நியூஸிலாந்து சுற்றுப்பயணம்: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் 6 பேருக்கு கொரோனா

நியூஸிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் 6 வீரர்களுக்குக் கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

நியூஸிலாந்தில் கிட்டத்தட்ட ஒரு மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பாகிஸ்தான் அணி செவ்வாய்க்கிழமை க்றைஸ்ட் சர்ச் நகருக்கு வந்து சேர்ந்தது. கோவிட்-19 விதிமுறைகளின் படி 14 நாட்கள் கட்டாய தனிமைக் காலத்தில் அணியினர் அனைவரும் வைக்கப்பட்டுள்ளனர். இதில் செய்யப்பட்ட பரிசோதனையில் தான் 6 பேருக்கு தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது.

“நியூஸிலாந்து கிரிக்கெட் வாரியத்துக்கு 6 வீரர்களுக்கு தொற்று இருப்பது குறித்து தெரிவிக்கப்பட்டுவிட்டது. 6 பேரும் நிர்வகிக்கப்பட்ட தனிமையில் இருக்கின்றனர். இதில் 2 பேருக்கு ஏற்கெனவே தொற்று இருந்திருக்கிறது. 4 பேருக்குப் புதிதாக வந்திருக்கிறது” என்று அதிகாரப்பூர்வ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆறு பேரும் வேறொரு இடத்துக்கு மாற்றப்பட்டு தனிமையில் வைக்கப்படவுள்ளனர். இதனால், நிர்வகிக்கப்பட்ட தனிமையிலேயே பயிற்சி மேற்கொள்ளலாம் என்கிற பாகிஸ்தான் அணியின் திட்டம் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த நிர்வகிக்கப்பட்ட தனிமையில் முதல் நாளிலேயே ஒரு சில பாகிஸ்தான் வீரர்கள் விதிகளை மீறி நடந்திருக்கின்றனர். இது குறித்தும் நியூஸிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இது குறித்து பாகிஸ்தான் அணியினருக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

டிசம்பர் மாதம் மூன்று டி20 போட்டிகளிலும், டிசம்பர் கடைசி வாரம் மற்றும் ஜனவரி முதல் வாரத்தில், ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான போட்டியிலும் இரு அணிகளும் விளையாடவுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here