அரிசி தட்டுப்பாட்டை எதிர்கொள்ளவுள்ளதா தமிழகம்? மழையும்:விவசாயிகளும்!

இந்தியாவை பொறுத்தவரை விவசாயிகளின் உழைப்பிற்கு ஏற்ப அவர்களால் ஊதியம் ஈட்டிக்கொள்ள முடிவதில்லை என்ற பிரச்சினை நீண்டகாலமாக இருக்கும் மிகப்பெரிய பிரச்சினை. பூகோள அரசியலில் உலகளவில் விவசாயிகளிடம் சுரண்டல் செயற்பாடுகள் வியாபாரிகளினால் முன்னெடுக்கப்பட்டாலும் இந்தியாவில் அதன் தாக்கம் அதிகம் என்றே கூறவேண்டும்.

இதனால் கடன் பெற்று அடைக்க முடியாத நிலையில் பல விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் வரலாறு நீடித்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் தற்போது வேளாண்மை சட்டம் தொடர்பில் விவசாயிகளின் அதிருப்தியும் போராட்டமும் நீடிக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை விவசாயிகளின் தற்கொலை என்பது கட்டற்ற விடயம். இப்படியிருக்க மனிதர்கள் மட்டுமல்ல இயற்கையும் குறித்த விவசாயிகளை வருடா வருடம் ஏமாற்றி கொண்டு தான் இருக்கிறது.

ஒட்டுமொத்தமாக இயற்கையில் குறை கூற முடியாது. மனிதர்களால் மாற்றியமைக்கப்பட்டிருக்கும் சூழலியல் காரணிகளும் மழைக்காலத்தில் விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு காரணம் என்றால் மறுக்க முடியாது.

இப்படியிருக்க இந்த ஆண்டின் புயலும் விவசாயிகளை விட்டுவைக்கவில்லை. ஏக்கர் கணக்கில் நெற்பயிர்கள் நாசமாகியிருக்கின்றமை விவசாயிகளுக்கு மிகப்பெரிய இடி என்று தான் கூறவேண்டும். இதனால் தமிழ் நாட்டில் அரிசி விலையேற்றம் மற்றும் அரிசி தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்பதை கடந்து இந்த விவசாயிகள் அனைவரையும் அரசின் உதவி திருப்திப்படுத்துமா? அவர்களின் நஸ்டத்தை நிரவுமா என்றால்?..

இதேபோன்று அனுமதியற்ற, வடிகால்களை மூடிய கட்டடங்களும், குளங்கள் மற்றும் நீர் ஓடைகளை மூடியிருக்கும் வடிகால்களுமே நகர் புறங்களில் நீர் தேங்குவதற்கான காரணம். இத தெரிந;தும் காலதி காலமாக அவற்றை சீர் செய்யாமல் வெள்ளப்பெருக்கின் போதெல்லாம் ஒரு அரசியல் அரங்கேற்றப்படுவது மறு கதை. எனினும் சுற்றியுள்ள வடிகால்களை சீர்செய்த குளங்களை தூர் வாரினாலே பாதி இடங்களில் நீர் தேங்குவதை தடுக்கலாம் என்பதும் வடிகால்களை மூடிய கட்டிடங்கள் உருவாவதை தவிர்ப்பதே எதிர்காலத்தின் நலனுக்கு வழிவிடும் என்பதும் இந்திய மக்களின் கருத்து.

அழிந்துபோன நெற்பயிர்கள்

கடந்த சில தினங்களுக்கு முன்பு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புரெவி புயலாக மாறி பின்பு வலுவிழந்தாலும் அதன் தாக்கம் பலத்த மழையாக கொட்டித்தீர்த்து வருகிறது.

இதனால்தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிளலும் நெற் பயிர்செய்கை அழிவடைந்துள்ளதால் விவசாயிகள் மேலும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, திருச்சி, கடலூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

இதனால் டெல்டா மாவட்டங்களில் 10 லட்சம் ஏக்கரில் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்களை மழைநீர் சூழ்ந்தது. இதில் 3 லட்சம் ஏக்கரில் தாளடி பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளது. இந்த தொடர் மழை காரணமாக சம்பா பயிர்களில் கரு சிதைவு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் தொடர் மழையால் 21 ஆயிரத்து 758 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளதாக கூறப்படுகிறது.

பொங்கல் பண்டிகையையொட்டி பயிரிடப்பட்ட கரும்புகள் 25 ஏக்கரில் சாய்ந்து கிடக்கிறது. அதே போல் 75 ஏக்கரில் நிலக்கடலையும், 75 ஏக்கரில் சோளப்பயிர்களும் வயலில் சாய்ந்து பாதிப்புக்குள்ளாகி உள்ளன.

