ஓட்டமாவடி பிரதேச சபை வரவு செலவு திட்டம் நிறைவேற்றம்!

ஓட்டமாவடி பிரதேச சபையின் 2021ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் பதினாறு மேலதிக வாக்குகளினால் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஓட்டமாவடி பிரதேச சபையின் 2021ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சபையின் தவிசாளர் ஏ.எம்.நௌபரினால் மக்கள் பிரதிநிதிகளின் அங்கீகாரத்திற்காக சபை அமர்வின் போது வாசித்து சமர்ப்பிக்கப்பட்டது.

இப்பாதீடு அரசியல், கட்சி வேறுபாடுகளுக்கப்பால் அதிகபட்சமான உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இவ்வரவு செலவுத் திட்டத்திற்கு நேரடி ஆதரவாக 13 வாக்குகளும், சில திருத்தங்களுடன் ஆதரவாக 3 வாக்குகளும் மொத்தமாக 16 உறுப்பினர்களால் ஆதரவாக வாக்களிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டதுடன், இப்பாதீட்டுக் கெதிராக இரண்டு உறுப்பினர்களால் வாக்களிக்கப்பட்டனர்.

17 உறுப்பினர்கள் சபைக்கு நேரடியாக சமூகமளித்ததுடன், ஒரு உறுப்பினர் சுகவீனம் காரணமாக எழுத்து மூலம் தனது ஆதரவினை பாதீட்டிற்கு வழங்கி இருந்தார்.

நாட்டில் நிலவும் நெருக்கடி நிலைமைகளால் அரசாங்கத்தின் பொருளாதாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதைப் போல் இப்பிரதேச சபைக்கான வருமான மூலங்களும் பாரிய இழப்புக்களை சந்தித்துள்ளன.

கட்சி வேறுபாடுகளுக்கப்பால் இன்றைய சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு இப்பிரதேசத்தைக் கட்டியெழுப்பும் நோக்குடன் இப்பிரதேச சபையின் 2021ம் ஆண்டுக்கான இப்பாதீட்டிற்கு தமது மேலான ஆதரவினை வழங்கிய அனைத்து உறுப்பினர்களுக்கும் சபையின் தவிசாளர் இப்பிரதேச சபை மற்றும் இப்பிரதேச மக்கள் சார்பாகவும் தனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here