கிளிநொச்சியில் 72 வயது கொரோனா நோயாளி எப்படி அடையாளம் காணப்பட்டார்?; பொறுப்பின்றி செயற்பட்டதா வைத்தியசாலை?: பரபரப்பு தகவல்கள்!

கிளிநொச்சி பாரதிபுரத்தைச் சேர்ந்த 72 வயதான ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த நபர் கிளிநொச்சி ஏ9வீதி தொண்டமான்நகர் (வயலஸ்அடி) பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் விற்பனை நிலையம் ஒன்றில் பணியாற்றியவர் ஆவர்.  குறித்த நபருக்கு எவ்வாறு கொரோனா தொற்று ஏற்பட்டது என்பது குறித்து தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையினை தொடர்ந்து கிளிநொச்சி மாவட்டத்தின் அனைத்து பாடசாலைகளையும் ஒரு வாரத்திற்கு மூடுமாறு வடக்கு மாகாண ஆளுநர் அறிவித்துள்ளார்.

இதேவேளை  கொரோனா தொற்றுக்குள்ளான நபர் நேற்று முன்தினம் (21) கிளிநொச்சி வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவிற்குச் சென்ற போது அவரது அறிகுறிகளின் அடிப்படையில் எழுந்த சந்தேகத்தால் அவர் கொரோனா தனிமைப்படுத்தல்  விடுதிக்கு அனுப்பபட்டுள்ளார். இருப்பினும் அதேநாள் நள்ளிரவில் வைத்தியர்கள் எவரும் பார்வையிடாமலேயே வைத்தியசாலையின் சாதாரண மருத்துவ விடுதியில் உள்ள தனிமைப்படுத்தும் அறைக்கு இவர் மாற்றப்பட்டுள்ளார்.

மறுநாள் (22) பிசிஆர் பரிசோதனை மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனையின் போது“முடிவெடுக்க முடியாத மாதிரி” என்று வந்த நிலையில் இவர் அதே சாதாரண மருத்துவ விடுதியின் தனிமைப்படுத்தும் அறையில் தொடர்ந்தும் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

இதன் பின்னர் இன்று (23) இரண்டாவது தடவை பெறப்பட்ட மாதிரிகளில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையின் போது குறித்த நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

முதலாவது பிசிஆர் பிரிசோதனையின் போது “முடிவெடுக்க முடியாத மாதிரி” என முடிவு வந்தவர்களில் பெரும்பாலானவர்களுக்கு இரண்டாவது தடவை செய்யப்படும் பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டே முடிவுகள்  வெளிவந்துள்ளன எனக் வைத்தியசாலைப் பணியாளர்கள் கூறுகின்றனர்.

இதனை அறிந்தும் தொற்றுக்குள்ளான நபரை தொடர்ந்தும் சாதாரண நோயாளர் விடுதியின் தனிமைப்படுத்தல் அறையிலேயே   வைத்திருந்தமை மற்றும் இன்று மதியமே குறித்த நபரை கண்காணித்த உள்ளக பயிற்சி மருத்துவர் உள்ளிட்ட சிலரை வைத்தியசாலை நிர்வாகம் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தியிருப்பினும் இதுவரை வைத்தியசாலைப் பணியாளர்களுக்கான தெளிவான தகவல்கள் எவையும் உரிய முறையில் தெரிவிக்கப்படாமை ஆகிய விடயங்கள் நிர்வாகம் குறித்து வைத்தியசாலை பணியாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் இராகுலனைத் தொடர்புகொண்டு வினவியபோது “குறித்த நோயாளருக்கு குருதிப் பரிசோதனையில் டெங்கு நோய்க்குரிய அறிகுறிகள் தென்பட்டதாலேயே அவரைத் தீவிர கண்காணிப்பில் வைப்பதற்காகச் சாதாரண விடுதியின் தனிமைப்படுத்தல் அறைக்கு மாற்றப்பட்டார்” எனக் குறிப்பிட்டார்.

இருப்பினும் வைத்தியசாலையின் கொரொனா தனிமைப்படுத்தல் விடுதியில் தீவிர கண்காணிப்புத் தேவையான கொரனா நோயாளர் ஒருவரையேனும் வைத்ததுப் பராமரிக்கும் வசதியினைக்கூட இதுவரை ஏற்படுத்தவில்லை?” என்ற கேள்வி வைத்தியசாலைப் பணியாளர்களால் முன்வைக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here