சிட்னி கிரிக்கெட் மைதானத்துக்குள் புகுந்த போராட்டக்காரர்கள்: அதானி நிலக்கரிச் சுரங்கத்துக்கு எதிர்ப்பு

இந்தியா- அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, போராட்டக்காரர்கள் மைதானத்துக்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அவுஸ்திரேலியாவில் நிலக்கரிச் சுரங்கம் அமைக்க அதானிக்குக் கடன் கொடுக்கக் கூடாது என்று கூறி அவுஸ்திரேலியாவில் சிலர் போராடி வருகின்றனர். 1 பில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களை பாரத ஸ்டேட் வங்கி அதானிக்குக் கடனாக வழங்கவுள்ளது.

இந்நிலையில், இன்று கிரிக்கெட் போட்டி நடந்து கொண்டிருக்கும்போது, அதானிக்கு கடன் வழங்கக் கூடாது என்று பதாகைகள் ஏந்தி இருவர் மைதானத்துக்குள் புகுந்தனர். பாதுகாப்பு ஊழியர்கள் சுதாரித்து அவர்களை வெளியேற்ற சிறிது நேரம் பிடித்தது.

போராட்டக்காரரகள் அணிந்திருந்த டி ஷேர்ட்டிலும் அதானியைத் தடுக்க வேண்டும், நிலக்கரி எடுக்கக் கூடாது போன்ற வாசகங்கள் அச்சடிக்கப்பட்டிருந்தன.

முன்னதாக வெள்ளிக்கிழமை அன்று, ஸ்ரொப் அதானி என்கிற குழு, அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இதில் அதானிக்கு பாரத ஸ்டேட் வங்கி கடன் வழங்கக் கூடாது என்று வலியுறுத்தப்பட்டது.

கடந்த சில வருடங்களாகவே சுற்றுச்சூழல் பாதிப்பைச் சுட்டிக்காட்டி அவுஸ்திரேலியாவில் நிலக்கரிச் சுரங்கம் அமைக்கக் கூடாது என்று எதிர்ப்பு எழுந்துள்ளது. ஸ்ரொப் அதானி என்கிற இயக்கம் ஆரம்பிக்கப்பட்டு பல விதமாக இதற்காகப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த செப்டம்பர் மாதம் அவுஸ்திரேலியாவில் அதானி நிலக்கரிச் சுரங்கத்துக்கு எதிராக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடுத்திருந்த வழக்கில் அதானி தரப்பு வெற்றி கண்டது. இந்தச் சுரங்கப் பணியால் குயின்ஸ்லாந்தில் 1,500 பேருக்கு வேலைவாய்ப்பு வந்திருப்பதாக அதானி தரப்பு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here