தமிழ் கட்சிகள் சார்பில் புதிய அரசியலமைப்பிற்கான வரைபு சமர்ப்பிக்கப்படும்: மாவை தலைமையில் 5 பேர் கொண்ட குழு!

தமிழ் தேசிய கட்சிகளின் சார்பில் புதிய அரசியலமைப்பிற்கான சிபார்சுகள் அடங்கிய வரைபை சமர்ப்பிதென முடிவாகியுள்ளது. இந்த வரைபை தயார் செய்ய 5 பேர் அடங்கிய குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய கட்சிகளின் சந்திப்பு இன்று (1) நடைபெற்றபோது இந்த முடிவு எடுக்கப்பட்டது.

தமிழ் தேசிய கட்சிகளின் பிரதிநிதிகள் இன்று யாழ்ப்பாணத்தில் சந்தித்து பேச்சு நடத்தினார். இலங்கை தமிழ் அரசு கட்சி சார்பில் மாவை சேனாதிராசா, சீ.வீ.கே.சிவஞானம், ஈ.சரவணபவன், புளொட் சார்பில் கஜதீபன், தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் க.அருந்தவபாலன், பேராசிரியர் க.சிவநாதன், ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசிய கட்சி சார்பில் என்.சிறிகாந்தா, எம்.கே.சிவாஜிலிங்கம், தமிழ் தேசிய பசுமை இயக்கம் சார்பில் பொ.ஐங்கரநேசன், ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகம் சார்பில் அனந்தி சசிதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

புதிய அரசியலமைப்பிற்கான சிபாரிசுகளை இந்த வருடம் டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்கும்படி அரசு கேட்டுள்ளது. இது குறித்து இன்று விவாதிக்கப்பட்டது.

தமிழ் தேசிய கட்சிகள் சார்பில் சிபாரிசு வரைவொன்றை சமர்ப்பிப்பதென முடிவாகியுள்ளது.

கடந்த அரசில் யாப்பு உருவாக்க முயற்சியின் போது, தமிழ் தேசிய கூட்டமைப்பு சமர்ப்பித்த வரைபு, கடந்த அரசில் தமிழ் மக்கள் பேரவை சமர்ப்பித்த வரைவு, அத்துடன், வடமாகாணசபையினால் சமர்ப்பிக்கப்பட்ட வரைபு ஆகியவற்றின் உள்ளடங்கங்களிலிருந்து மேம்பட்ட புதிய வரைபை உருவாக்குவதென முடிவானது.

இந்த வரைபை உருவாக்க 5 பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டது. மாவை சேனாதிராசா தலைமையில் சீ.வீ.கே.சிவஞானம், சுரேஷ் பிரேமச்சந்திரன், எம்.கே.சிவாஜிலிங்கம், பேராசிரியர் சிவநாதன் ஆகியோர் யாப்பு வரைபை உருவாக்க குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் 10 நாட்களில் இந்த குழு வரைபை இறுதி செய்து, தமிழ் தேசிய கட்சிகளின் தலைமைகளிற்கு சமர்ப்பிப்பதென முடிவாகியுள்ளது. கட்சி தலைவர்களின் அங்கீகாரத்தின் பின்னர், அந்த வரைபை மாவை சேனாதிராசா இந்த வரைபை பிரதமரிடம் கையளிப்பார்.

இதேவேளை, க.வி.விக்னேஸ்வரன் தரப்பில் நிபுணர்களை வைத்து ஒரு யாப்பு வரைபை உருவாக்கி வருவதாக, அவரது பிரதிநிதிகளால் தெரிவிக்கப்பட்டது. இந்த வரைபையும் உள்ளடக்கியதாக, புதிய வரைபை தயாரிப்பதென முடிவாகியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here