தவிசாளருக்கு பயந்தே கைகளை உயர்த்தினார்கள்!

மக்களிடமிருந்து பெறப்படும் வரிப்பணத்தினைக் கொண்டு மக்களுக்கான சேவைகளை வழங்கத் தேவையான திட்டங்கள் உள்ளடக்கப்படவில்லை என ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர்களான எம்.ஐ.ஹாமித் மௌலவி, ஏ.ஜி.அஸீஸூல் றஹீம் ஆகியோர் எதிர்ப்பத் தெரிவித்துள்ளனர்.

பிரதேச வட்டாரங்களைச் சார்ந்து சமூக நலன் கருதாத வரவு செலவுத்திட்டம் என்பதன் காரணமாகவே எதிராக வாக்களித்தோம் என ஓட்டமாவடி பிரதேச சபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களான எம்.ஐ.ஹாமித் மௌலவி, ஏ.ஜி.அஸீஸூல் றஹீம் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

ஓட்டமாவடி பிரதேச சபையின் 2021ம் ஆண்டுக்கான 3வது வரவு செலவுத்திட்டம் தவிசாளர் ஏ.எம்.நௌபரினால் சபையில் இன்று முன்வைக்கப்பட்டது.

இதன்போது இடம்பெற்ற வாக்களிப்பில் ஆதரவாக 12 வாக்குகளும் எதிராக 2 வாக்குகளும், மூவர் திருத்தங்களுடன் ஆதரிப்பதாகவும் தெரிவித்த நிலையில், பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.

வாக்களிப்பில் கலந்து கொண்ட பின்னர் நாம் ஏன் எதிர்த்து வாக்களித்தோம் என்பது தொடர்பில் இன்று கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டனர்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

2021ம் ஆண்டு பாதீடு சமர்ப்பித்தல் என்பதாகவே கடந்த 18.11.2020ம் திகதியிடப்பட்டு அனுப்பப்பட்ட சபை அமர்வுக்கான அழைப்பில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்றே வரவு செலவுத்திட்டத்தினைச் சமர்ப்பித்து வாக்களிப்பை நடாத்தி முடித்துள்ளமை உள்ளூராட்சி மன்ற கட்டளைச் சட்டத்தை மீறி தவிசாளர் தன்னிச்சையாகச் செயற்பட்டுள்ளார்.

அத்தோடு, மக்களிடமிருந்து பெறப்படும் வரிப்பணத்திலிருந்து மக்களுக்கு நன்மையளிக்கும் எந்தவிதத் திட்டங்களும் குறித்த வரவு செலவுத்திட்டத்தில் வட்டார மக்களை மையமாகக் கொண்டு சமூக நலன் சார்ந்து உள்ளடக்கப்படவில்லை என்பதாலேயே நாங்கள் இருவரும் எதிர்த்து வாக்களித்தோம்.

பிரதேசத்தில் திடீர் அனர்த்தங்கள் ஏற்படுகின்ற சந்தர்ப்பங்களிலோ அல்லது இப்பிரதேசத்தில் தொழில் மேம்பாடுகளை முன்னெடுத்தல் தொடர்பாகவோ பிரதேச கல்வி, கலாசார அபிவிருத்தி தொடர்பிலோ எந்தவொரு முன்னேற்றகரமான விடயத்தையும் குறித்த வரவு செலவுத்திட்டம் உள்ளடக்கவில்லை என்பது கவலையளிக்கின்ற விடயமாகும்.

அத்துடன், நிதி வருமானங்களைப் பெற்று பிரதேச சபையின் அதிகாரங்களுக்குட்பட்ட வகையில் அபிவிருத்திகளை முன்கொண்டு செல்லத் தேவையான எந்தவொரு முன்மொழிவுகளையோ கொண்டிருக்கவில்லை.

தமது கதிரையைப் பாதுகாத்துக் கொள்ளவும் நிறுவனத்தை கொண்டு நடாத்த வேண்டும் என்பதற்காக வழமையாக சம்பிரதாய அடிப்படையில் வரவையும் செலவையும் குறிப்பிடுகின்ற ஒரு கணக்கறிக்கை போன்றே குறித்த வரவு செலவுத்திட்டம் காணப்படுவதுடன், அதனை ஆதரித்தோர் தமது சொந்த நலனுக்காகவும் தமக்கு ஏதாவது கிடைக்கும் என்பதற்காகவும் அல்லது தவிசாளர் தனக்கு அநியாயங்களைச் செய்து விடுவார் என்ற பயத்தின் காரணமாகவே கையுயர்த்தியுள்ளனர். ஆதரித்தோர் மக்கள் நலன் தொடர்பில் சிந்திக்க மறந்துள்ளனர்.

