லண்டனின் ஒக்ஸ்போர்ட் மருத்துவ குழு தயாரித்திருக்கும் கொவிட் -19 தடுப்பூசி இலங்கை-இந்தியாவுக்கு உதவுமா?

கொவிட்-19 வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் உலகளவில் கூடிக்கொண்டே இருக்கிறது. அதிலும் தற்போது  மேலைத்தேய நாடுகளில் குளிர் நிலமை மோசமாக உள்ள காலம். கனடா அமெரிக்கா உட்பட பல ஜரோப்பிய நாடுகள் குளிர்காலத்தை ஒட்டி தமது மக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள்.மக்கள் முடிந்தவரை பயணங்களை தவிர்க்குமாறு அந்நாட்டு தலைவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் உலகளவில் கொவிட்டால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 லட்சத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையிலும் கொரோனா தடுப்பு மருந்தை தயாரிக்கும் பணிகளும்  மும்முரமாக நடைபெற்றுவருகின்றன.

பல்வேறு நாடுகளும் தடுப்பு மருந்து தயாரிப்பில் ஈடுபட்டாலும் நான்கு தடுப்பு மருந்துகள் தொடர்பாக அதீத கவனம் செலுத்தப்படுகின்றது.

தற்போதைய நிலையில் ஒக்ஸ்ப்பேர்ட் பல்கலைக்கழகத்தின் Oxford Uni –AstraZeneca தடுப்பு மருந்து அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் பேசு பொருளாக மாறிவிட்டது.

அமெரிக்காவின் ஃபைஸர் Pfizer ,மொடர்னா Moderna மருந்துநிறுவனங்களின் தடுப்பு மருந்துகளும் ரஷ்யாவின் Sputnik V  தடுப்பு மருந்தும் பேசுபொருளாக இருக்கிறது. அமெரிக்காவின் தடுப்பு மருந்திலுமட் பார்க்க தங்களுடைய தடுப்பு மருந்து விலை குறைவாக பெறக்கூடியது என்ற அறிவிப்பை ரஷ்ய மருத்துவ குழு அண்மையில் தெரிவித்திருந்தது. 

இந்நிலையில் அமெரிக்காவின் ஃபைஸர் மற்றும் மொடர்னா ஆகிய நிறுவனங்கள் தயாரிக்கும் தடுப்பு மருந்துகளை பாதுகாப்பாக களஞ்சியப்படுத்த அதிகூடிய குளிர்நிலை தேவைப்படுகின்றது. 

ஆனால் ஒக்ஸ்போர்ட் மற்றும் ரஷ்ய தடுப்பு மருந்துகளை சாதாரண குளிரூட்டியின் வெப்பநிலையிலேயே களஞ்சியப்படுத்த முடியும் .

அதிலும் சிறப்பாக அமெரிக்காவின் தடுப்பு மருந்துடன் ஒப்பிடும் பொழுது ஒக்ஸ்போர்ட் மற்றும் ரஷ்ய தடுப்பு மருந்தின் விலையும் குறைவானது. அதிலும் அதிலும் ரஷ்யாவை விட ஒக்ஸ்போர்ட்டின் தடுப்பு மருந்தே மலிவானதாக உள்ளதாக கணிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் வளர்ந்து வரும் நாடுகள் அதிகம் ஒக்ஸ்போர்ட்டின் மருந்தில் தமகது கவனத்தை திருப்பியுள்ளன. 

இலங்கையை பொறுத்தமட்டில் பாதுகாப்பதற்கும் வலைக்கும் பொருத்தமான தடுப்பு மருந்தாக ஒக்ஸ்போர்ட்டின் தடுப்பு மருந்தே அமைய கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

பிரிட்டிஷின் ஒக்ஸ்போர்ட் தடுப்பு மருந்தைத் தயாரிக்கும் ஆராய்ச்சியாளர்கள் குழுவில் இலங்கை தமிழ் அடியை சேர்ந்த வைத்தியர் மஹேஸி ராமசாமி  இடம்பெற்றுள்ளார். இவரின் பெற்றோரும் விஞ்ஞானிகளாவர். இவர் தொடர்பான செய்தியை தமிழ் பக்கம் ஏற்கனவே பகிர்ந்திருந்தது.

