மஹர சிறைச்சாலையின் மருத்துவ அறைக்குள் நுழைந்து, மனநோய்களுக்கு சிகிச்சையளிக்க பரிந்துரைக்கப்பட்டவை உள்ளிட்ட சேமிக்கப்பட்ட மருந்துகளை உட்கொண்ட பின்னரே கைதிகள் கலகத்தில் ஈடுபட்டதாக அரசு இப்பொழுது கூறுகிறது.
சிறை வளாகத்தில் அமைதியின்மையின் போது கைதிகள் பாரிய சொத்து சேதங்களை ஏற்படுத்தியுள்ளதாக சிறை ஆணையர் சந்தன ஏகநாயக்க தெரிவித்தார்.
நேற்று பொலிஸ் தலைமையகத்தில், பொலிஸ் பேச்சாளர் டி.ஐ.ஜி அஜித் ரோஹனவுடன் இணைந்து நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.
மகர சிறைச்சாலையில் சுமார் 2,750 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 1,600 பேர் விளக்கமறியல் கைதிகள். சிறைச்சாலையின் 187 கைதிகள் கோவிட் -19 பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.
கைதிகளின் குழப்பம் குறித்து விளக்கமளிக்கையில், ஞாயிற்றுக்கிழமை (29) கைதிகள் உணவு நேரத்தில் சாப்பாட்டுப் பகுதியிலிருந்து வெளியேறி, பி.சி.ஆர் சோதனைகளுக்கு அனுப்பப்பட வேண்டும் என்று கோரி சிறைச்சாலை முன் வாயில் அருகே போராட்டம் நடத்தினர்.
சிறை கண்காணிப்பாளரும் பிற அதிகாரிகளும் நிலைமையைக் கட்டுப்படுத்த முயன்றபோது, எதிர்ப்பு தெரிவித்த கைதிகள் அவர்களையும் தாக்கத் தொடங்கினர். அந்த நேரத்தில் கைதிகள் சிறை வளாகத்தில் இருந்து தப்பிக்க முயன்றனர்.
சிறை அதிகாரிகள் மூன்று எச்சரிக்கைகளை விடுத்த பின்னர் கைதிகள் மீது ரப்பர் தோட்டாக்களை வீசியதாகவும், பின்னர் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர அவர்கள் சக்தியைப் பயன்படுத்த முயன்றதாகவும் ஏகநாயக்க கூறினார்.
சிறைச்சாலை சமையலறையை கைதிகள் அழித்தனர். வெலிக்கட சிறையிலிருந்து இப்போது மகர சிறையின் 2,700 கைதிகளுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.
கலவரத்தின்போது கைதிகளால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுவதற்கு தனி குழு நியமிக்கப்பட்டுள்ளது. பிணை கோரி போராடியதாக கைதிகள் இப்போது தங்கள் கோரிக்கைகளை மாற்றியுள்ளனர் என்றும் அவர் கூறினார்.
சிறைச்சாலை மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த மனநோயால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கான மாத்திரைகளில் கிட்டத்தட்ட 21,000 மாத்திரைகள் சிறை வளாகத்தில் காணப்பட்டதாக பொலிஸ் ஊடக செய்தித் தொடர்பாளர் டி.ஐ.ஜி அஜித் ரோஹனாதெரிவித்தார்.