விடுதியில் அறை எடுத்து கொரோனா பரிசோதனை செய்த லேப் டெக்னீசியன் போலீசில் ஒப்படைப்பு!

கும்பகோணத்தில் விடுதியில் அறை எடுத்து சுகாதார துறையினர் அனுமதியின்றி கொரோனா பரிசோதனை செய்த லேப் டெக்னீசியனை நகராட்சி அதிகாரிகள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு தங்கும் விடுதியில் கொரோனா தொற்று நோய்க்கான பரிசோதனை செய்யப்படுவதாக நகராட்சி நகர்நல அலுவலருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து நகர்நல அலுவலர் பிரேமா தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் மணிகண்டன் மற்றும் நகராட்சி பணியாளர்கள் அந்த விடுதிக்கு சென்று விசாரித்தனர். அப்போது ஒரு டிராவல்ஸ் நிறுவனத்தின் பெயரில் அந்த அறை எடுக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அந்த அறையை சோதனை செய்தபோது கொரோனா பரிசோதனை செய்வதற்கான உபகரணங்கள் அங்கு இருந்தது தெரிய வந்தது. மேலும் அந்த அறையில் ஒருவர் கொரோனா தொற்றுக்கான பரிசோதனை செய்து கொண்டிருந்தார். பின்னர், அவர்கள் அந்த அறைக்கு பூட்டு போட்டு ‘சீல்’ வைத்தனர்.இது குறித்து நகராட்சி நகர்நல அலுவலர் பிரேமா கூறியதாவது:-

லேப் டெக்னீசியன் போலீசில் ஒப்படைப்பு

கும்பகோணம் பஸ் நிலைய பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் கடந்த 14-ந் தேதி தீபாவளியன்று கொரோனா பரிசோதனை எடுத்ததற்கான ரசீது எனக்கு வாட்ஸ்-அப் மூலம் தகவல் கிடைத்தது. அதன் பேரில் விசாரித்ததில் 15 நாட்களுக்கும் மேலாக சுகாதார துறையின் அனுமதியின்றி கொரோனா டெஸ்ட் எடுத்துள்ளனர். தொண்டையிலும், மூக்கிலும் டெஸ்ட் எடுத்து ரிப்போர்ட் கொடுத்துள்ளனர்.

இதில் ஈடுபட்ட திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை சேர்ந்த லேப் டெக்னீசியன் சூரியபிரகாஷ்(வயது 19) என்பவரை பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளோம். அவர் தங்கியிருந்து பணியாற்றிய அறைக்கு ‘சீல்’ வைத்துள்ளோம். மதுரை மாட்டுத்தாவணி பகுதியை சேர்ந்த டயர் வல்கனைசிங் சென்டரின் உரிமையாளர் சுரேஷ்தான் இந்த பரிசோதனைக்கு ஏற்பாடு செய்தது தெரிய வந்துள்ளதால் அவர் மீதும் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here