காலியை வீழ்த்தியது யாழ்ப்பாணத்தவர் இல்லாத யாழ்ப்பாண அணி!

லங்கா பிரீமியர் லீக் 2020 தொடரின் இரண்டாவது போட்டியில் காலி கிளாடியேட்டர்ஸ் அணியை 8 விக்கெட்டுக்களால் வீழ்த்தி, யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ் வெற்றிபெற்றது. ஆனால் இந்த போட்டியில் யாழ்ப்பாண வீரர்கள் யாரும் இடம்பெறவில்லை.

ஹம்பாந்தோட்டையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் அவிஷ்க பெர்னாண்டோ ஆட்டமிழக்காமல் 92 ரன்கள் எடுத்தது, யாழ்ப்பாணம் அணியின் வெற்றியை உறுதிப்படுத்தியது.

நாணயச்சுழற்சியில் வென்று, காலி கிளாடியேட்டர்கள் முதலில் துடுப்பெடுத்தாடி 20 ஓவர்களில் 175/8 என முடித்தனர்.

கப்டன் ஷாஹித் அப்ரிடி 23 பந்துகளில் 58 ரன்கள் எடுத்தார். அஃப்ரிடி தனது அரைசதத்தை வெறும் 20 பந்துகளில் எடுத்தார். மூன்று பவுண்டரிகள் மற்றும் ஆறு சிக்சர்கள் அடித்தார்.

தொடக்க ஆட்டக்காரர் தனுஷ்க குணதிலக 30 பந்துகளில் 38 ரன்கள் எடுத்தார்.

யாழ்ப்பாண ஸ்டாலியன்ஸ் சார்பில் பந்துவீச்சில் தென்னாபிரிக்காவின் டுவன் ஒலிவர் 44 ஓட்டங்களிற்கு 4 விக்கெட்டுக்கள் எடுத்தார். வணிந்து ஹசரங்க 12 ஓட்டங்களிற்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பதிலளித்தாடிய யாழ்ப்பாண அணி சார்பில் அவிஷ்க பெர்னாண்டோ, மினோட் பானுக களமிறங்கினர். 22 வயதான பெர்னாண்டோ மெதுவாகத் தொடங்கி, பின்னர் விளாசித்தள்ளினார். ஐந்து பெளண்டரிகள், ஏழு சிக்சர்களுடன் 63 பந்துகளில் 92 ரன்கள் எடுத்தார்.

முதல் விக்கெட்டிற்காக இருவரும் 3.2 ஓவர்களில் 35 ரன்கள் சேர்த்தனர். பின்னர் ரொம் மூர்ஸ் களமிறங்கி 18 ஓட்டங்கள் சேர்த்தார்.மூன்றாவது விக்கெட்டிற்கு அனுபவமிக்க ஷோயப் மாலிக் களமிறங்கி, பெர்னாண்டோவுடன் கூட்டு சேர்ந்து அணியை வெற்றியடைய வைத்தார்.

இருவரும் 110 ஓட்டங்கள இணைப்பாட்டமாக பெற, 19.3 ஓவர்களில் இலக்கைக் அடைந்தனர்.

காலி கிளாடியேட்டர்ஸ் சார்பில் முகமது அமீர் மற்றும் முகமது ஷிராஸ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

அவிஷ்க பெர்னாண்டோ ஆட்டநாயகன்.

இன்று மாலை, ஹம்பாந்தோட்டையில் இரண்டு எல்பிஎல் ஆட்டங்கள் இடம்பெறும். மாலை 3.30 மணிக்கு தம்புள்ள வைக்கிங்ஸ் அணி, கண்டி டஸ்கர்ஸை எதிர்கொள்ளும். இரவு 8 மணிக்கு காலி கிளாடியேட்டர்ஸ்- கொழும்பு கிங்ஸ் அணிகளிற்கிடையிலான ஆட்டம் இடம்பெறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here