தமிழ் கட்சிகள் இன்று மீண்டும் கூடுகின்றன: வடமராட்சியில் அஞ்சலி நிகழ்வு?

தமிழ் தேசிய கட்சிகள் இன்று (24) மீண்டும் கூடி பேசவுள்ளனர். உயிரிழந்தவர்களிற்கு அஞ்சலி செலுத்துவது குறித்து புதிய ஏற்பாடு ஒன்றை இன்று அவர்கள் அறிவிக்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

உயிரழந்தவர்களை நினைவுகூர்வது குறித்து தமிழ் கட்சிகள் ஏற்கனவே கூடி ஆராய்ந்த போது, 27ம் திகதி அனைவரும் ஒன்று கூடாமல், காலையிலிருந்து மாலை வரை துயிலுமில்லங்களிற்கு சென்று அஞ்சலித்து விட்டு வர கோருவதென திட்டமிடப்பட்டது. எனினும், பொலிசார் நீதிமன்றங்களின் ஊடாக தடையுத்தரவுகளை பெற ஆரம்பித்த பின்னர மீண்டும் கூடிய தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் துயிலுமில்ல ஒழுங்கமைப்பாளர்கள், 27ஆம் திகதி வீட்டிலிருந்து அஞ்சலிக்க கோருவதென்றும், வீடுகளின் முன்பாக தீப ஒளியேற்ற அழைப்பு விடுவதென்றும் தீர்மானித்தனர்.

இது குறித்து இன்று (24) கூடி பகிரங்க அறிவிப்பு விடுவதென தீர்மானித்திருந்தனர்.

எனினும், நேற்று நெல்லியடி, பருத்தித்துறை, வல்வெட்டித்துறை பொலிசார் அஞ்சலி நிகழ்விற்கு தடைகோரும் மனுக்களை மீளப்பெற்று விட்டனர். தற்போதைய நிலையில், வடமராட்சி பிரதேசத்தில் எந்த தடையும் இல்லை. அதாவது, இந்த மனுக்கள் தாக்கல் செய்வதற்கு முன்னர் என்ன நிலைமையிருந்ததோ, அதே நிலைமையே உள்ளது.

இதேவேளை, மல்லாகம் நீதிமன்றத்திற்குட்பட்ட பகுதிகளில் சுகாதார மற்றும் பயங்கரவாத தடைச்சட்டங்களை மீறாத விதத்தில் அஞ்சலியை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஊர்காவற்றுறை, முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், வவுனியா, மட்டக்களப்பு, மூதூர் நீதிமன்றங்கள் ஊடாக தடையுத்தரவுகளை அந்தந்த பகுதி பொலிசார் பெற்றுள்ளனர்.

யாழ்ப்பாண நீதிமன்ற பகுதியில் தடை கோரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்படுகிறது.

இதுதவிர, அனைத்து அரசியல் பிரமுகர்களிற்கும் அஞ்சலி தடை உத்தரவை பெற கோப்பாய் பொலிசார் முயற்சிக்கிறார்கள். அந்த வழக்கும் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இந்த புதிய சூழலில் எவ்விதம் அஞ்சலி நிகழ்வுகளை நடத்துவது என்பதை ஆராய தமிழ் கட்சிகள் இன்று மீண்டும் கூடவுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here