இலங்கை அரசு தமிழர்களிடமே பொறுப்புகூற வேண்டும்; சர்வதேசத்திடமல்ல; புலிகள் சர்வதேசத்திற்காக போராடவில்லை: ஜனநாயக போராளிகள்!

கொன்றொழிக்கப்பட்ட தமிழினத்தின் தியாகங்களில் ஏறி நின்று பிராந்திய சர்வதேச சக்திகள் செயலாற்ற முனைவதை நாம் நிராகரிக்கின்றோம். இலங்கை அரசு பொறுப்புக் கூறவேண்டியது இலங்கை தமிழர்களிடமே தவிர சர்வதேசத்திடமல்ல என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் க.துளசி தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழர்கள் இலங்கையில் ஆயுதரீதியாக பலம்பெற்றிருந்தபோது இனப்பிரச்சினை தொடர்பாக காத்திரமாக செயலாற்றிய சர்வதேச நாடுகள் 2009 போரின் இறுதியில் இலட்சக்கணக்கான மக்கள் போரவலத்தில் அகப்பட்டு நிர்க்கதிக்குள்ளாகி கொல்லப்படும் போது அர்த்தமுள்ள வகையில் செயற்பட்டு எமது மக்களையாவது பாதுகாப்பாக மீட்டெடுக்கும் வகையில் மனிதாபமான சர்வதேச சட்டங்களை பயன்படுத்தாமல் போனதற்கான காரணிகளை ஐக்கியநாடுகள் சபையும், சர்வதேச நாடுகளும் இப்போதாவது வெளிப்படுத்த வேண்டுமென மிகமோசமான போரவலத்தைச் சந்தித்தவர்கள் என்கின்ற உரித்துடன் கேட்டு நிற்கின்றோம்.

இலங்கையின் சுதந்திரத்திற்கு பின்னர் இலங்கை அரசிற்கும் தமிழ் மக்களுக்குமிடையில் முகிழ்ந்த இனமுறுகலை தமது பிராந்திய நலன் சார்ந்த பயன்படுத்திய பிராந்திய சக்திகள் விடுதலை உணர்வோடு தமது புத்தகப்பைகளை வீசி எறிந்துவிட்டு புறப்பட்ட இளையோர்களை பிரிவினைக்கு உட்படுத்தி பல்வேறு குழுக்களாக்கி அவர்களுக்கு சிறியரக ஆயுதப் பயிற்சிகளை வழங்கி அனுப்பிவைத்தது. அதுவும் வழங்கப்பட்ட ஆயுதப் பயிற்சிகளினால் சிறுசிறு கிளர்சிகளை ஏற்படுத்தலாமே தவிர ஒரு நாட்டினை பிளவுபடுத்தி இன்னொரு நாட்டினை உருவாக்கும் வல்லமைகொண்ட பயிற்சிகளோ ஆயுதங்களோ வழங்கப்படவில்லை. இதன் நிலைமைகளை தமிழர்கள் உணரத்தலைப்பட்டபோது காலம் மிகமோசமாக கடந்திருந்தது.

எமது கைகளில் யார் ஆயுதத்தை வழங்கினார்களோ அவர்களாலேயே நாம் அழிக்கப்படுவோம் என்பதை உணர்ந்த தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு தம்மை சுயாதீனமான வல்லமை உள்ள விடுதலை அமைப்பாக வளர்த்தெடுத்தது. அதுவரை பிராந்திய வலயத்துக்குள் முடக்கப்பட்ட தமிழ்மக்களது இனப்பிரச்சினை தமிழ்மக்களது அளப்பெரிய தியாகங்களினால் சர்வதேச மயப்படுத்தப்பட்டது.

தனது பிராந்திய நலன்களை மட்டுமே அடிப்படையாக்கொண்டு சுயநலமாக செயலாற்றிய பிராந்திய அரசு தமிழர்களது பிணக்கு இலங்கை மீதான ஆதிக்கம் தன்கையைமீறி சென்றுவிட்டதை உணர்ந்து அதற்கெதிராக சதுரங்கமாடத் தொடங்கியது அவர்களது கபட ஆட்டம் இற்றைவரை தனது நண்பன் யார்? எதிரி யார்? என்று தெரியாமல் தொடர்கிறது.

