விற்க முடியாமல் தேங்கியுள்ள 50,000 கிலோ மீன்கள்; ஏற்றுமதி பாதிப்பு: மீன்பிடி தொழில் பெருவீழ்ச்சி!

பேலியகொட மீன்சந்தையை தொடர்ந்து நாட்டிலுள்ள மீன்பிடி துறைமுகங்களையும் உள்ளடக்கியதாக உருவாகியுள்ள புதிய கொத்தணி அலையினால் நாட்டிலுள்ள பல மீன் சந்தைகள் மூடப்பட்டுள்ளன.

நாட்டின் பிரதான மீன் சந்தையில் உருவான கொரோனா அலை நாட்டின் அனைத்து பகுதி சந்தைகளிற்கும் விஸ்பரூபம் எடுத்துள்ளது. இதனால் சுமார் 50,000 கிலோ மீன் விற்கப்பட முடியாமல் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த வெள்ளிக்கிழமை முதல் வடக்கு மற்றும் கிழக்கு உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பெரும்பாலான விநியோகத்தர்கள், கொழும்புக்கு கடல் உணவுகளை அனுப்புவதை நிறுத்தியதன் விளைவாக ஏற்றுமதி சந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

விற்கப்படாத மீன்களை சுகாதார வழிகாட்டுதலின் கீழ் நுகர்வோர் மத்தியில் எவ்வாறு விநியோகிக்க முடியும் என்று விவாதிக்க சுகாதார அமைச்சும் மீன்வள அதிகாரிகளும் நேற்று சந்தித்தனர். ஆனால் மீன் சந்தைகள் மூடப்பட்டதும் விற்பனையாளர்கள் வணிகத்திலிருந்து விலகியதும், களஞ்சியத்திலுள்ள மீன்களை விற்பனை செய்வதில் அதிகாரிகள் சிரமங்களை எதிர்கொண்டனர்.

பேருவளை, திருகோணமலை, மட்டக்களப்பு, கல்பிட்டி, புத்தளம், மன்னார் மற்றும் சிலாபம் ஆகிய இடங்களில் உள்ள முக்கிய மீன்பிடித் துறைமுகங்கள் மற்றும் சந்தைகள் மூடப்பட்டன.

நுகேகொட, ஹோமாகம, பாணந்துறை, ஹட்டன், தலவாக்கலை, நீர்கொழும்பு, குருநாகல் மற்றும் தெஹிவளை போன்ற பகுதிகளில் உள்ள மீன் சந்தைகளும் மூடப்பட்டுள்ளன.

இதுவரை பாதிக்கப்பட்டுள்ள மீன் விற்பனையாளர்களில் பெரும்பாலோர் மொத்த மற்றும் சில்லறை விற்பனை நிலையங்களைக் கொண்ட பேலியகொட சந்தையுடன் தொடர்புகளைக் கொண்டுள்ளனர். பேலியகொட சந்தை மற்றும் பிற மீன் சந்தைகளில் இருந்து 800 க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

500,000 கிலோவிற்கும் அதிகமான மீன்களை ஏற்றிச் செல்லும் ஐம்பத்து மூன்று பலநாள் மீன்பிடி றோலர்கள் காலி மற்றும் பேருவளை துறைமுகங்களில் நங்கூரமிட்டுள்ளன. மீனவர்கள் கப்பலில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கலங்களிலுள்ள மீன்களையும் இறக்க முடியவில்லை.

இதேவேளை, கடந்த நான்கு நாட்களில் மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டதால், ஏற்றுமதியையும் பாதித்துள்ளது.

ஜப்பானிய மற்றும் ஐரோப்பிய சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் நண்டுகள், இறால்களின் விநியோகத்தில் ஏற்பட்ட பாதிப்பு, ஏற்றுமதியை கடுமையாக பாதித்தள்ளது.

கடந்த மார்ச் முதல், ஆடை ஏற்றுமதி பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது கடல் உணவு ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டுள்ளது, நாட்டின் ஏற்றுமதி பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு இலங்கை கடல் உணவு ஏற்றுமதியிலிருந்து 262 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டியது.

மன்னார், முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணத்திலிருந்து தினமும் 200 லொறிகளில் பேலியகொட மற்றும் ஏற்றுமதி நோக்கத்திற்காக மீன்கள் கொண்டு செல்லப்பட்டன. அவை அனைத்தும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here