வீட்டில் கஞ்சா: சினிமா தயாரிப்பாளர் மனைவி கைது

வீட்டில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து சினிமா தயாரிப்பாளர் பிரோஸ் நாடிவாலாவின் மனைவி கைது செய்யப்பட்டார்.

நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தை அடுத்து இந்தி திரையுலகிற்கும், போதைப்பொருள் கும்பலுக்கும் உள்ள தொடர்பு அம்பலமானது. இதுகுறித்து போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சுஷாந்தின் காதலி ரியா சக்கரவர்த்தியை கைது செய்தனர். இதுதவிர ஷரத்தா கபூர், தீபிகா படுகோனே, ரகுல்பிரீத் சிங், சாரா அலிகான் ஆகிய முன்னணி நடிகைகள் மற்றும் இந்தி திரையுலக பிரபலங்கள் பலரிடமும் விசாரணை நடத்தினர்.

இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் போதைப்பொருள் கும்பலை சேர்ந்த வாகித் அப்துல் காதிர் சேக் என்ற சுல்தானை கைது செய்தனர். விசாரணையில் அவரிடம் பிரபல இந்திப்பட தயாரிப்பாளர் பிரோஸ் நாடிவாலாவின் மனைவி சபீனா செய்யது போதைப்பொருள் வாங்கியது தெரியவந்தது.

இதையடுத்து அதிகாரிகள் மும்பை ஜூகுவில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு இருந்து 10 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அதிகாரிகள் தயாரிப்பாளரின் மனைவியை கைது செய்தனர்.

இதுகுறித்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு மும்பை மண்டல இயக்குனர் சமீர் வான்கடே கூறுகையில், “நாங்கள் போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் பிரோஸ் நாடிவாலாவின் மனைவியை கைது செய்து உள்ளோம். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது” என்றார்.

தயாரிப்பாளர் பிரோஸ் நாடிவாலா இந்தியில் ‘பிர் ஹேரா பெரி’, ‘அவாரா பாகல் தீவானா’, ‘வெல்கம்’ உள்ளிட்ட பல வெற்றிப்படங் களை தயாரித்து உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here