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக கொட்டி தீர்த்த கனமழையால் 25 ஆயிரம் ஏக்கரில் பயிர்கள் நீரில் மூழ்கின. திருவாரூரில் உள்ள கூடூர் காற்றாற்றில் மழை வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. திருவாரூர் நாலுகால் மண்டபம் பகுதியில் ஒரு சில இடங்களில் தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தன.

சம்பா, தாளடி பயிர்களில் தேங்கி நிற்கும் மழைநீரை வடிய வைக்க எவ்வித வசதியும் இல்லாததால் சுமார் 500 ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் முழுமையாக தண்ணீரில் மூழ்கி கிடக்கிறது.

நாகை அருகே ஓடம் போக்கி ஆற்றின் கரையில் உடைப்பு ஏற்பட்டதால் வயல்களில் தண்ணீர் புகுந்தது. மேலும் 100 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி வயல்கள் குளம் போல் காட்சி அளிக்கிறது.

சீர்காழி பகுதியில் தொடர் மழை காரணமாக 700 ஏக்கர் விளை நிலங்கள் தண்ணீரில் மூழ்கியதால் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுவரை எப்போதும் இல்லாத அளவுக்கு நேற்று பெய்த 21 செ.மீ. மழையால் விவசாயம் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.

காவிரி டெல்டா மாவட்டங்களில் மழையால் மூழ்கி கிடக்கும் சம்பா, தாளடி, நெற்பயிர்கள், நிலக்கடை, சோளம், கரும்புகள் பயிரிடப்பட்டுள்ள வயல்களை அந்தந்த பகுதியின் வேளாண் அலுவலர்கள் பார்வையிட்டு வருகின்றனர். மேலும் வயல்களில் தேங்கிய தண்ணீரை வடிய வைக்க வடிகால் வசதிகளை மாவட்ட நிர்வாகத்தினர் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோல் குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்த மழை நீரை எந்திரம் மூலம் வெளியேற்றும் பணியிலும் மாவட்ட நிர்வாகத்தினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

மயிலாடுதுறை பகுதியில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வாய்க்கால்கள் மற்றும் ஆறுகளில் மழைநீர் நிரம்பி செல்கின்றன. ஒரு சில இடங்களில் வாய்க்கால் மற்றும் ஆறுகள் உடைப்பு எடுத்து வயல்வெளிகளை சூழ்ந்துள்ளது.

திருச்சி மாவட்டத்தில் திருவெறும்பூர், புள்ளம்பாடி ஆலம்பாடி, லால்குடி பகுதிகளில் நெற்பயிர்களில் மழை வெள்ளம் தேங்கி நிற்கிறது. திருவெறும்பூர் பகுதியில் 400 ஏக்கர், ஆலம்பாடியில் 150 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி இருப்பதாக மாவட்ட வேளாண்துறை இணை இயக்குனர் பெரியகருப்பன் இன்று தெரிவித்தார்.

மேலும் அவர் கூறும் போது, திருச்சியில் நேற்று 11.70 மி.மீட்டர் மழை பதிவானது. ஆனால் இன்று(சனிக்கிழமை) மாவட்டம் முழுவதும் 13.9 மி.மீட்டர் மழை மட்டுமே பதிவாகியுள்ளது. இதனால் நெற்பயிர்களில் சூழ்ந்துள்ள வெள்ளம் வடியத் தொடங்கியுள்ளது.

வாய்க்கால்களிலும் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இதில் மழை நீர் மட்டுமே ஓடிக்கொண்டிருக்கிறது. இன்றைய தினம் மழை பெய்யாவிட்டால் முழுமையாக நீர் வடிந்து விடும்.

மொத்தத்தில் நிவர் மற்றும் புரெவி புயல்கள் விவசாயிகளை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. அரசு காலதாமதமின்றி உயர்மட்டக்குழு மூலம் ஆய்வு செய்து உடனடியாக நிவாரணம் மற்றும் இழப்பீட்டு தொகையினை வழங்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

விவசாயிகளின் தொடர் போராட்டம்

டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக 5ஆம் திகதி  கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி விவசாயிகளின் உணர்வு கொந்தளிப்பான வாழ்வுரிமைப் போராட்டத்திற்கு உரிய மதிப்பளித்து, மூன்று வேளாண் சட்டங்களையும் உடனடியாக மத்திய பா.ஜ.க. அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியும், விவசாயிகளின் ஜீவாதார உரிமைகளைப் போற்றவும், இந்திய வேளாண்மைத்துறை வீழ்ந்து விடாமல் காப்பாற்றவும், தலைநகரம் டெல்லியில் தொடர்ந்து தொய்வின்றி நடைபெற்று வரும் விவசாயிகளின் மகத்தான போராட்டத்திற்கு உணர்வு பூர்வமான ஆதரவு தெரிவித்தும் தி.மு.க.வினர் இன்று தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும், கருப்புக் கொடி ஏந்தி, ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

சென்னையில் நடைபெற்ற கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் தயாநிதி மாறன் சேகர்பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியின் புராரி மைதானத்திலும், டெல்லியின் எல்லைப்பகுதிகளிலும் விவசாயிகளின் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கடுமையான குளிரையும் பொருட்படுத்தாமல் எல்லை நெடுஞ்சாலைகளில் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தொடர்கின்றனர்.

