பவுண்டரி, சிக்ஸர் மூலம் 88 ரன்கள் சேர்த்து சதம் அடித்த பிலிப்ஸ்: மே.இ.தீவுகளை நசுக்கி தொடரை வென்றது நியூசிலாந்து!

பிலிப்ஸின் காட்டடி சதம், கான்வேயின் அதிரடி அரை சதம் ஆகியவற்றால் மவுன்ட் மவுங்கானியில் இன்று நடந்த மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான 2வது ரி20 போட்டியில் 72 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து அணி வென்றது.

முதலில் ஆடிய நியூஸிலாந்து அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 238 ரன்கள் சேர்த்தது. 239 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய மே.இ.தீவுகள் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் மட்டுமே சேர்த்து 72 ரன்களில் தோல்வி அடைந்தது.

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ரி20 தொடரை 2-0 என்ற கணக்கில் நியூஸிலாந்து அணி கைப்பற்றியது. காட்டடி ஆட்டம் ஆடிய பிலிப்ஸ் 51 பந்துகளில் 108 ரன்கள் சேர்த்து (8 சிக்ஸர், 10 பவுண்டரி) ஆட்டமிழந்து ஆட்டநாயகன் விருதையும் பெற்றார்.

தொடக்கத்திலிருந்தே மே.இ.தீவுகள் அணி வீரர்களின் பந்துவீச்சை நொறுக்கி எடுத்த பிலிப்ஸ் 22 பந்துகளில் அரை சதத்தையும், அடுத்த 24 பந்துகளில் அதாவது 46 பந்துகளில் சதத்தையும் எட்டினார். அவரின் சதத்தில் 88 ரன்களை 10 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள் மூலமே பிலிப்ஸ் சேர்த்தார்.

  • க்ளென் பிலிப்ஸ் ரி20 போட்டியில் அடிக்கும் முதலாவது சதம் இதுவாகும். அதுமட்டுமல்லாமல் ரி20 போட்டியில் அதிவேகமாக சதம் அடித்த முதல் நியூஸிலாந்து வீரர் எனும் பெருமையையும் பிலிப்ஸ் பெற்றார். இதற்கு முன் கோலின் முன்ரோ 47 பந்துகளில் சதம் அடித்திருந்த நிலையில் அதை பிலிப்ஸ் முறியடித்து 46 பந்துகளில் அடித்துள்ளார்.
  • ரி20 போட்டியில் நியூஸிலாந்து தரப்பில் கடந்த 2016இல் பாகிஸ்தானுக்கு எதிராக கப்தில், வில்லியம்ஸன் ஜோடி 171 ரன்கள் சேர்த்திருந்ததே அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பாக இருந்தது. ஆனால், இந்தப் போட்டியில் பிலிப்ஸ், கான்வே ஜோடி அதை முறியடித்து 3வது விக்கெட்டுக்கு 184 ரன்கள் சேர்த்தனர்.
  • ரி20 போட்டிகளில் தொடக்க வீரர்கள் இல்லாத ஜோடியின் பார்ட்னர்ஷிப் என்று எடுத்துக்கொண்டால், இங்கிலாந்தின் டேவிட் மலான், மோர்கன் கூட்டணி 182 ரன்கள் சேர்த்திருந்தனர். ஆனால், அதை கான்வே, பிலிப்ஸ் ஜோடி முறியடித்து 184 ரன்கள் சேர்த்தனர்.
  • இந்த ஆட்டத்தில் கடைசி 10 ஓவர்களில் மட்டும் நியூஸிலாந்து அணி 154 ரன்கள் சேர்த்தது. ரி20 போட்டியில் 3-வது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன் 2007இல் ரி20 உலகக்கோப்பைப் போட்டியில் கடைசி 10 ஓவர்களில் கென்யா அணிக்கு எதிராக இலங்கை அணி 159 ரன்கள் சேர்த்திருந்தது சாதனையாக இருக்கிறது.
  • 2வதாக கடந்த ஆண்டு டேராடூனில் அயர்லாந்துக்கு எதிராக ஆப்கானிஸ்தான் 156 ரன்கள் சேர்த்தது.
  • மே.இ.தீவுகள் அணிக்கு எதிராக ரி20 போட்டியில் நியூஸிலாந்து அணியன் 2வது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன் கடந்த 2018 ஜனவரியில் இதே மைதானத்தில் 5 விக்கெட் இழப்புக்கு 245 ரன்கள் சேர்த்திருந்தது நியூஸி.
  • பவர்ப்ளே முடிந்தபின் களமிறங்கி, சதம் அடித்த வீரர் பிலிப்பைஸ்த் தவிர எந்த அணியிலும் எந்த வீரரும் இல்லை. இதற்கு முன் பங்களாதேஷூக்கு எதிராக 10வது ஓவரில் களமிறங்கிய தென்னாபிரிக்க வீரர் மில்லர் சதம் அடித்தார். இந்த ஆட்டத்தில் 7வது ஓவரில் களமிறங்கிய பிலிப்ஸ் சதம் அடித்துள்ளார்.
  • இவை அனைத்தும் இந்த ஓர் ஆட்டத்தில் படைக்கப்பட்ட சாதனைகளாகும்.

