ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணனை கைது செய்யாமல் இருப்பதற்கு கடும் அதிருப்தி; டிஜிபி, சென்னை மாநகர காவல்துறை ஆணையர் இருவரும் நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு

ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணனை கைது செய்யாமல் இருப்பதற்கு கடும் அதிருப்தி தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், டிஜிபி மற்றும் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் இருவரும் டிசம்பர் 7-ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளனர்.

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக அவதூறு வீடியோக்களை வெளியிட்டு வரும் ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு பார் கவுன்சில் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா முன்பு இன்று (நவ. 30) விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை சார்பில் விளக்கமளிக்கப்பட்டது. அதில், கர்ணனை நேரடியாக விசாரணைக்கு அழைத்து, விசாரணை நடத்தப்பட்டதாகவும் இனிமேல் இதுபோன்ற வீடியோக்களை வெளியிட மாட்டேன் என்று அவர் உறுதி அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு கடும் அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள் இன்னும் ஏன் கைது செய்யவில்லை என்று கேள்வி எழுப்பினர். இதுகுறித்து, தமிழக டிஜிபி மற்றும் சென்னை காவல்துறை ஆணையர் ஆகியோர் டிசம்பர் 7-ம் தேதி நேரில் ஆஜராகி உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here