விவசாயிகளின் போராட்டம் காரணமாக காசியாபாத்தில் இருந்து டெல்லி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் காசிப்பூர் எல்லை மூடப்பட்டது.

டெல்லிக்கு வருவோர், நொய்டா இணைப்பு சாலையைத் தவிர்க்கவும், டி.என்.டி. சாலையைப் பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். திக்ரியில் உள்ள டெல்லி-அரியானா எல்லையிலும் விவசாயிகள் தொடர்ந்து முகாமிட்டுள்ளனர்.

ஜதிகரா எல்லை இரு சக்கர வாகன போக்குவரத்துக்கு மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.

அரியானா செல்வதற்கு தன்சா, தவுராலா, கபாஷேரா,ரஜோக்ரி தேசிய நெடுஞ்சாலை-8இ பிஜ்வாசன் ஃ பஜ்கேரா, பாலம் விஹார் மற்றும் துண்டஹேரா எல்லைகள் வழியாக செல்லலாம் என போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டி, வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. விவசாயிகளை சமாதானப்படுத்த மத்திய அரசு இதுவரை மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளன. இதனால் இன்று விவசாயிகளுடன் மத்திய அரசு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துகிறது.

மத்திய அரசாங்கத்துடன் இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையில், உறுதியான முடிவு எடுக்கப்படவில்லை என்றால் பாராளுமன்றத்தை முற்றுகையிடவும் விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில் விவசாயிகள் போராட்டம் தொடர்பாக பிரதமர் மோடி தனது வீட்டில் மத்திய அமைச்சர்களுடன் இன்று காலை ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங், வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ரெயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக அவர்களுடன் மோடி ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கலாம் என தெரிகிறது.

வேளாண் சட்டங்களில் முக்கியமான திருத்தங்கள் கொண்டுவரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெள்ளத்தில் மூழ்கி கிடக்கும் சென்னை நகரங்கள்

புரெவி புயல் வலுவிழந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து கனமழை கொட்டுகிறது.

இதனால் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தாழ்வான பகுதிகள் தண்ணீரில் மிதக்கின்றன. சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். சில பகுதிகளில் மழை நீர் வடிந்து இயல்பு நிலைக்கு திரும்பியது. ஆனால் தாழ்வான பகுதிகளில் உள்ள மழைநீர் வடியாமல் உள்ளது.

இந்நிலையில், சென்னையில் இன்று மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் காலை முதலே விட்டு விட்டு கனமழை பெய்கிறது.

இதனால் சாலைகள் மீண்டும் வெள்ளக்காடாக மாறின. சில சாலைகள் குளம் போன்று காட்சியளிக்கின்றன. வாகன ஓட்டிகள் மிகவும் எச்சரிக்கையுடன் வாகனங்களை ஓட்டிச் சென்றனர். தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் மழைநீர் தேங்கியதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது. சில இடங்களில் மழை நீருடன் கழிவுநீரும் கலந்து வந்ததால் மக்கள் கடும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் தொடர் மழைக்கு வாய்ப்பு-வானிலை மையத்தின் தகவல்

தொடர்ச்சியாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மழை நீடிக்கும் என எதிர்வு கூறப்பட்டிருக்கிறது.

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அதே இடத்தில் நிலவி வருகிறது.

ராமநாதபுரம் அருகே 40 கி.மீ. தூரத்தில் ஒரே இடத்தில் 30 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. இன்று அது மேலும் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து ராமநாதபுரம் வழியாக மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து கேரள பகுதியை நோக்கி நகரும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும் நாளையும் கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தாலும் தமிழகத்தில் அடுத்து 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளது.

கடலூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம்,திருவாரூர் மாவட்டங்களில் அதி கனமழையும் தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, விழுப்புரம், திருவண்ணாமலை,அரியலூர்,பெரம்பலூர், வேலூர், ராணிப்பேட்டை,சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மிக கனமழையும் பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, கரூர், திருச்சி, திண்டுக்கல், திருப்பூர், நீலகிரி, கிருஷ்ணகிரி,ஈரோடு, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதியிலும் நாளை வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எதிர்வு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here