையானது 10.30 மணி வரை நீடித்தது. சபை மண்டபத்திற்கான பிரதான நுழை வாயிலை பூட்டி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேவேளை தவிசாளர் சோபா ஜெயரஞ்சித் இருந்த அறைக்காதவு பூட்டப்பட்டு காணப்பட்டது. “அதை அவரே பூட்டி விட்டு, நாடகமாடுகிறார். இவ்வளவு நாடகமும் ஆடியவர் இதை செய்ய மாட்டாரா?“ என எதிரணி போர்க்கொடி தூக்கியது.

ஆனால், எதிர்தரப்பே பூட்டியதாக ஆளும்தரப்பு கூறியது.

கலவரத்தினை தடுக்க பொலிசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். 9 மணிக்கு ஆரம்பமாகவிருந்த சபை அமர்வு குறித்த நேரத்திற்கு ஆரம்பிக்கப்படமுடியாதமல் அசாதாரண சூழ் நிலை காணப்பட்டது. பிரதான வீதியில் பொது மக்கள் நிறைந்து காணப்பட்டனர். சபை மண்டபம் மற்றும் வளாகத்தினுள் என்ன நடக்கிறது என்று அறிய மக்கள் ஆவலாய் இருந்தனர்.

8.30 மணியளவில் சபை மண்டபத்திற்கு பிரவேசிக்க வந்த செயலாளருக்கு அனுமதி மறுக்கப்பட்டு கோரிக்கைகளை முன்வைத்தனர். அதனை செவிமடுத்த செயலாளர் திருமதி.ப.லிங்கேஸ்வரன் அதே இடத்தில் மயக்கமடைந்து தரையில் வீழ்ந்தார்.

சம்பவ இடத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்தி குழுவின் உப தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் வந்திருந்தார். கலகத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். சபை அமர்வு ஒத்தி வைக்கப்படும் என வாக்குறி அளிக்குமாறு எதிர்க்கட்சிகள் கோரியிருந்தனர். தன்னை உள்ளே செல்ல அனுமதிக்குமாறு மீண்டும் மீண்டும் கோரினர். தவிசாளருடன் பேசிவிட்டு பதில் கூறுவதாக தெரிவித்தார். இருதரப்பிற்கும் இடையில் இவ்விடயம் இழுபறி நிலை காணப்பட்டதால் பாராளுமன்ற உறுப்பினர் அவ்விடத்தினை விட்டு விலகி சென்று சபை அலுவலகத்தில் தரித்து நின்றார்.

மீண்டும் எதிர்தரப்பினர் கோஷங்களை எழுப்பினர். சிறிது நேரத்தின் பின்னர் சபை மண்டபத்தில் உள்ளே இருந்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சபை உறுப்பினர்கள் கதவினை தள்ளிக்கொண்டு எதிர்பிற்கு மத்தியில் வெளியேறி, பூட்டப்பட்டு காணப்பட்ட பிரதான நுழை வாயில் கதவின் பூட்டினை உடைத்தெறிந்து வாயிலை திறந்தனர். இதன்போது பெரும் கூச்சலும் குழப்ப நிலையும் காணப்பட்டது. இதனையடுத்து பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் சபை மண்டபம் அமைந்துள்ள வளாகத்திற்குள் உள் நுழைந்தார். ஆனால் சபை அமர்வு மண்டபத்திற்குள் செல்லவில்லை.

பின்னர் தவிசாளர் அடைபட்டிருந்த அறைக் கதவின் பூட்டும் உடைக்கப்பட்டு தவிசாளார் வெளியேற்றப்பட்டார். சபை அமர்வு மண்டபத்திற்குள் எதிர்தரப்பினரின் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டன். அவர்கள் தள்ளிவிழுத்தப்பட்டு, பெண்களின் மேலாக ஏறி மண்டபத்திற்குள் சென்றனர்.

உடனடியாக கதவு பூட்டப்பட்டது. ஊடகவியலாளார்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை.எதிர்தரப்பினரும் செல்லவில்லை. பின்னர் பாதீடு நிறைவேற்றப்பட்டதாக தகவல் கூறப்பட்டது.

இதன்போது இடம்பெற்ற கலவரத்தில் சிக்குண்டு 2 பெண் உறுப்பினர்கள் உடல் உபாதைகளுக்குட்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

தமிழ் தேசிய கூட்மைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வாழைச்சேனை வைத்தியசாலைக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களை பார்வையிட்டு ஆறுதல் தெரிவித்தார்.

தவிசாளர், பிள்ளையானின் மிரட்டலின் மத்தியில் தன்னால் பணியாற்ற முடியாமலுள்ளதால் இடமாற்றம் பெற்று தருமாறு சபை செயலாளர் தன்னிடம் கோரியதாக சாணக்கியன் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here