சர்வதேச மயப்படுத்தப்பட்ட தமிழர்களது உரிமைப் போராட்டம் கூட ஒடுக்கப்படுகின்ற ஓர் பூர்வீக இனக்குடிகளின் உரிமைப் போராட்டமாக வகைப்படுத்தப்படாமல் ஐக்கிய நாடுகளின் சர்வதேச நியமன சட்டவரைபுகளின் படி ஆராயப்படாமல் பூகோள அரசியல் பரப்புக்குள் அகப்பட்டு சிந்தப்பட்ட இரத்தங்களுக்கும் அழிக்கப்பட்ட உயிர்களுக்கும் நியாயபூர்வமான எவ்வித அணுகுமுறைகளும் இன்றி தூக்கி வீசப்பட்டதே வரலாறு.

ஏறச்சொன்னால் எருதுக்கு கோவம் இறங்கச்சொன்னால் முடவனுக்கு கோவம் என்பது போல தமிழ் அரசியல் தலைவர்களினால் கையாளப்பட்ட பிராந்திய சர்வதேச கையாளுகைகள் அனைத்தும் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் உச்சத்தில் கூட பயனளிக்கவில்லை என்பதே ஜதார்த்தம்.

இச்சூழமைவில் தோல்வியில் இருந்து நாம் கற்றுக்கொள்ள போகின்றோமா? அல்லது மீண்டும் மீண்டும் தோல்வி அடைவதை கற்றுகொள்ளப் போகின்றோமா? என்பதே கேள்வி.

1952 ஆண்டு நடைபெற்ற இரண்டாவது பாராளுமன்ற தேர்தலில் சமஷ்டிக் கோரிக்கையை வைத்து தமிழரசுக் கட்சி போட்டியிட்டிருந்தது. அதுவே சுதந்திர இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சியின் ஆரம்பப் புள்ளியாகும். கடந்த அறுபத்தி எட்டு வருடகால முயற்சிகள் எந்த பலனையும் தரவில்லை. இனப்பிரச்சினை காலத்திற்குக் காலம் புதிய பரிணாமம் பெற்று வளர்ந்திருக்கிறதே தவிர அதனை வலு இழக்கச் செய்யும் சாத்தியமான முனைப்புகளை தமிழர் தரப்பு காட்டவில்லை என்பதும் நிஜம்.

சர்வதேசம் கை கொடுக்காவிட்டால் இனப்பிரச்சனைக்கு தீர்வு இல்லையா? இருக்கிறது அதன் அளவுகோள் என்ன அதனை எவ்வாறு சாத்தியமாக்குவது எவ்வகையில் சென்றடைவது. இவை அனைத்துக்கும் இருபதாவது திருத்தம் எவ்வகையில் வலுச்சேர்த்திருக்கிறது. என்பதனை சட்ட மேதைகளுடன் விவாதிக்காமல் எமது மக்களுடன் பேசுங்கள். அவர்களுக்கு தெரியும் சாத்தியமானது எது என்று எமக்கான தீர்வு எமக்குள் உருவாகாதவரை வலுவற்ற இனக்குழுமமாகவே நோக்கப்படுவோம். இலங்கை அரசு பொறுப்புக்கூறவேண்டியது இலங்கை தமிழர்களிடமே தவிர சர்வதேசத்திடமல்ல.

தமிழர்களது நியாய பூர்வமான விடுதலைப் போராட்டத்தை சர்வதேச சக்திகளோடு சேர்ந்து முடிவுக்கு கொண்டுவந்த ஆட்சியாளர்களே தற்போதும் சர்வ வல்லைமையோடும் அரியனை ஏறியிருக்கிறார்கள். அந்த சர்வ வல்லமை பெற்ற தரப்பினராலேயே இலங்கையில் சுய உரித்தோடு சமதர்மமாக வாழத்தகுதியான தீர்வினை வழங்க முயற்சிக்க வேண்டும்.

மீளவும் கொன்றொழிக்கப்பட்ட தமிழினத்தின் தியாகங்களில் ஏறி நின்று பிராந்திய சர்வதேச சக்திகள் செயலாற்ற முனைவதை நாம் நிராகரிக்கின்றோம். நாங்கள் அகிம்சை ரீதியாகவும் ஆயுதமேந்தியும் போரிட்டது எமது மக்களுக்காகவே தவிர பிராந்திய சர்வதேச நலன்களுக்காக அல்ல என்பதை தமிழ் அரசியல் தலைமைகள் புரிந்து கொண்டு செயலாற்ற வேண்டும். இந்த தருணத்தில் இதனை செய்ய தவறுவோமாக இருந்தால். எதிர்காலத்தில் தமிழர்களுக்கு பிரச்சனைகள் இருக்கும் எதிர்கொள்ள தமிழர்கள் இருக்க மாட்டார்கள் என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here