முல்லைத்தீவில் 8 கிராமங்களை மகாவலி அதிகாரசபையிடம் ஒப்படைக்க உத்தரவு: தமிழ் கட்சிகள் கூட்டாக சமல் ராஜபக்சவை சந்தித்தனர்!

தமிழ் தேசிய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கும், மகாவலி அபிவிருத்தி அமைச்சர் சமல் ராஜபக்சவிற்குமிடையிலான உயர்மட்ட கலந்துரையாடல் இன்று (23) இடம்பெற்று வருகிறது.

நாடாளுமன்ற கட்டட தொகுதி வளாகத்திற்குள் இந்த சந்திப்பு நடக்கிறது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன், கோவிந்தம் கருணாகரன், இரா.சாணக்கியன், தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செ.கஜேந்திரன், அரச தரப்பில் வியாழேந்திரன், சுரேன் ராகவன் ஆகியோர் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

முல்லைத்தீவில் செம்மலை தொடக்கம் கொக்கிளாய் வரையான தமிழ் மக்களின் 8 பூர்வீக கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகளை கரைத்துரை பற்று பிரதேசசெயலகத்தின் ஆளுகையிலிருந்து மகாவலி அதிகாரசபையிடம் ஒப்படைக்க இரண்டு வாரங்களின் முன் உத்தரவிடப்பட்டிருந்தது. இது தொடர்பிலும், மட்டக்களப்பில் மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்பு தொடர்பிலும் இந்த கலந்துரையாடல் நடந்து வருகிறது.

பின்னணி

முல்லைத்தீவில் கொக்குளாய் தொடக்கம் செம்மலை வரையான தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை முழுமையாக மகாவலி அதிகாரசபையிடம் கையளிக்கும்படி, கரைத்துரைபற்று பிரதேச செயலாளரிற்கு சில தினங்களின் முன்னர் ஜனாதிபதி செயலகத்திலிருந்து கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, தமிழர் மரபுரிமை பேரவை உள்ளிட்ட தன்னார்வலர்கள் இணைந்து இது தொடர்பான கலந்துரையாடல்களை நடத்தியிருந்தனர். யாழில் நடந்த கலந்துரையாடலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாவை சேனாதிராசா, எம்.பிக்கள் த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், சாள்ஸ் நிர்மலநாதன், தமழ் தேசிய மக்கள் முன்னணியின் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செ.கஜேந்திரன், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் சுரேஷ் பிரேமச்சந்திரன், சிவாஜிலிங்கம், சிறிகாந்தா உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், மத தலைவர்கள், சிவில் செயற்பாட்டாளர்கள் இதில் கலந்து கொண்டனர்.

இரண்டு வாரங்களின் முன்பாக யாழில் நடந்த இந்த கலந்துரையாடலின் விபரங்கள் வெளியில் கசிந்து சர்ச்சையை ஏற்படுத்தாமல், பேச்சுமூலம் இந்த விவகாரத்தை கையாள கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருந்தது. இதன்படி, ஊடகங்களும் அதற்கு ஒத்துழைத்து அது குறித்த செய்திகளை வெளியிடுவதை தவிர்த்தன. அரச தரப்பினரை சந்தித்து இந்த விவகாரங்களை ஆராய்வதென எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் இந்த சந்திப்பு நடந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here