விளையாட்டுத்துறை இனபாகுபாட்டை பேசிய கருணாகரம் எம்.பி: புலிகளை கோர்த்த மொட்டு எம்.பி!

எமது விளையாட்டுத்துறை விளையாட்டுத்தனமான துறையாகவோ இன, மத, மொழி, பிரதேச மற்றும் பாடசாலைகள் சார்ந்ததாகவோ இருக்கக்கூடாது. ஆனால் இலங்கையின் விளையாட்டுத்துறையில் இத்தகைய பார்வை ஒன்று இருக்கின்றது. இது மாற்றப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை, நீர்வளங்கள், மின்சக்தி, வலுசக்தி அமைச்சுக்கள் மற்றும் இராஜாங்க அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

எமது விளையாட்டுத்துறை விளையாட்டுத்தனமான துறையாக இருக்கக்கூடாது. இது ஒரு விஞ்ஞானபூர்வமான துறையாக மாற்றப்பட வேண்டும். இத்துறையில் இன, மத, மொழி, பிரதேச மற்றும் பாடசாலைகள் சார்ந்ததாக இருக்கக்கூடாது. இன்று இத்துறையில் இத்தகைய பார்வை ஒன்று இருக்கின்றது. இது மாற்றப்பட வேண்டும் . திறமைகள் இனம்காணப்பட வேண்டும். ஊக்குவிக்கப்பட் டு கௌரவிக்கப்பட்ட வேண்டும்.

கடந்த காலங்களில் வடக்கு,கிழக்கு சூழல் இளைஞர்கள் சுதந்திரமாக விளையாட்டுக்களில் ஈடுபடும் வாய்ப்பை வழங்கவில்லை. இப்போது யுத்தம் முடிந்து ஏறத்தாழ 11 வருடங்களாகிவிட்டன. யுத்தத்தை வென்று சிங்கள மக்களின் மனதை கொள்ளைகொண்ட நீங்கள் ,தமிழ் மக்களின் இளைஞர்களின் மனங்களை கொள்ளை கொள்ள என்ன செய்தீர்கள் என உங்கள் மனசாட்சியிடமே கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

யுத்தம் முடிந்ததும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடகிழக்கின் அபிவிருத்திக்கு வெளிநாடுகள், சர்வதேச நிதி நிறுவனங்கள் கடனாகவும் நன்கொடையாகவும் பல மில்லியன் ரூபாக்களை தந்துதவின. இவை வடக்கு,கிழக்கில் சாதித்தது என்ன? சர்வதேச தரம் வாய்ந்த தட கள போட்டிகளை, கிரிக்கெட் போட்டிகளை நடத்தக்கூடிய ஒரு மைதானம் வட,கிழக்கில் உள்ளதா? பெயருக்கு வடக்கில் துரையப்பா விளையாட்டரங்கு, கிழக்கில் திருகோணமலையில் விளையாட்டரங்கு, மட்டக்களப்பில் விளையாட்டரங்கு எனக்கூறுவீர்கள்.

இவற்றின் உண்மைத் தொழில்நுட்பத்தரம் என்ன? விளையாட்டுத்துறை வடக்கு,கிழக்கில் நிமிர வேண்டுமென்பதற்காகவே இவற்றைக் கூறுகின்றேன் .

விளையாட்டுக்கான பல்கலைக்கழகமொன்று உருவாக்கப்பட வேண்டும். அது இ , மத பேதமற்ற வகையில் நிர்வகிக்கப்படுவது உறுதிப்படுத்தப்பட வேண்டும். தேசிய மட்டப்போட்டிகளில் வடக்கு, கிழக்கு இளைஞர்கள் பங்குபற்றும்போது ஏதோ பயங்கரவாதக் குழுவொன்றுடன் மோதுவது போன்றே நடுவர்கள், பார்வையாளர்களின் பார்வை அமைந்திருந்த சந்தர்ப்பங்களும் உள்ளதையும் நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

தேசிய இளைஞர் சம்மேளனத்தின் இயக்குனர் சபையில் எத்தனை தமிழர்கள் உள்ளனர்? உயர்பதவி அணியில் எத்தனை தமிழர்கள் உள்ளனர்? மாகாணப் பணிப்பாளர்களாக 9 மாகாணங்களிலும் கடமையாற்றும் எவருமே தமிழர்அல்ல. உதவிப் பணிப்பாளர்களாக தமிழர்களை கூட பொறுப்பளிக்கப்படாதவர்களாகவே உள்ளனர். இது தொடர்பில் அமைச்சர் உரிய கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

பின்னர் உரையாற்றிய பெரமுனவின் பிரமித பண்டார தென்னக்கோன்-

சனத் ஜெயசூரியா சிக்ஸர் மற்றும் பவுண்டரி அடித்தபோது நாடு முழுவதும் கைதட்டியது. முத்தையா விக்கெட்டுகளை வீழ்த்தியபோது நாடு முழுவதும் மகிழ்ச்சியாக இருந்தது. ஒவ்வொரு நாளும் நம்மை ஒன்றிணைக்கும் சிறந்த பொதுவான காரணி விளையாட்டு.

அன்று சிட்னியில் 200 மீட்டர் தூரம் ஓடிய சுசாந்திகா, 22 வினாடிகளில் முழு நாட்டையும் ஒன்றாக இணைத்தார். ஆனால் இங்கே எம்.பி. கருணாகரம் இனவெறியைத் தூண்டுகிறார். எல்.ரீ.ரீ.ஈ வடக்கில் இளைஞர்களை குண்டுவீசித்து, கழுத்தில் சயனைடுட் குப்பிகளை தொங்கவிட்டபோது மௌனமாக இருந்தவர்கள்,​​இன்று வடக்கில் இளைஞர்களுக்கு  அநீதி நடப்பதாக பேசுவது நகைப்புக்குரியது.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இயக்குநர்கள் குழுவில் அஜந்தன் சிவதாசன் என்பவர் இருக்கிறார் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here