இரகசிய வாக்களிப்பு என்றாலும் பகிரங்கமாக காண்பிக்க வேண்டும்: ஆனல்ட்டை வீழ்த்த சுமந்திரனின் உத்தியை கையாளும் கஜேந்திரகுமார்!

யாழ் மாநகரசபை வரவு செலவு திட்ட வாக்களிப்பு இரகசியமானதாக நடைபெற்றாலும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவரும் தாம் யாருக்கு வாக்களிக்கிறார்கள் என்பதை பகிரங்கமாக தூக்கிக் காண்பித்து விட்டே வாக்களிக்க வேண்டுமென கட்சி உறுப்பினர்களிற்கு கண்டிப்பான உத்தரவிட்டுள்ளார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

அகில இலங்கை தமிழ் காங்கிரசின் யாழ் மாநகரசபை உறுப்பினர்களுடன் நடந்த, வரவு செலவு திட்ட அணுகுமுறை தொடர்பான கலந்துரையாடலிலே இந்த முடிவை அறிவித்தார்.

அண்மையில் யாழ் மாவட்ட செயலத்தில் தெற்கு அமைச்சர்கள் கலந்த கொண்ட கூட்டத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடன் பேசிய எம்.ஏ.சுமந்திரன், தனது அணியினரால் நிர்வகிக்கப்படும் உள்ளூராட்சிசசபைகளில் ஆதரவு வழங்குமாறு கோரிக்கை விடுத்தார். உதாரணமாக,பருத்தித்துறை, கரவெட்டி, சாவகச்சேரி உள்ளூராட்சிசபைகளிற்கு ஆதரவு கோரினார்.

ஆரம்பத்தில் இந்த கோரிக்கையை கணக்கிலெடுக்காமல் விட்ட காங்கிரஸ், தற்போது அதற்கு சாதகமான முடிவை எடுத்துள்ளது. சாவகச்சேரி நகரசபை வாக்களிப்பை ஆதரிக்கலாமென, அந்த சபை உறுப்பினர்களிற்கு கட்சியின் முடிவை செ.கஜேந்திரன் தெரிவித்திரந்தார். எனினும்- முன்னணி பாசறையில் புலிப்பால் குடித்த வளர்ந்தவர்கள் எப்படி புல் சாப்பிட ஒப்புக்கொள்வார்கள்? அதனால் கட்சி தலைமையின் முடிவை உள்ளூராட்சி உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்ளாத சுவாரஸ்யம் அங்கு நிகழ்கிறது.

இதற்குள், யாழ் மாநகரசபையின் வரவு செலவு திட்டத்தை தோற்கடிக்க முழுமூச்சாக செயற்படுமாறு, காங்கிரஸ் உறுப்பினர்களிற்கு கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார். மாநகரசபை உறுப்பினர்களுடன் நடந்த கலந்துரையாடலில் இதனை தெரிவித்தார்.

இரகசிய வாக்கெடுப்பு சூழல் வந்தால், யாருக்கு வாக்களிக்கிறார்கள் என்பதை பகிரங்கமாக உயர்த்திக் காட்டுமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

யாழ் மாநகரசபை தேர்தல் முடிந்ததும் முதல்வர் தெரிவ நடைபெற்றபோது, அப்போது கூட்டமைப்பு உறுப்பினர்கள் பலர் ஆனல்ட்டை ஆதரிக்கவில்லை. ஆனால், ஆனல்ட்டை முதல்வராக்க தலைகீழாக நின்ற சுமந்திரன், முதல்வர் தெரிவின்போது இரகசிய வாக்கெடுப்பு நடந்தால் அனைவரும் தாம் யாருக்கு வாக்களிக்கிறோம் என்பதை பகிரங்கமாக காண்பித்து விட்டு (இதெல்லாம் ஜனநாயகத்தின் காவல் கடமைகளிற்குள் வருமா என யாரும் கேட்கக்கூடாது) வாக்களிக்க வேண்டுமென உத்தரவிட்டிருந்தார். போதாதற்கு, அன்று சபைக்கு நேரில் சென்று அமர்வை கவனித்தார்.

இப்பொழுது ஆனல்ட்டை வீழ்த்த அதே உத்தியை கஜேந்திரகுமார் கையிலெடுத்துள்ளார்.

எம்.ஏ.சுமந்திரன் தனது அணியின் ஆளுகையிலுள்ள சபைகள் குறித்து பேச்சு நடத்தியபோது, விசேடமாக யாழ் மாநகரசபை குறித்து பேசப்பட்டதா என்பது குறித்து இதுவரை அறியவரவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here