நுரையீரல் திசுக்களை பெரியளவில் பாதிக்கும் கொரோனா; லோங் கொவிட் அறிகுறிக்கு அது காரணமாக இருக்கலாம்!

கொவிட்-19 தொற்றால் உயிரிழந்தவர்களில் பலரது நுரையீரல் பெரிதளவில் சேதம் அடைந்திருந்தது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல மாதங்களாக கொவிட்-19 அறிகுறிகளால் நோயாளிகள் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய ‘லோங் கொவிட்’ எனும் நோய்க் குறித்தொகுப்பை மருத்துவர்கள் புரிந்துகொள்ள அந்த ஆய்வுகள் உதவின.

இந்த ஆய்வை மேற்கொள்ளும் ஆய்வாளர்கள், கொவிட்-19க்கு காரணமான Sars-CoV-2 கிருமிகளில் சில தனிப்பட்ட பண்புகளைக் கண்டறிந்துள்ளனர். அவற்றிலிருந்து அவை ஏற்படுத்தும் தாக்கத்தைப் புரிந்துகொள்ள முடியும் என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

“கொவிட்-19 என்பது கிருமிகளால் பாதிக்கப்பட்ட செல்கள் இறந்துபோவதால் மட்டுமல்ல, அத்தகைய வழக்கத்துக்கு மாறான செல்கள் நீண்ட காலமாக நுரையீரலில் இருப்பதாலும் ஏற்படுகிறது,” என கிங்ஸ் கல்லூரி லண்டனைச் சேர்ந்த பேராசிரியர் மௌரோ கியாக்கா குறிப்பிட்டார். இந்த ஆய்வை வழி நடத்துபவர்களில் அவரும் ஒருவர்.

இத்தாலியின் ட்ரைஎஸ்டி பல்கலைக்கழக மருத்துவமனையில் இவ்வாண்டு பெப்ரவரி முதல் ஏப்ரல் வரை கொவிட்-19 தொற்றால் உயிரிழந்த 41 பேரின் நுரையீரல், இதயம், கல்லீரல், சிறுநீரகம் ஆகியவற்றின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அந்த மாதிரிகளில் மற்ற உறுப்புகளைவிட, நுரையீரல்தான் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாகவும் அதில் இருந்த செல்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் பேராசிரியர் கியாக்கா குறிப்பிட்டார்.

நுரையீரல் திசுக்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டிருப்பதால் ‘லோங் கொவிட்’ நோய்க் குறிப்பு தொகுப்பு ஏற்படுவதாக அவர் தெரிவித்தார்.

கொவிட்-19லிருந்து விடுபட்டாலும் பாதிப்பு அதிகமானதாக இருக்கும் என்றார் அவர்.

கொவிட்-19 தொடக்க பாதிப்பிலிருந்து விடுபட்டவர்கள் அசதி, மூளை மந்த நிலை, மூச்சுவிட சிரமப்படும் நிலை போன்ற அறிகுறிகளால் தொடர்ந்து பாதிக்கப்படுவதை உலக அளவில் சேகரிக்கப்பட்ட தரவுகள் காட்டுகின்றன.

இந்த நிலைதான் ‘லோங் கொவிட்’ அறிகுறி என்று கூறப்படுகிறது.

நோயாளிகளின் நுரையீரலுக்குச் செல்லும் ரத்த தமனிகள், சிரைகளில் இரத்த உறைவு அதிக அளவில் காணப்படுகிறது. சில செல்கள் வழக்கத்துக்கு மாறாக பெரியதாக இருப்பதுடன் அவற்றில் பல கருக்கள் காணப்படுகின்றன. பல செல்கள் ஒன்றிணைந்து ஒரே செல்லாக மாறக்கூடிய சின்சைடியா எனும் செயல்பாடு இதற்குக் காரணம்.

பரிசோதனை மாதிரிகளில் பலவிதமான செல்களில் கொரோனா கிருமி காணப்பட்டதையும் லேன்செட் இபயோமெடிசின் எனும் சஞ்சிகையில் வெளியிட்ட ஆய்வுக் கட்டுரை குறிப்பிடுகிறது.

பாதிக்கப்பட்ட, இந்த செல்கள் நுரையீரலின் அமைப்பில் பெரிய மாற்றங்கள் ஏற்படுத்துவதால் பல நாட்களுக்கு கொவிட்-19 அறிகுறிகள் அதாவது ‘லோங் கொவிட்’ இருப்பதாக பேராசிரியர் கியாக்கா குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here