புயல் முன்னெச்சரிக்கை: முல்லைத்தீவு கரையோர மக்கள் இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்படுவார்கள்!

புரவி புயலினை எதிர்கொள்வது தொடர்பிலான முன்னாயத்த கலந்துரையாடல் ஒன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் முப்படை அதிகாரிகள், அரச திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளார்கள்.

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள புரவி புயல் முல்லைத்தீவு மாவட்டத்தினை கடந்து செல்லவுள்ள நிலையில் மாவட்டத்தின் கரையோர பகுதி மக்களை பாதுகாப்பான இடத்தில் வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குளாய் பகுதி ஊடாக புயல் ஊடறுத்து செல்லவுள்ளதாக எதிர்வு கூறப்பட்டுள்ள நிலையில் கொக்குளாய் பகுதியில் உள்ள கரையோ மக்களை நாளை வியாழக்கிழமை இரவு பாதுகாப்பான இடைத் தங்கல் முகாமிற்கு அழைத்துவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் கருத்து தெரிவிக்கையில்

முல்லைத்தீவு மாவட்டத்திலும் இந்த புயல் தாக்கம் பாதிக்கும் என்று எதிர்பார்க்கின்றோம். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நாளை அவர்களை இடைத்தங்கல் முகாமிற்கு மாறும்படியான உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

மக்களும் இந்த விடயத்தில் விழிப்பாக இருக்க வேண்டும். அனாவசியமாக கரையோரங்களுக்கு செல்லாமல் பாதுகாப்பான இடங்களில் தங்கி கொள்ளவேண்டும். 1978 ஆம் ஆண்டிற்கு பின்னர் இலங்கையின் நிலப்பரப்பினை ஊடறுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

முல்லைத்தீவின் கொக்குளாய் பகுதியும் உள்ளடங்கப்படுகின்றது. மீனவ சமூகத்தினை பாதுகாப்பான இடத்தில் வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பாடசாலையில் அவர்கள் நாளை இரவு பொழுதிற்கு மட்டும் நகர்த்தியுள்ளோம்.

படகுகள் கரையோரத்தில் இருந்து 100 மீற்றருக்கு அப்பால் தள்ளி நகர்திவைத்து முன்னாயத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here