ஒக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தின் கொரோனா தடுப்பு மருந்து முயற்சியின் முதன்மை ஆராய்ச்சியாளர் இலங்கை வம்சாவளி பெண்!

பிரிட்டிஷின் இந்த தடுப்பு மருந்து கொவிட்-19 வைரஸ் அறிகுறி மேம்பட்டவர்களில் 70 சதவீதம் பேருக்கு தொற்றை தடுக்கவல்லது என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவின் ஃபைசர் மற்றும் மொடர்னா ஆகிய நிறுவனங்களின் வைரஸ் தடுப்பு மருந்துகள் நோயாளிக்கு 95% பாதுகாப்பை வழங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

எனவே அமெரிக்க தடுப்பூசியோடு பார்க்கும் போது ஒக்ஸ்ஃபோர்ட் தடுப்பூசி பரிசோதனை வெற்றி என்றபோதிலும் சற்றே ஏமாற்றமாகவும் கருதப்படுகிறது.

எனினும் ஃபைசர் ,மொடர்னா நிறுவனங்களின் வைரஸ் தடுப்பு மருந்துடன் ஒப்பிடும்போது, ஒக்ஸ்ஃபோர்ட் தடுப்பூசி விலை மிகவும் மலிவானது மற்றும் எளிதாக உலகின் எந்த மூலைக்கும் கொண்டு செல்ல கூடியதாகவுள்ளதே சிறப்பம்சம்.

எனவே பிரட்டிஸின்  ஒக்ஸ்போர்ட் தடுப்பூசி மருந்துக்கு முறைப்படி உலக சுகாதார அமைப்பு அனுமதி வழங்கினால், இந்த தடுப்பு மருந்துகள், கொரோனாவை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் என கூறப்படுகிறது.

நோயாளிகளுக்கு கொடுக்கும் மருந்தின் அளவை இன்னும் சரியாகக் கணித்துக் கொடுத்தால். இந்த மருந்து 90% வரை பாதுகாப்பளிக்கும் என்கிறது ஒக்ஸ்போர்ட் மருந்து சார்ந்த தரவுகள்.

சராசரியாக ஒரு தடுப்பு மருந்தை தயாரிக்க 10 ஆண்டுகள் வரை ஆகும். ஆனால் ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சுமார் 10 மாதங்களில் செய்துள்ளனர்.

ஒக்ஸ்போர்ட் தடுப்பூசியை 100 மில்லியன் டோஸ் அளவுக்கு பெறுவதற்கான ஒர்டரை பிரிட்டன் அரசு முன்கூட்டியே செய்துள்ளது. அதைக் கொண்டு 50 மில்லியன் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடலாம்.

இந்த பரிசோதனையில் 20,000 தன்னார்வலர்கள் கலந்து கொண்டார்கள். 50 சதவிகிதத்தினர் பிரிட்டனில் இருந்தும், 50 சதவிகிதத்தினர் பிரேஸிலில் இருந்து கலந்து கொண்டார்கள்.

இந்த தடுப்பு மருந்தில் இரண்டு டொஸ் எடுத்துக் கொண்டவர்களில் 30 பேருக்கு கொரோனா இருந்தது. டம்மி ஊசி எனப்படும் தடுப்பு மருந்து 101 பேருக்கு போடப்பட்டது. அந்த வகையில் இந்த மருந்து 70 சதவீதம் பாதுகாப்பு அளிக்கிறது என ஆராய்ச்சியாளர்கள் கூறியிருக்கிறார்கள்.