239 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் கடினமான இலக்குடன் மே.இ.தீவுகள் அணி களமிறங்கியது. 200 ரன்கள் எட்டிவிட்டாலே வெற்றி பெறுவது கடினம் என்ற நிலையில் 238 ரன்களை சேஸிங் செய்வது தோல்வியில்தான் முடியும் என்று மே.இ.தீவுகள் அணிக்குத் தெரிந்துவிட்டது.

இதனால், பவர்ப்ளே ஓவரில் ப்ளெட்சர் (20) கிங்ஸ் (0) ஆகிய 2 விக்கெட்டுகளை இழந்து மே.இ.தீவுகள் தடுமாறி 44 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதன்பின் வந்த மே.இ.தீவுகள் வீரர்களுக்கு சேஸிங் செய்வது மலைப்பாக இருந்ததால், தப்பித்தோம் பிழைத்தோம் என்று வந்த வேகத்தில் விக்கெட்டை இழந்து வெளியேறினர்.

மே.இ.தீவுகள் தரப்பில் ஹெட்மயர், மேயர்ஸ் கூட்டணி 32 ரன்கள் சேர்த்ததே அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ஸ்கோராகும். மற்ற வீரர்கள் ஒருவரும் சிறிது நேரம் கூட களத்தில் நிலைக்கவில்லை. மேயர்ஸ் (2), பூரன் (4) என 72 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து மே.இ.தீவுகள் தடுமாறியது.

கப்டன் பொலார்ட் வந்து அதிரடியாக ஆடினார். ஹட்ரிக் சிக்ஸர் அடித்து 4வது சிக்ஸரை சான்ட்னர் பந்துவீச்சில் அடிக்க முயன்றபோது ஆட்டமிழந்தார். பொலார்ட் 28 ரன்களில் வெளியேறினார்.

107 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்த மே.இ.தீவுகள் அணி அடுத்த 34 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது. பாவெல் (9), ஆலன் (15), காட்ரெல் (1) ஹெட்மயர் (25) எனஅடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். கீமோ போல் 26 ரன்களுடன் களத்தில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

20 ஓவர்களில் மே.இ.தீவுகள் அணி 9 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் சேர்த்து தோல்வி அடைந்தது. நியூஸிலாந்து தரப்பில் சான்ட்னர், ஜேமிஸன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

முன்னதாக, நியூஸிலாந்து அணி முதலில் ஆடியது. கப்தில், ஷீபெர்ட் ஆட்டத்தைத் தொடங்கினர். முதல் விக்கெட்டுக்கு இருவரும 49 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

6வது ஓவரில் ஷீபெர்ட் 18 ரன்களில் தோமஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரில் கப்தில் (34) ஆலன் ஓவரில் விக்கெட்டைப் பறிகொடுத்தார். பவர்ப்ளேவில் நியூஸி. அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 49 ரன்கள் சேர்த்திருந்தது.

3வது விக்கெட்டுக்கு பிலிப்ஸ், கான்வே ஜோடி சேர்ந்தனர். இருவரும் அடித்து ஆடத் தொடங்கியபின் ஸ்கோர் ரொக்கெட் வேகத்தில் உயர்ந்தது. 11 ஓவரில் நியூஸிலாந்து அணி 100 ரன்களை எட்டியது. அதிரடியாக ஆடிய பிலிப்ஸ் 22 பந்துகளில் அரை சதம் அடித்தார். கான்வே 31 பந்துகளில் அரை சதத்தையும் நிறைவு செய்தனர்.

பிலிப்ஸ் அடித்து ஆடத் தொடங்கியபின் பந்துகள் சிக்ஸருக்கும் பவுண்டரிகளுக்கும் பறந்தன. 46 பந்துகளில் பிலிப்ஸ் தனது முதல் சதத்தை நிறைவு செய்தார்.

ஏறக்குறைய 7 பந்துவீச்சாளர்களை கப்டன் பொலார்ட் பயன்படுத்தியும் இருவரையும் பிரிக்க முடியவில்லை. இறுதியில் 19 ஓவரை வீசிய பொலார்ட் 5வது பந்தில் பிலிப்ஸ் (108) விக்கெட்டை சாய்த்தார். பிலிப்ஸ் 51 பந்துகளில் 108 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். கான்வே 65 ரன்களில் (37 பந்துகள் 4 பவுண்டரி, 4 சிக்ஸர்) ஆட்டமிழக்காமல் இருந்தார்.

20 ஓவர்கள் முடிவில் நியூஸிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 238 ரன்கள் சேர்த்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here