காலி, கொக்கல பகுதியில் உள்ள பிராண்டிக்ஸ் ஆடை தொழிற்சாலையில் பணியாற்றும் யுவதியொருவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார். காலி மாவட்ட பிராந்திய தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் வேணுரா கே.சிங்கராச்சி இதனை தெரிவித்தார்.
ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்த இரண்டு யுவதிகள் காய்ச்சல், இருமல், சளி போன்ற அறிகுறிகளுடன் காணப்பட்டதையடுத்து, சிகிச்சைக்காக தொழிற்சாலையின் மருத்துவ பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
பி.சி.ஆர் சோதனையில் யுவதி ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர் நேற்று இரவு (29) கொரோனா சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார். மற்ற யுவதிக்கு இரண்டாவது பிசிஆர் சோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.
காலி, ரத்கம பகுதியில் வசிக்கும் இரண்டு யுவதிகளும் பிராண்டிக்ஸ் நிறுவனத்தின் பேருந்திலேயே பயணம் செய்கிறார்கள்.
அவர்களுடன் சுமார் 75-100 ஊழியர்கள் பேருந்தில் பயணித்திருப்பது தெரிய வந்துள்ளது.
யுவதிகளின் நெருங்கிய கூட்டாளிகள் உட்பட 62 பேர் நேற்று இரவு பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.
தொழிற்சாலையில் பி.சி.ஆர் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட 62 ஊழியர்கள் பொது சுகாதார பரிசோதகர்களின் மேற்பார்வையின் கீழ் சிறப்பு பொலிஸ் பாதுகாப்பின் கீழ் தங்கள் வீடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், விசாரணை அறிக்கைகள் வரும் வரை தனிமைப்படுத்தப்பட்டதாகவும் வைத்தியர் வேணுரா கே. சிங்கராச்சி தெரிவித்தார்.
கொக்கலவில் உள்ள இந்த பிராண்டிக்ஸ் தொழிற்சாலையில் கிட்டத்தட்ட 1500 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.