திடீர் அனர்த்தங்கள், வறுமை நிலை ஏற்படுகின்ற வேளையில் மக்களைப் பாதுகாப்பதற்கான எந்தவொரு வழிமுறையோ இன்று எமது பிரதேசத்தை ஆட்டிப்படைக்கும் டெங்கு போன்ற உயிரச்சுறுத்தல் நோய்கள் ஏற்படுகின்ற சந்தர்ப்பங்களில் அவைகளிலிருந்து மக்களைப் பாதுகாக்க தேவையான திட்டங்களோ வழி வகைகளோ உள்ளடக்கப்படவில்லை.

அத்துடன், டெங்கு போன்ற நோய்கள் பரவக்காரணமான வடிகான்களைத் துப்பரவு செய்து, அதனைப் பராமரிக்கும் திட்டங்களோ உள்ளடக்கப்படாமை மக்களை நலனைக் கருத்திற் கொள்ளாத வரவு செலவுத்திட்டம் தரவுகளுக்கு பொருத்தமாக இருப்பினும், மக்களுக்கு நன்மையளிக்காது என்பதை முன்னிறுத்தி மேற்சொன்ன இவ்வாறான காரணங்களின் அடிப்படையில் சமூக நலனை மாத்திரம் இலக்காகக் கொண்டே எதிர்த்தோம்.

அதே நேரம் சிறு கைத்தொழில் முயற்சியாளர்ளை ஊக்குவித்து அவர்களின் வருமானங்களை மேன்மைப்படுத்தி சபையின் வருமானத்தை அதிகரிக்கத் தேவையான திட்டங்களை முன்மொழியாமை, சுதாகாதார மேன்படுத்தல் போன்ற எந்தவொரு விடயமும் உள்ளடக்கப்படவில்லை.

நாம் மேற்சொன்ன விடயங்களை உள்வாங்கி மீள்வாசிப்புக்கு எடுத்துக் கொள்ளுமிடத்து பிரதேச மக்களின் நன்மைகருதி அதனை ஆதரிப்போம் என்ற கருத்தையும் நாம் சபையில் முன்வைத்தோம்.

வேறு எந்தவொரு அரசியல் நோக்கங்களுக்காகவோ தனிப்பட்ட குரோதங்களுக்காவோ நாம் அதனை எதிர்க்கவில்லை. குறித்த வரவு செலவுத்திட்டம் எமது பிரதேசத்துக்கு சமூகத்துக்கும் தேவையான பொருளாதார, சமூக அபிவிருத்தி சம்பந்தமான வேலைத்திட்டங்களை கொண்டிருக்கவில்லை என்பதில் ஏனைய உறுப்பினர்களும் தெளிவு பெற்றிருக்க வேண்டும்.

எமது பிரதேச அபிவிருத்தி, நலனை அடிப்படையாகக் கொண்டு திடீர் அனர்த்தங்கள் ஏற்படுகின்ற போது அதிலிருந்து மீளத் தேவையான விடயங்களை உள்ளடக்கியதான வரவு செலவுத்திட்டமே எமக்குத் தேவை என்பதை யாவரும் உணர வேண்டும்.

வரவு செலவுத்திட்டத்தினை தயாரிக்கின்ற போது பிரதேச கல்வி, சுகாதார, பின்தங்கிய கிராம முன்னேற்றம் போன்ற விடயங்களில் பிரதேசத்திலுள்ள புத்திஜீவிகள், சமூக நலன்விரும்பிகள், துறைசார்ந்தோர், பொருளாதாரத்துறை சம்பந்தமான அறிவு ஜீவிகளின் ஆலோசனைகளைப் பெற்று அதனை உள்ளவாங்கி தயாரிக்க வேண்டும் என்பதை நாம் எடுத்துக்கூறிய போதிலும், வெறுமனே ஒரு அரசியலுக்காக சபையினை நடாத்த வேண்டும் எனும் நோக்கத்திற்காக மாத்திரம் கொண்டு வரப்பட்ட வரவு செலவுத்திட்டமாகும்.

இவைகளைக் கருத்திற் கொண்டே ஓட்டமாவடி பிரதேச சபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களான எம்.ஐ.ஹாமித் மௌலவி, ஏ.ஜி.அஸீஸூல் றஹீம் ஆகியோர் எதிர்த்து வாக்களித்து எமது மக்கள் எமக்கு வழங்கிய ஆணையை நிறைவேற்றியுள்ளோம். மக்கள் நலன்சாராத எந்தவொரு திட்டங்களுக்கும் நாம் ஒரு போதும் ஆதரவு வழங்கப்போவதில்லை எனவும் பிரதேச சபை உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here