சீனா, ஆபிரிக்காவை போல மலையக நிலைமை மாறும்: ஜீவன்!

“சம்பள உயர்வு கிடைக்காது, பல்கலைக்கழகம் வராது, எதுவுமே நடக்காது என குறைகைள மட்டுமே கூறிக்கொண்டு அரசியல் நடத்துபவர்களுக்கு மத்தியில், நிச்சயம் நடக்கும் எனக்கூறி அதற்கான தடைகளை உடைத்தெறிந்து வெற்றியை நோக்கி பயணிப்பதே எமது உறுதியான கொள்கையாகும்.” – என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

நீண்டகாலமாக குன்றும் குழியுமாக பேரவலங்களை தாங்கி காட்சியளித்த கொட்டகலை டெரிக்கிளயார் தோட்டத்துக்கான வீதியை அகலப்படுத்தி புனரமைக்கும் பணி இன்று (29) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கமைய இவ்வீதியை புனரமைப்பதற்கு 78 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே ஜீவன் தொண்டமான் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“மலையகத்திலுள்ள அரசியல்வாதியொருவர் வானொலியொன்றுக்கு நேர்காணல் வழங்கியிருந்தார்.ஆயிரம் ரூபா கிடைக்குமா என கேட்டனர், கிடைக்காது என்றார். பல்கலைக்கழகம் பற்றியும் வினா எழுப்பட்டது. அதற்கும் வராது என பதிலளித்துள்ளார். மலையக மக்களுக்காக பட்ஜட்டில் நிதி ஒதுக்கீடு இடம்பெறவில்லை எனவும் விமர்சித்துள்ளார்.

வராது, கிடைக்காது, முடியாது என குறைகளைமட்டும் கூறிக்கொண்டிருப்பது தலைமைத்துவ பண்பு கிடையாது. தீர்வுகளை அடைவதற்காக தடையாக உள்ள காரணிகளை உடைத்தெறியவேண்டும்.அதனை எவ்வாறு செய்ய வேண்டும் என திட்டம் வகுக்குவேண்டும். இதனை எம்மால் நிச்சயம் செய்யமுடியும். அரசியலுக்கு அப்பால் சிறந்த நிர்வாகியாக செயற்படுவதையே நான் விரும்புகின்றேன்.

மலையக மக்களும் இலங்கையர்களே, அபிவிருத்தி திட்டங்களுக்காக வரவு – செலவுத்திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள நிதி அவர்களுக்கும் உரித்துடையாது. மத்திய அரசாங்கத்தின் பட்ஜட் என்பது முழு நாட்டுக்குமானது, அதில் ஒவ்வொரு பிரிவுகளுக்கான ஒதுக்கீடுகள் இருக்காது என்பதை புரிந்துகொள்ளவேண்டும். பல்கலைக்கழகம் அமைப்பதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

நான் பதவிக்கு வந்து குறுகிய காலப்பகுதிதான் ஆகின்றது. அதற்கு பல அபிவிருத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு தற்போது முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. வீட்டுத்திட்டமும் விரைவில் ஆரம்பிக்கப்படும். அதற்கு முன்னர் அரைகுறையாக உள்ள வீடுகளை முழுமைப்படுத்தி பயனாளிகளிடம் கையளித்துவிடவேண்டும்.

அதேவேளை, ஆயிரம், ஆயிரம் என்று ஆயிரம் ரூபாவை பற்றி மட்டுமே கதைக்கின்றனர், தற்போதைய சூழ்நிலையில் ஆயிரம் ரூபா போதாது, தற்போதைய சிஸ்டம் மாற்றப்படவேண்டும் என்பதே எனது கருத்தாக இருக்கின்றது. பேச்சுவார்த்தைகளின்போதும் இதனை வலியுறுத்தியுள்ளோம். தொழிற்துறையை நவீனமயப்படுத்தி எவ்வித தொழில் நிபந்தனைகளும் இன்றி மாத சம்பளம் பெறுவதற்கு முயற்சிக்கவேண்டும்.

சீனா மற்றும் ஆபிரிக்க நாடுகளில் ஆரம்பத்தில் வெள்ளையர்கள்தான் தேயிலை தோட்டங்களை நிர்வகித்தனர். தற்போது நிலைமை மாறியுள்ளது. மக்களிடம் அவை ஒப்படைக்கப்பட்டுள்ளன. எனவே, எமது மக்களையும் சிறுதோட்ட உரிமையாளர்களாக்க வேண்டும். அதற்காகவே நாம் முயற்சிக்கின்றோம். எனவே, தொழிற்சங்க ரீதியிலாவது நாம் ஒன்றுபட வேண்டும்.” என்றார்.

இந்நிகழ்வில் மேற்படி நகர சபை, பிரதேச சபை தலைவர்கள், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர்கள், வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

க.கிஷாந்தன்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here