‘இரண்டு அதிக டொஸ் மருந்து, தன்னார்வலர்களுக்கு கொடுத்த போது, அந்த மருந்து 62 சதவிகிதம் பாதுகாப்பு கொடுத்தது. அதற்குப் பிறகு குறைந்த டொஸ் மருந்து கொடுத்த போது பாதுகாப்பு 90 சதவிகிதமாக அதிகரித்தது. இந்த வித்தியாசம் ஏன் என்று தெரியவில்லை.

இந்த முடிவுகளால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறோம்’ என இந்த சோதனையின் முதன்மை ஆராய்ச்சியாளரான பேராசிரியர் ஆண்ட்ரூவ் பொல்லார்ட் கூறி இருக்கிறார்.

பிரிட்டனில் ஏற்கனவே 4 மில்லியன் டொஸ் மருந்துகள் தயாராக இருக்கின்றன.

இந்த தடுப்பு மருந்தின் பாதுகாப்பு, செயல் திறன் மற்றும் மருந்தின் தரம் போன்றவை மதிப்பீடு செய்யப்படும். அதன் பிறகு சுகாதார அமைப்பு ஆய்வுக்குழு ஆராய்ந்து அனுமதிக்கும் வரை எதுவும் நடக்காது. இந்த செயல்முறைகள் எல்லாம், அடுத்து வரும் வாரங்களில் நடக்கவிருக்கிறது.

எப்படிப் பார்த்தாலும், பிரிட்டன் அரசு, இதற்கு முன் இல்லாத வெகுஜன நோய்த்தடுப்பு பிரசாரத்துக்கு அனுமதி கொடுக்க தயாராக இருக்கிறது என்றே கூற வேண்டும்.

வைரஸ் தடுப்பூசியைப் பெறுவோரில் Care home residents என்றழைக்கப்படுபவர்கள் மற்றும் அதன் ஊழியர்கள் தான் முன்னணியில் இருக்கிறார்கள். அவர்களைத் தொடர்ந்து சுகாதார பணியாளர்கள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள். அதன் பின் வயதை அடிப்படையாகக் கொண்டு வைரஸ் தடுப்பூசி போடுவதை விரிவுபடுத்துவதுதான் பிரிட்டிஸ் அரசின் திட்டம்.

பொதுவாக சிம்பான்ஸிக்களை தாக்கும் சளி போன்ற வைரஸை எதிர்கொள்ள, மரபணுவில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த தடுப்பூசி தயாரிக்கப்பட்டிருக்கிறது.

வைரஸை மனித உயிரணுக்களுடன் இணைக்கப் பயன்படும் ஸ்பைக் புரதத்தில் ஏற்படும் மாற்றங்கள் அவை செல்களுடன் சிறப்பாக ஒட்டிக்கொள்ளவும் மேலும் திறம்பட செயல்படவும் வகைசெய்கின்றன.

‘ஸ்பைக் புரதம்’ என்ற முள்முடி போன்ற பாகம்தான் அந்த வைரஸ் மனித உடலின் உயிரணுக்களுக்குள் ஊடுருவ பயன்படுத்தும் ஒரு சாதனம். கொரோனா வைரசின் மரபணுத் தொடரில் இந்த ஸ்பைக் புரதத்துக்கான குறியீடுகளைப் பிரித்தெடுத்து அதனை இந்த தடுப்பு மருந்தின் மரபணுவுக்குள் ஆராய்ச்சியாளர்கள் செலுத்தியுள்ளனர். இதனால், இந்த தடுப்பூசியில் உள்ள மரபணு மாற்றப்பட்ட வைரஸ் பார்ப்பதற்கு கொரோனா வைரஸ் போலவே தோற்றம் அளிக்கும்.

இப்படி கொரோனா போலவே மாறுவேடம் பூண்ட மரபணு மாற்ற வைரஸ் மனித உடலுக்குள் செலுத்தப்படும்போது உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் இதனை அடையாளம் காணவும், அதனோடு போரிடவும் பயிற்சி எடுத்துக் கொள்ளும். இதன் மூலம் பிறகு உண்மையான கொரோனா வைரஸ் எப்போதாவது உடலுக்குள் நுழையும்போது, அதனை உடனடியாக அடையாளம் காணவும், எதிர்த்துப் போராடவும், உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்துக்குப் போதிய பயிற்சி இருக்கும் என்பதால், கொரோனா வைரஸால் உடலில் தொற்றாக மாற முடியாது.

ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் கொரோனா வைரஸ் தடுப்பூசி மருந்து விரைவில் உலக அளவில் கிடைக்கும் என்ற செய்தி மகிழ்ச்சி தருவதாகவும் அது 90 சதவீத அளவுக்கு பாதுகாப்பானதாக இருக்கும் என்றும் இந்தியாவில் உள்ள சீரம் நிறுவன தலைமை செயல் அதிகாரி அதார் பூனாவாலா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பிரிட்டிஷ் மருத்துவ குழு  அதாவது அஸ்ட்ராஜெனெகா மற்றும் ஒக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் COVID-19 க்கு எதிரான தடுப்பூசி பரிசோதனைகளின் வெற்றி தொடர்பில் நேற்று (திங்கட்கிழமை) அஸ்ட்ராஜெனெகா தலைமை நிர்வாகி பாஸ்கல் சொரியட் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் இது வரையிலான தடுப்பூசி  பரிசோதனை முடிவுகளின்படி 70 முதல் 90 சதவிகிதம் வரை பயன் உள்ளதாக கூறப்படுகிறது.

ஃபைசர் / பயோஎன்டெக் மற்றும் மாடர்னா ஆகியோரால் பரிசோதிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசிகளின் செயல்திறனுடன் ஒப்பிடும்போது அஸ்ட்ராஜெனெகா மற்றும் ஒக்ஸ்போர்டு மருத்துவ குழுவின் தடுப்பூசியின் பயன்  70 சதவீத றைவாக உள்ளது.

முடிந்தவரை தடுப்பூசியின் ஆரம்ப ஒப்புதலுக்கு உடனடியாக விண்ணப்பிக்கும் என்றும், இது உலக சுகாதார நிறுவனத்திடமிருந்து அவசரகால பயன்பாட்டு பட்டியலைப் பெறும் என்றும், எனவே இது குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் கிடைக்கக்கூடியதாக இருக்கும் என்றும் பிரிட்டிஸின்  அஸ்ட்ராசெனெகா தெரிவித்துள்ளார்.

இந்த தடுப்பு மருந்தை விநியோகிக்கும் “நிபந்தனை அல்லது ஆரம்ப ஒப்புதலுக்கான கட்டமைப்பை கொண்ட தரவை உலகெங்கிலும் உள்ள அதிகாரிகளுக்கு சமர்பிக்க விரைவில் நிறுவனம் தயாரிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தடுப்பூசி  தொடர்பில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன் ட்விட்டரில் கூறியதாவது: “ஒக்ஸ்போர்டு தடுப்பூசி சோதனைகளில் மிகவும் பயனுள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது . நம்பமுடியாத பரபரப்பான செய்தி . பாதுகாப்பு பரிசோதனைகள் இன்னும் உள்ள போதிலும் இது மகிழ்ச்சியான செய்தியே என கூறியுள்ளார்.

இதேவேளை சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் அடுத்த மாதம் தடுப்பூசி போட ஆரம்பிக்க முடியும் என நாங்கள் நம்புகிறோம் என்று சர்வதேச ஊடகமான பிபிசியிடம் கூறியுள்ளார்.

எனினும் தடுப்பூசி பயன்பாடு ஜனவரி-மார்ச் வரையான காலப்பகுதிக்குள் வரலாம் என நம்பப்படுகிறது.  

இந்நிலையில் இலங்கைக்கு பொருத்தமான தடுப்பூசியாக கருதப்படும் பிரிட்டிஸின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக மருத்துவ குழு தயாரிக்கும் தடுப்பூசியை பயன்பாட்டிற்கு பெற்று கொள்ளவே இலங்கை அரசும் முன் வரும் என நம்பப்படுகிறது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here