யுத்தத்தில் உயிரிழந்தவர்களிற்கு அஞ்சலிப்பதை தடை செய்ய கோரி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் யாழ், கோப்பாய் பொலிசார் தாக்கல் செய்த மனு, நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இன்று இரண்டாவது தடவையாக, மாலை 3 மணிக்கு வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட பொது, சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து அரச சட்டத்தரணி முன்னிலையாகியிருக்கவில்லை.
காலநிலை சீரின்மை காரணமாக கொழும்பு- பலாலி விமான சேவைகள் இடம்பெறவில்லையென்றும், இதனால் அரச சட்டத்தரணி கொழும்பிலிருந்து வர முடியில்லையென நீதிவானின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதையடுத்து, வழக்கை நாளை (25) காலை 11 மணிக்கு மீள அழைக்க தீர்மானிக்கப்பட்டது.
முன்னதாக இன்று காலை வழக்கு விசாரணை இடம்பெற்ற போது, சட்டமா அதிபர் திணைக்களத்தை முன்னிலையாகுமாறு, பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணி என்.சிறிகாந்தா வலியுறுத்தியிருந்தார். இதையடுத்து, இன்று மாலை 3 மணி வரை வழக்கை ஒத்திவைத்த நீதிவான், சட்டமா அதிபர் திணைக்களத்தை முன்னிலையாகுமாறு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.